ஒரு சதைக்குதறல்
ஒரு வெடிச்சிதறல்
பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்)

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


அவன் அப்பா அவனிடம் சொல்கிறார். மகனே, உள்ளே போகச்சில நான் அழ ஆரம்பித்தால், பயந்துறாதே. நீ பாட்டுக்கு மேற்கொண்டு போ. அதெல்லாம் என் தனிப்பட்ட சமாச்சாரம். அதுல உனக்கு பிராப்தி எதுவும் இல்லை. இங்கே வர்றதே என் நெஞ்சை அடைச்சிருது. ஆனால் ரொம்ப நாளா உனக்கு நான் தாக்காட்டி வந்த விஷயத்தை, இன்னிக்கு செஞ்சிறலாம்னு முடிவு பண்ணிவிட்டேன். இனியும் அதைத் தவிர்ப்பதோ, தள்ளிப் போடுவதோ வேண்டாம், போர்ஜா.
                அது வேறொரு மார்ச். மதியம் மழை வரலாம்னாங்க. - உங்களுக்கு சகிக்க முடியாதுன்னா நாம உள்ளவரை போக வேணாம் அப்பா. எல்லாம் அதான் நீங்களே சொல்லிட்டீங்க. ரயில் நிலையத்தை வெளிய இருந்தே பார்ப்போம். போதும்.
                சிவப்பு பெஞ்சுகள். தூணில் நிறுத்தப்பட்ட மேல்கூரை. அதன் ஒரு தூணில் கடிகாரம். நடைமேடை முன்னிலும் பிரகாசமாய் இப்போது அழகுபடுத்தப் பட்டிருக்கிறது போல. அல்கலா நோக்கிப் போகிற ரயில் உள் வருகிறது. ஜனங்கள் இறங்குவதும், ஏறுவதும். கையில் சின்ன நாய்க்குட்டி யேந்தி மாது ஒருத்தி. நாய்க்குட்டியே கதகதப்புக்கு உறை மாட்டியிருக்கிறது. ரயில் கதவுகள் மூடுமுன் காதில்
இசைப்புனல் மாட்டிய விடலை ஒன்று உள்ளே பாய்கிறது.
                எல்லாரும் உயிர்த்துடிப்பான இயக்கத்தில். அதில் என்ன சந்தேகம். அவர்கள் நடமாட்டம். சுவாசித்தல்... எல்லாமே தான் இருக்கிறது. ரயில் கிளம்பிவிட்டது. வேகம் பிடிக்கிறது ரயில். தூரம் போய் ரயில் மறைகிறது. ரயில்பாதையில் தலைமேல் மின் கம்பிகள். கீழே தண்டவாளப் பளபள. ரயில் போனபின் விடுபட்ட ஆகாயம் இப்போது தெரிந்தது. மேகங்கள்.
                திரும்ப இங்க வருகிறபோது எனக்கு என்ன ஆகிறது, எனக்குச் சொல்ல வரவில்லைடா, என்றார் அப்பா. நடைமேடையில் அங்கே அப்போது அப்பாவும் மகனும் மாத்திரமே. மாடப்புறா ஒன்று கொறிக்க இரை தேடி, தலையை வெடுக் வெடுக்கென உதறியபடி திரிகிறது. புறாக்கள் எல்லாமே ஒரேமாதிரி அலட்டிக் கொள்கின்றன.
                ... தோ அங்கதான் அது நடந்தது. ரயில் ரயிலாப் போகிறாப் போல பல வருடங்கள் கடந்துவிட்டன. ஒண்ணு. அடுத்தது. மூணாவது. அப்பாவின் தொய்ந்து தொங்கும் முழுக்கை காட்டிய இடத்தை மகன் நோட்டமிடுகிறான். அந்த சிவப்பு குப்பைத்தொட்டி, பார்த்தியா? புறா ஒன்று அதன் பின்பக்கமாய்ப் போகிறது. கிட்டத்தட்ட அதே இடத்தில் தான்... நான்... தூக்கி வீசப்பட்டேன். அந்தக் குப்பைத் தொட்டி அப்ப இருந்ததா, நினைவில்லை. ம். எப்பிடி ரயிலுக்கு வெளிய வந்தீங்கன்னு என்னைக் கேட்காதே. எனக்கே தெரியாது. நான் பறந்து வந்திருக்கலாம். எதோ கொதிக்கிறாப் போல முகத்தில் உணர்வு தட்டியது. நான் தரையில் அப்படியே என்னை இழுத்துக்கிட்டு ஊர்கிறேன். சதை எதோ கருகுகிற நெடி. அந்த வெக்கை என் தோளுக்கு இடம் பெயர்கிறது. அப்படியே... நினைச்சிப்பாரு, இன்னுமாய் அது கீழ வருது. நெஞ்சில் இருந்துன்னு நினைச்சேன். ஆனால் அது கைன்னு தான் இருக்கணும். அப்டியே என் தொடையிடுக்குக்கு அந்த வலியும் வெக்கையும் இறங்கிய கணம்... ஙொம்மாள, சோலியே முடிஞ்சிட்டதுன்னு நினைச்சேன். ரமோன்**... அப்படியே குழி விழுந்தாப்ல. கதையே முடிஞ்சிட்டாப் போல. (**கடவுளே.)
                அந்த அமைதி. புகைப்படலம். அது அமைதி கூட அல்ல. காது கிழிந்து கேட்கும் திறனை இழந்துட்டாப் போல. ஒரு வழியா, சனங்கள் உதவிக்கு எங்களை நோக்கி ஓடி வருகிறார்கள். கால் நல்லா இருக்கிறவர்கள் எங்களை விட்டு ஓட்டமெடுக்கிறார்கள். கண் நல்லா இருக்கிறவர்களும், உடம்பு சேதாரம் இல்லாமல் இருக்கிறவர்களும் ஓட்டமெடுக்கிறார்கள். ரொம்ப அதிர்ஷடம் பண்ணியவர்கள் அப்பா அவர்கள்... என்றார் அப்பா. சிலாட்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வழிகிறது.
                காலையில் மணி இன்னும் எட்டு ஆகவில்லை. தபாருடா, இப்ப்பிடி தலையை லேசா உசத்தி, அந்த வேக்காடு எங்க போச்சின்னு ஒரு நோட்டம் பார்க்கிறேன். இப்ப உடம்பில் ஒரு துடிப்பு, நடுக்கம் வந்தாப் போலிருந்தது. அதிகரித்துக்கொண்டே வரும் அந்த படபடப்பு. உடம்பில் ஓட்டை எதுவும் ஏற்படவில்லை. என்ன பார்த்தேன்னால்... என் கையில் பாதி... முழங்கைக்குக் கீழே... ஒண்ணுமே இல்லை. வெறும் ரத்த ஒழுகலில் நனைந்து துணிக் கிழிசல். உடனே உங்கம்மா ஞாபகம் தான் வந்தது. அப்பறம் உன் ஞாபகம்டா மகனே. ரொம்ப சின்ன வயசு உனக்கு. தொட்டிலில் கிடந்தாய் நீ. நல்லுறக்கத்தில் நீ இருந்தாய் அப்போது... உன்னை வாரியணைத்துக் கொள்ள என்னால் எப்படி முடியும்? போய்விட்டதே கை.
>>          
கை. போர்வைக்குள் இருந்து வெளிநீட்டித் தெரிந்தது கை மாத்திரமே. பளபளவென சிவப்பு நகப்பூச்சுடன் அழகான கை. விரலில் மரகத மோதிரம். அந்தப்பெண்ணை தரையிறக்கும் வரை அவளிடம் அசைவு இருந்தது. நம்ம ரோமானியன் ஆள் அவளை சட்டைசெய்யவில்லை. அவங்கதையே இங்க பெரிய கதையாய் இருக்கிறது. போலிஸ்காரன் சொன்னபடி கேட்டான் அவன். காயம் பட்ட மத்தாட்களுடன் அநன் நடந்து வோயிஸ் டி வெலார்தி விளையாட்டகத்துக்குப் போனான். ஸ்பானிய மொழி உங்களுக்குப் புரியுங்களா? ம், என்றான். சரி. போயி அந்தச் சுவர்ப்பக்கமா நில்லுங்கள். அங்கிருந்து நகரவேண்டாம். கூடிய சீக்கிரம் கவனிப்பார்கள். விளங்குதுங்களா?
                ஷூக்கள் எங்கேயோ சிதறியிருக்க வேண்டும். வெறும் கால்களாய் இருந்தன. காயத்தில் போட்ட கட்டுத்துணியை இழுத்து தலையில் இருந்து வழியும் ரத்தத்தில் அமுக்கி ஒழுகலைக் குறைக்க முயன்றான் அவன். ரெண்டு நிமிடத்தில், இரு மருத்துவ ஊழியர்கள் வந்து, அவனுக்கு ஒரு ரெண்டுமீட்டர் தள்ளி அந்தப்பெண்ணை இறக்கி வைத்தார்கள். அவள் முகம் தெரியாமல் கூந்தல் விரவிக்கிடந்தது. முதலில் அவளிடம் சற்றே அசைவு தெரிந்தது. கால்கள். முதுகு. கொஞ்சமே கொஞ்சம் துடித்தபடி யிருந்தன. லேசான பூகம்ப அதிர்வு போல. மெல்ல அடங்கும் அதிர்வுகள். அசைவு அப்படியே நின்றது. அதன்பின் தான் அவளைக் கவனிக்க வந்தார்கள். மெல்ல அவளை அவர்கள் புரட்டினார்கள். அசைத்துப் பார்த்தார்கள். ம்ஹும். ஒண்ணும் பயனில்லை. சிறிது நேரத்தில் அவளை போர்வையில் மூடிவிட்டார்கள். ஒரு கை, வெளியே நீட்டிக்கிடந்தது. மெலிவான அழகான கை. இனி அது அசையவே போவதில்லை. அவர்கள் அடுத்த உடலை கவனிக்கப் போய்விட்டார்கள்.
                மெல்ல சுவரில் சிறிது சரிந்தான் ரோமானியன். கண்கள் செருகின. ஐய நான் தூங்கிறப்டாது, என அவன் போராடினான். ஆனால் கண்கள் விருட் விருட்டென உள்ளிழுத்தன. ...ழுத்தன. ...தன... ஒரு அலைபேசியின் சுதாரித்த குரலெடுப்பு அவனை உலுக்கியது. என்னவோ உற்சாக மெட்டு. சுற்றிலும் தேடி, ஒரு ரெண்டுமீட்டர் தள்ளியிருந்து... போர்வைக்கு உள்ளேயிருந்து.
                உச்சஸ்தாயி உற்சாக மெட்டு. நிற்பதாயில்லை. இங்கே அவன் அலைபேசி அமைதிகாத்தது. நடந்ததை வீட்டுக்கு அவன் ஏற்கனவே தெரியப்படுத்தி யிருந்தான். மெட்டு அடங்காமல் வேண்டுகோளை மன்றாடி முன் வைத்தபடி - சுற்றிலும் அத்தனை களேபரம். படுகாயத்துடன் உடல்கள் சிதறிக் கிடந்தன - அவன் போர்வைக்கு நகர்ந்தான். போர்வையை விலக்கினான். உருக்குலைந்த கோட் பையில் பாதி எட்டிப்பார்த்தபடி அலைபேசி. யாரோ மூதாட்டி எதோ பாஷை பேசுகிறாள். போலிஷ்? ரஷ்யன்? தன்னால் அவளுக்கு நிலைமையைப் புரியவைக்க முடியவில்லை என்பதை அவன் உணர்ந்தான். அந்த மூதாட்டியின் குரலில் கலவரம். அவள் திரும்பத் திரும்ப என்னவோ - ஒருவேளை அது ஒரு பெயராக... இந்தப் பெண்ணின்... இருக்கலாம். பாம் அம்மா. ரயிலில் குண்டு. வெடிகுண்டு... புரியுதுங்களா? அப்படியே அலைபேசியை அணைத்தான். திரும்ப தான் முன்பு நிற்கவைக்கப் பட்டிருந்த இடத்துக்கு நகர்ந்தான், சுவருக்குப் பக்கமாக. சில விநாடிகள் கழித்து திரும்ப அந்த அலைபேசி ஒலித்தது. அவன் அசையவில்லை. அடி நீ வேற, எம் பொழப்பே பெரும் பாடாயிருக்குது. உற்சாக மெட்டு அதுபாட்டுக்கு அடித்துக் கொண்டே யிருந்தது. நாத ஒலி. மூடிய போர்வை.
>>          
போர்வை பத்தி அவன் ஏன் முன்னே யோசிக்கவில்லை? வாகனத்தில் பெட்டிக்குள் வைத்திருந்தான். முன்பே அதை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனை அத்தனைக்கு அவசரப்படுத்தி விட்டார்கள். வேலைக்கு என்று காலை வண்டி எடுத்த ஜோரில் பரபரப்பு.
                அவெந்தா என்ட்ரிவியாசில் ஒரு மத்தியப் பாதுகாவலன் அவனை நிறுத்தினான். ஐயோ. யுத்த களமா இது? களேபரமாய்க் கிடந்தது இடம். செய்தி கூட இன்னும் வானொலியில் வெளியிடப்படவில்லை. குண்டுவெடிப்பு என்று எதுவும் காதில் விழவில்லை யானாலும் புகை. சனங்கள் ரத்தத்தில் குளித்தபடி. இதையே கவனிக்காமல், 24 எண் பேருந்தைப் பிடிக்க ஓடும், காயம் பட்ட ஒரு கூட்டம். மணி எட்டு அஞ்சு, எட்டு பத்து இருக்கலாம். ஹா. மறக்க முடியுமா இந்த நிமிடத்தை. அவன் திடுக்கிடவில்லை. சுதாரித்தபடி சூழலை ஆராய்ந்தான். பஸ் நிறுத்த குடையடியில் காயம்பட்டவர்கள் அப்பிக்கிடந்தார்கள். பார்க்கவே திரும்ப உள்ப் பதட்டமாய் இருந்தது. அட சனியனே. என்ன காட்சி இது. அப்படியே தாக்குப் பிடிச்சி நில்லுங்க. எலேய் செத்துறாதீங்க. இங்க, என் கண் முன்னால... வேண்டாம் அது. இதோ உதவி. நாங்கள் வந்துருவோம். வழியில்வந்த காரின் கதவை அவர்களே திறந்து, ஒருத்தனை உள்ளே செலுத்தினார்கள். சிக்கிரம் கிளம்பு. கதவு சாத் - ச். பாவம். 18 20 வயசுக் குழந்தையப்பா. பின் இருக்கையில் கிடத்தப்பட்டது. போலிஸ் சொன்னான். நேரா ஆஸ்பத்திரி, ஐயா. அக்டோபர், 12. அந்த ஆஸ்பத்திரிக்கே சவாரிவிட்டான். அவன் கண்ட முதல் அவசரவூர்தி... எதிர்ப்புறமாய் விரைகிறது.
                அவன் கைக்குட்டை வைத்துக்கொள்வதே கிடையாது. அவன் பெண்டாட்டிக்கு கைக்குட்டைப் பழக்கமே பிடிக்கவில்லை. அது ஆரோக்கியமில்லாத பழக்கம், என்றாள் அவள். இப்பவுந்தான் சொல்லிட்டிருக்கிறாள். அதுக்கு, க்ளினெக்ஸ் பரவாயில்லை. துடைச்சி வீசியெறிஞ்சிறலாம் இல்லே? கண்ட கலிஜையும் பைக்குள்ள சுமந்து திரிய வேண்டியது இல்லையில்லையா? சலிச்சிக்காமல் குத்திப் பேசாமல் அதுக்குப பேசவே தெரியாது. லங்கிணி. அவசரத்தைக் காட்ட - கைக்குட்டைஇல்லைகந்தல் ஒன்றை வெளியே படபடக்கிறாப்போல கட்டினான். வழி விடுங்க. எனக்கு அவசரம். கொண்டை விளக்கு இல்லை. வட்டார காவல்காரன்... அவனுக்கு குண்டுவெடிப்பு பற்றி, சேதி எட்டியிருந்தது... இன்னும் வேகாமாப் போ என தூண்டினான்.
                அடிபட்ட அந்தச் சின்னப்பொண்ணு. வெளிக்கண்ணாடி மூலம் பின்புறம், குழந்தையைப் பார்க்க முடியவில்லை. பாவம் அது. ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு முனகல் இல்லை. அமைதியா இரு அம்மா. தோ ஒற்ற நொடி. நாம ஆஸ்பத்திரியை எட்டிறலாம். அக்டோபர் 12ல் நல்ல மருத்துவர்கள் இருக்காங்க. என் பெண்டாட்டி அங்கவெச்சிதான் பெண் குழந்தை பெத்தெடுத்தாள். கச்சிதமா இருக்கும் அந்த ஆஸ்பத்திரி. துப்புரவா, சுதாரிப்பா இருப்பார்கள். நீ அமைதியா இரு பெண்ணே. அது ஒரு கப்சா. அவன் பெண்டாட்டி பிரசவித்தது இங்கே அல்ல. அது ஃபூவென்லாப்ரதா மருத்துவமனை. அட அதைப்பத்தி என்ன. நான் அந்தப்பெண்ணுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
                என்னவோ கருகும் வாசனை. முதலாளி அறிந்தால்... என்னடா இத்தனை ரத்தத்துடன் பின் இருக்கையை நாசமாக்கி... பாப்பா, உனக்கு புண்ணியம். வாந்தி எடுக்காம, வந்தாலும் அடக்கிக்க. சரி. அடக்க முடியல்லியா. இருக்கைல வேணாம். தரைல குனிஞ்சி வாந்தியெடுத்திரு. பரவால்ல. என்ன பண்றது... விடாமல் பேசியபடியே வந்தேன்.
                எப்பவாச்சிம், வித்தியாசமான நபர்கள் அவன் வண்டியில் ஏறுகிறது உண்டு. உம்மணாமூஞ்சிகள். கீழ இறங்கற வரையில் ஒருவார்த்தை பேசாது. சில ராத்திரி வேலைகளில்... ஏடாகூடங்கள் நிகழ்வதும் நடந்திருக்கிறது. அவன் பெண்டாட்டி, அறிவுரை வள்ளல், உஷாரா இருக்கணும் ராத்திரிகளில். யாராவது உங்களைக் களவாட முயன்றால்... இருக்கறதை வாய்பேசாமல் குடுத்துருங்க. எதிர்க்கறது, முரண்டு பிடிக்கறது... வேணாம். ஆனால் இந்தச் சூழல் வேறுவிதம். இந்தாள்... முனகவே இல்லை. அமுக்குணி. ஐய ஒருவேளை காருக்குள்ள ஏத்தினாங்களே அப்பவே கதை முடிஞ்சிருக்குமா? ஆஸ்பத்திரியின் சிவப்பு முகப்பு தூரத்தில் கண்ணில் பட்ட கணம் பேச்சை நிறுத்திவிட்டேன்... இதுவரை வழியெல்லாம் என்னென்னவோ பேசியபடியே வந்திருந்தேன். காயம்பட்ட பாப்பாவை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வந்து பெற்றுக்கொண்டார்கள். இறந்துகொண்டிருக்கும் குழந்தை... இறந்திருந்தது அது. அதனிடமிருந்து சதை கருகிய நெடி எழும்பிக்கொண்டிருந்தது. அதுவரை எனக்கு இது உணர்வுதட்டவில்லை. வழிய அடைக்காதே. மத்த வண்டிங்க வரும் இல்லே? அவசர ஊர்தி ஒலிகள் இன்னும் இன்னுமாய் அதிகரித்து கிட்டே அருகே நெருங்கி வந்தன.
                அவன் நிதானித்தான். முதல் வேலை, மனைவியை எழுப்பினான். டி.வி. பார்... சேதி பார்த்தியா? என்ன பண்ணவேண்டும்? பயப்படாதே. தைரியமாய் முதலாளியைக் கூப்பிடு. அவர் நிலைமையைப் புரிஞ்சுக்குவாரு. கட்டாயம். முதலாளியை அழைத்தான். அவசரம் சார். போர்வையை வெளியே எடுக்க நேரம் இல்லாமல் போயிட்டது.. பின் இருக்கையில்... ரொம்ப ரத்தமாயிருக்கிறது. எவ்வளவு ரத்தம் வேலஸ்? வந்து... சார். அங்க யாரும் உட்கார ஏலாது. இல்ல முதலாளி. அது எப்பிடி முடியும்? ஆங்காரப் படாதே வேலஸ். என் பெண்டாட்டி கூடச் சொன்னாள். பேசாமல் வண்டிய இங்க கொண்டாந்துருங்க. நாமளே அதை சுத்தம் பண்ணிக் குடுத்திறலாம்னாள். பொறுமையா பேசுன்றேன்னே... இல்ல பரவால்ல ஐயா. அதை சுத்தம் பண்ற செலவை நான் ஏத்துக்கறேன். அது என் தப்பு ஒண்ணும் இல்லையே. இன்னாலும் பரவால்ல. ஏத்துக்கறேன். விடப்பா. பெரிசா என்னென்னவோ பேசிட்டிருக்கே. டாக்சியை இங்க எடுத்திட்டு வந்திரு. நான் பாத்துக்கறேன். இன்னிக்கு ஊருக்கே சிரமமாய்த்தான் இருக்கப் போகுது. திகைக்கப் போகுது ஊர்.
>>          
ஊர். சனிக்கிழமை காலை. காருக்குள்ளே யிருந்து பார்த்தால்... ஓரளவு ஊர் சகஜமாயிட்டாப் போலத்தான் தெரிந்தது எனக்கு. அத்தனைக்குக் கொடூரமாய் இப்போது எதுவுமே, அடையாளமே இல்லை. அந்தலூசியா நிழல்சாலை வழியாக, தெற்குப்பக்க சடலஅறைக்குப் போகிற வழி அது... அப்பா காரோட்டினார். ரெண்டுபேர் ஓட்டுகிற வேன் ஒன்று சிவப்பு விளக்கு என்று நின்றிருந்தது. எங்கள் கார்க்கண்ணாடி ஏத்திவிட்டிருந்தாலும், அந்த வாகனத்தில் இருந்து கேட்கிறது இசை இரைச்சல். ச். அம்மா சொன்னாள். இப்பல்லாம் அவனவனுக்கு முப்பது வயசிலேயே காது கோளாறாயிருது. எங்களுக்கு தான் இப்படி துர்சம்பவமும் துரதிர்ஷ்டமும் என நினைத்துக் கொண்டோம். தொலைக்காட்சியில், தினசரியில் சேதி தெரிந்த கணம் அப்படி தான் இருந்தது. மத்த சனங்கள் திரும்ப கலகலப்பாய் சிரிக்க, தங்கள் சொந்த சோலிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தார்கள்.
                ஹ்ம். அதான் வாழ்க்கை என நினைக்க வேண்டியிருக்கிறது. என் கூடப் பிறந்தவனேயானாலும் நானும் அவனை கொஞ்சநாளில் மறந்து விடுவேன். முழுசாய் என்றில்லை. முதலில் அவனை மறக்க முடியாமல் தத்தளிப்பேன். அப்புறம்... தானாகவே அவன் உருமங்குவான். இந்த குண்டுவெடிப்பின் நிலைகுலைவு, மணியாக ஆக மெல்ல தூசியடங்கியது போல... மாட்ரிட் மக்கள் இப்போது அதைப்பற்றிப் பேசுகிறதையும் நினைப்பதையும் அடக்கிக் கொண்டு விட்டார்கள்.
                தாத்தா நானும் கூட வருவேன் என அடம் பிடித்தார். வியாழக்கிழமைலேர்ந்து அவர் ஒரே பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருந்தார். தெளிவான உறுதியுடன் அவர் கத்திச் சொன்னது நாங்கள் அவரவர் படுக்கையறையில் இருந்தாலும் கேட்க முடிந்தது. நான் இதை மறக்கவே மாட்டேன். மன்னிக்கவே மாட்டேன். நான் அழப் போவது இல்லை. அந்தக் கேடுகாலிகளுக்காக நான் ஒரு சொட்டு கண்ணீர் விடவும் தயாரில்லை. அவர்கள் .ட்டி.**யா இருந்தால் என்ன, அல் கொய்தாவானால் என்ன? (**.ட்டி.. - 1959ல் துவங்கிய, மேற்கு பைரன்னிஸ் பகுதியை ஸ்பெயினில் இருந்து தனிநாடாகப் பிரிக்க என்று போராடும் தீவிரவாதக் குழு.) அது எந்த எமனாகவும் இருக்கட்டும்.
                எங்களுக்கு அவரவர் துக்கமே பெரிசாய் இருந்தது. அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அப்பா மாத்திரம் போய் மெல்ல தாத்தாவின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அறுதல் படுத்து முகமாக மாத்திரம் அல்ல. இப்ப இப்படி பிரதாபத்துக்கு நேரம் இல்லை, என்கிற குறிப்பு.
                பத்து மணி. சடலஅறை வாசல் முழுசாய் சனங்கள். பிராந்திய போலிஸ் சொன்ன இடத்தில் வண்டியை விட்டுவிட்டோம். வராந்தா வளாகத்தில் கணினிப்பெட்டி. என் சகோதரனின் பெயரை அந்தப் பட்டியலில் தேடினேன். இதோ. அம்மா காட்டினாள். அவனைக் கிடத்தியிருக்கிற அறை எண்ணையும் காட்டினாள். அப்பா வரிசையில் நின்றார். எல்லாரும் துக்க உடையில் வந்திருந்தார்கள். அந்த வரிசையில் நின்று நாம் போக வேண்டிய அறைக்கு வழி விசாரிக்க வேண்டியிருந்தது.
                ஏழெட்டு பேர் விரைந்து பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டுக்கொண்டு வந்து மெல்ல எங்களுக்கு வழிகாட்டி அழைத்தார். வழியெங்கும் ஒரே முட்டு மோதல்கள். தூக்கமில்லாத, அழுதுசிவந்த விழிகள். ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கொள்ளுதல். உரையாடல் சலசலப்பு. கீழ்த்தளத்தில் காயம் பட்டவர்களுக்கும், குடும்பத்தாருக்குமாய் இலவச உணவு என அறிவிப்பு ஒன்று.
                என் சகோதரனின் அறை தெரியவில்லை. செஞ்சிலுவை நபர்களிடம் அப்பா விசாரித்தார். அவர்களே தன்மையாய் எங்களை அழைத்துப் போனார்கள். இதன் நடுவே தாத்தா, அவரது முத்தாரமான த்வனியில் அதே பல்லவியை உரக்க ஆரம்பித்திருந்தார். . நான் அழப் போவது இல்லை. அழ மாட்டேன் நான். ஒரு சொட்டு கண்ணீர் சிந்த மாட்டேன். செஞ்சிலுவை பெண்ணிடமும், பையனிடமும் இதை வலியுறுத்திச் சொன்னார். நான் அழவே மாட்டேன். உடனே அவர்கள், மாடியில் மனநல மருத்துவக் குழு கூட உதவிக்குத் தயாராய் இருக்கிறார்கள், என்றார்கள். நான் அழுகிறது இல்லை. எனக்குன்னு தன்மானம் இல்லையா?... என்றார் தாத்தா அவர்களிடம்.
                ஒரு அறைக் கதவில் ஈக்வதோரா கொடி. இன்னும் தாண்டி சிலி நாட்டுக் கொடி. லத்தின் அமெரிக்க நாடுகளின் நிறையப் பேரை எங்களுக்கு சாயல் தெரிந்தது. உடல்ரீதியாக மாத்திரம் அல்ல. அந்த மெல்லிய அதிராத உச்சரிப்பு. ஒரு பாதிரியார் எங்களுடன் கைகுலுக்க வந்தார். தாத்தா திருமப ஆரம்... ஆனால் அம்மா அவர் கையை அழுத்தி... தயவுசெஞ்சி வேணாம், என வேண்டிக்கொண்டாள். கல்லறை வரை எங்களுடன் வர அவர்கள் முன்வந்தனர். இல்ல பரவால்ல, என்றுவிட்டோம். கீழ் தளத்துக்கும் நாங்கள் போகவில்லை. சாப்பாடே வேண்டியிருக்கவில்லை அப்போது. என்றாலும், நிஜத்தை சொல்கிறேன். எனக்கு பசியாய் தாகமாய்த்தான் இருந்தது.
                திரும்ப காருக்கு வந்தோம். காரை வெளியே எடுக்... விநோதமாய் ஒரு சப்தம் என் பக்கத்தில் இருந்து. ஒருமாதிரி அழுகை ஊளை. ....ளை. யாரோ அழுவதாய் வேடிக்கை காட்டுவது போலிருந்தது முதலில். திகில் படங்களில் வருமே காற்றின் ஓசை, அது மாதிரி. திரும்பிப் பார்த்தால்... தாத்தா முகமே வெளிறி நெளி நெளியாய் வலி. அடக்க மாட்டாத விம்மலுடன் தாத்தா அழ ஆரம்பித்தார். நடுங்கும் குரலில் வீறிட்டார். கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்! கடவுளே இல்லை! கடவுளே இல்லை!
                அவரிடமிருந்து எங்கள் எல்லாருக்குமே அழுகை தொற்றிக்கொண்டது. முதல்நாளை விட இப்ப நாங்கள் ஓரளவு நிதானப்பட்டிருந்தோம், தேறியிருந்தோம் என்றாலும்... சட்டென காருக்குள் வெடித்தது அழுகை. அழுகை கண்ணை மறைத்ததில் அப்பா காரை அப்படியே ஓரங் கட்டிவிட்டார். எங்களால் பேசவே முடியாமல் போனது. உறைந்துபோன ஐந்து நிமிடங்கள்.
>>          
ஐந்து நிமிடங்கள். ரயில் 21431 வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன். அட்டோச்சா ரயில் நிலையம். இவள் கருப்பு பர்க்கா உடை. மைனா. அவள் பச்சைவண்ண ஆட்டுத்தோல் மேல்கோட்டுக்காரி. கிளி. பேசிவைத்துக் கொண்டாப்போல இருவரும் ரயில் நிலையத்தில் சந்திக்கிறார்கள். அது வியாழக்கிழமை. இருவரும் ஒன்றாய் ரயிலேறி அவரவர் அலுவலகம் போகிறார்கள். கிளி உதட்டுச் சாயத்தை ஒழுங்கு செய்தாகிறது. கைப்பைக்குள் இருந்து எடுத்த சின்னக் கண்ணாடியில் ஒப்பனையை சரிபார்த்தாகிறது. மைனா பெரெஸ் ரெவர்த்தே எழுதிய நாவல் ஒன்றின் கடைசி சில பக்கங்களைப் படிக்க மும்முரப்படுகிறாள். இவள் வசிப்பது கெதாஃபேயில். அந்த அவள், கிளி பர்லாவில் வசிக்கிறவள். மைனாவுக்கு ஆந்தெஸ் பகுதிச் சாயல். கிளிக்கு மத்தியதரைக்கடல் பகுதியின் அடையாளங்கள் இருக்கின்றன. அட்டோச்சா நிலையத்தில் காலைரயிலில் ஏறி இறங்கும் மாணவ மகா வெள்ளத்தின் இரு துளிகள் இவர்கள் இருவரும்.
                ஒருத்தருக்கொருத்தர் முகப் பரிச்சயம் உண்டே தவிர பேச்சுப் பரிமாற்றம் இல்லை. ஒரு ஹலோ, கூட இல்லை. அல்கலா டி ஹெனாரஸ்சிலிருந்து வரும் அல்கோபென்தாஸ் வரை போகிற ரயிலையே இருவரும் பிடித்து வேலைக்குப் போகிறார்கள். நியூவோஸ் மினிஸ்டேரியோஸ் நிறுத்தத்தில் ஒருத்தி சுரங்கப்பாதைக்குப் போக, மற்றவள் தெருவில் நடக்கிறாள். அதற்குப் பிறகு அடுத்தநாளைக்கு தான் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவே வாய்க்கிறது. ஆனால் அட்டோச்சாவில் இருவரும் வேறு வேறு வண்டி பிடித்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்கவே முடியாமல் போவதும் உண்டு. அதாவது அப்போது அட்டோச்சா நிலையத்திலேயே கூட அவர்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்காது.
                மார்ச் 11. குளிராய் மங்கலாய்க் கிடந்தது ஊர். என்றாலும் சாதாரணமான ஒரு நாள். ரயில் இன்னும் வரவில்லை என்றாலும் நேரமாகி விட்டதாக எஸ்கலேட்டரில் அரக்க பரக்க ஓடிவரும் இரு சிறார்கள். ஒருவேளை வேடிக்கையாகக் கூட ஓட்டம் காட்டியிருக்கலாம். தண்டவாளப் பாதையில் மூஞ்சூறுச் சத்தம். அல்கலாவில் இருந்து ரயில். தண்டவாளத்தின் மேல் ரயில் ஓடிவந்ததில் மூஞ்சூறு மறைந்தது. ரயில் நிற்க, கதவுகள் திறக்கின்றன. சனங்கள் இறங்குகிறார்கள். ஏறுகிறார்கள். கெதாஃபேக்காரியின் விரல்கள் பெரெஸ் ரெவெர்த்தேயின் நாவலின் புத்தகத்துக்குள். பாதி படித்த பக்கத்தின் அடையாளம் அது. பர்லாக்காரி அவளும் உள்ளே நுழைந்து அருகே வந்தமர்கிறாள்.
                அவர்கள் பேசிக்கொள்வது இல்லை. ஏற்கனவே ஒருத்தரையொருத்தர் ஒரு பார்வைப் பரிமாற்றம், ஆயிற்று. திரும்ப ஒருதரம் அது நிகழாது. ரயில் கதவுகள் சாத்திக்கொள்கிற பீப் பீப் பீப் முன்எச்சரிக்கை ஒலி கேட்க அவர்கள் காதுகள் தயாராயின. ஆனால் அவர்கள் தயாராய் இல்லாத வேறொன்று நடந்தது. டமாரென்று மகா பயங்கர வெடிச் சத்தம். மொத்தப் பெட்டியுமே குலுங்கி அதிர்ந்தது. மின்சாரம் போய் பெட்டியே இருளில் மூழ்கியது.
                கிளி ரயிலைவிட்டு வெளியேறினாள். அவளுக்கு வலதுபுறம் நெடுந் தொடராய் பெட்டிகள்... குபு குபுவென்று கோபுரமாய் எழுகிறது புகை. அவள் பின்பக்கம் இருந்து யாரோ கேட்டார்கள். எதும் வண்டியோட வண்டி மோதிக்கிட்டதோ. சில விநாடியில் மைனா நடைமேடையில் இறங்கிவருகிறாள். அலறல்கள் சன்னமாய் அவளை எட்டின. தரையில் கண்டதுண்டமாய் சிதறிக் கிடந்த உடல்களூடே சில கரு உருவங்களாக பரிதவித்து ஓடும் பிழைத்தவர்கள். தன்னைப்போல பரிசுத்த அன்னையே, என அரற்றினாள். சடாரென்று தன் அலைபேசியைப் பைக்குள்ளிருந்து எடுத்தாள்.
                கிளி எதுவும் பேசவில்லை. அவளோ எஸ்கலேட்டரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள். அதேசமயம் அங்கே நடமாடிக் கொண்டிருந்தோர் அவளளவுக்கு அவசரங் காட்டவில்லை. எஸ்கலேட்டரில் மாடிக்குப் போன ஜோரில் திரும்பி கீழே நடைமேடையைப் பார்த்தாள். தூரத்தில் புகையெழும்பிக் கொண்டிருந்தது ஒரு பெட்டியில் இருந்து. குத்துயிராய்ப் பிழைத்து நடைமேடையில் விழுந்துகிடந்தவர்கள் எப்படி தரையோடு தங்களையே இழுத்து ஒதுங்க முயற்சி பண்ணுவார்கள், என பாதி தூரக்காட்சியாகவும், பாதி உணர்வாகவும் பெற்றாள். இத்தனைக்கு நடுவிலும், அதோ மைனா. கையில் விரலிடுக்கில் பக்க அடையாளம் கொண்ட புத்தகத்துடன். எஸ்கலேட்டருக்கு அவளும் வந்தாள். ஒருத்தி மேலே. இன்னொருத்தி கீழே. ரெண்டு கண்ணும் ஒரு சிறு விநாடி சந்திக்கின்றன. அதற்குள் மைனாவின் பின்பக்கமாய் இன்னொரு மகா வெடிச்சத்தம். நடைமேடையே குப்பென்று தீப்பற்றுகிறது. அத்தனை நடைபாதை சனங்களையும் சுற்றி வளைத்தாப்போல தீப்பிழம்பு. புகை.
                கிளி பார்த்தபோது மைனா எஸ்கலேட்டரை கிட்டத்தட்ட எட்டியிருந்தாள். வெளியே அவள் ஓடி வாசலை எட்டுமுன் இன்னொரு டமால். இது ரொம்ப கிட்டத்தில். அப்படியே நிலைதடுமாறி தரையில் விழுந்துவிட்டாள். பின்பக்கம் வந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன், அவனும் தடுமாறி அவள்மேல் விழுந்தான். அப்படியே ஒரு புகை மேகம், தூசிப்புயல் அவர்களை மறைத்தது. இருமல். கண் எரிச்சல். தெருவுக்கு ஓடி தொலைந்து போனாப்போல பதட்டத்துடன் ஓடினாள்.
                பாஸ்கோ தெல் ப்ராதோ வரை நடை. திரும்பிப் பார்க்க தைரியம் இல்லை. ஒரு டாக்சியை நிறுத்தினாள். அவள் அலுவலகம் எட்டுமுன் செய்தி எல்லாருக்கும் எட்டியிருந்தது. அவள் சுய நிலையிலேயே இல்லை என்பது அங்கே எல்லாருக்கும் தெரிந்தது. அவர்களே அதிகாரியிடம் போய் அவளை வீட்டுக்கு அனுப்பிவிடச் சொன்னார்கள். அவர் சம்மதித்தார். ம்ஹும் வேணாம். திரும்ப வீடுசெல்ல அவளுக்கு பயமாய் இருந்தது. இங்கேயும் அவளுக்கு முடிக்கவேண்டிய வேலைகள் கொஞ்சம்  இருந்தன. கூட வேலைபார்க்கிற நபர் அவளை பர்லா வரை அவள்வீட்டுக்கே கொண்டுபோய் விட்டார். அதற்குள் வெயிலேறி விட்டிருந்தது.
                நாட்கள் வந்தன. போயின. ஒரு மதியப்போதில் இணையத்தில் தேடி வெடிவிபத்தில் இறந்த நபர்களின் புகைப்படங்களை யெல்லாம் ஆராய்ந்தாள் அவள். வரிசையான முகங்கள். ஆந்தெஸ் பகுதி சாயலுடன் அவள் முகம் எதுவும் இருக்கிறதா என்று தேடினாள். மைனா இருக்கிறாளா? இருந்தால்.... அடியில் தான் அவள் பேரே, இப்பதான் அவளுக்குத் தெரியவரும். கிட்டத்தட்ட 200 படங்கள். கவனமாய் உற்றுப் பார்த்தாள். தேடினாள். அவள் படம் அவற்றில் இல்லை. குறித்த வயதுப் பெண்கள். இளம் பெண்கள். சிறுமிகள். அவள் தேடும் அந்தப் பெண் படம் அவற்றில் இல்லை.
                ஹா, என நிம்மதியடைந்தாள். அவள் சிநேகிதன் வந்தான். என்ன பண்ணிட்டிருக்கே இவளே. ச். இந்தப் பாவப்பட்ட முகங்களுடனே நானும் இருந்திருப்பேனாக்கும்... சொல்கையிலேயே முகத்தில் விசனக் குறிகள். ஏன் அபபிடிச் சொல்றே.... நான் அவங்களுக்கு எதும் உதவி செஞ்சிருக்கலாம். ஆனால்... நானோ ஓடிவந்திட்டேன். அவன் அவளைத் தேற்றுகிறான்.
                அடுத்த சில வாரங்கள். வேலைக்குப் போக வழியை அவள் மாற்றிக்கொண்டாள். ரயில் பயணம் இல்லை. இது சுத்து வழி, என்றாலும் பழைய நினைவுக் குப்பைகளைத் திரும்ப அவள் கிளறிவிட பயந்தாள். ஏற்கனவே இரவில் தூக்கம் கெட்டுப் போயிற்று. மார்ச் இறுதிவரை வேறு வழியிலேயே அலுவலகம் போய்வந்தாள். ஆனால் இப்படியே எத்தனை நாள் தவிர்ப்பது? திரும்ப அட்டோச்சா காலை ரயில்ப் பயணம்...
                கோடையின் ஆரம்ப நாள் ஒன்று. மணி ஏழரைக்கு மேல். அல்கலா போகும் ரயிலுக்கு அவள் காத்திருந்தாள். தண்டவாள இடுக்குகளில் மூஞ்சூறுகள் ஓடின. அதைப் பார்த்தபடி யிருந்தாள். திடீரென்று தானறியாமல் திரும்பிப் பார்க்கிறாள், , அந்த மற்றவள். கோடை என்பதால் லேசான உடைகள். இன்னுமாய் அவள் இவள்கிட்டே வந்தாள். கன்னத்தில் இருந்து கழுத்துக்கு இறங்கிய காயம். தழும்பு. சிவப்பாய்த் தெரிகிறது.
                கெதாஃபே பெண் அவளைப் பார்க்க வந்தாள். ஒரு கஜ தூரத்தில் அவள் எதிரே நின்றாள். ஓரிரு விநாடிகள் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்தார்கள். விழுங்கிவிடுகிற பார்வை. திடுதிப்பென்று... வாய்ச்சொற்களே இல்லை. அந்த நடைமேடையின் நடுத்தளத்தில் பாய்ந்து ஆரத்தழுவிக் கொண்டார்கள். அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் தழுவிக்கொண்டே வரவேற்பார்கள் இப்போதெல்லாம். ஒவ்வொரு காலையிலும்!


ஒவ்வொரு காலையிலும் லொரென்சோ தூங்கியெழுந்தவுடன் கடைப்பிடிக்கிற நியதிகள் ஒரேமாதிரி யிருக்கின்றன. படுக்கையில் இருந்தே ஜன்னல் சதுரம் வழியே வானத்தைப் பார்க்கிறான். இன்று இது புதிய நாள், இதை நான் கொண்டாடப் போகிறேன். பிள்ளைகளின் பிரார்த்தனை போல மெல்ல அவன் சொல்லிக் கொள்ளுவான். கடந்த நான்கு மாதங்களாக, திங்கள் முதல் ஞாயிறு வரை... இந்த ஒழுங்கில் மாற்றம் இல்லை.
                அவனை ஒரு சிலர் கொலைசெய்ய முயற்சி செய்தும், சிலர் அவனைக் காப்பாற்றியும் ஆன சில நாட்களில் அவன் இப்படியான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவனைக் காப்பாற்றியவர்களின் புண்ணியத்தில் அவன் ஆயுசு நீட்டிக்கப் பட்டிருக்கிறதாக நினைத்தான். தன் வாழ்க்கையும், சக மனிதர்களுடனான அவன் பிணைப்பும் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. முக்கியமாய் ஒரு மனிதனுடன். தினமும் காலை விழித்ததும் அவன்நினைவு வருகிறது இவனுக்கு.
                அந்த மனிதனைக் கண்டுபிடிக்க வார வாரமாக, ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேவந்த நாள்முதல் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னைக் காப்பாற்றிய அந்த மகாத்மா யார் என்று தெரிந்துகொண்டு நேரில் அவனைத் தழுவிக்கொண்டு நெகிழ்ச்சியுடன் நன்றிசொல்ல வேண்டும். எப்படியாவது அவனுக்குப் பட்ட மகா கடனைத் திருப்பிச் செலுத்த எனக்கு வாய்க்குமா.
                அடாடா, நேற்றுதான் அந்த அற்புதமான கணம். அந்த அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு! அல்புஃபேரா நிழல்சாலையில் இருக்கிற ஒரு நடுத்தர மது விடுதியில் அவர்கள் சந்தித்துக் கொள்ளலாம், என பேசிக்கொண்டார்கள். இந்த சந்திப்புக்காக அவன் அந்த நண்பனைத் தேடி நிறைய செறிவான விளம்பர அறிவுப்புகள் தினசரிகளில் கைத்துட்டைச் செலவழித்து வெளியிட்டிருந்தான். எனக்கு இந்த சந்திப்பு முக்கியம். நாம சந்திச்சே ஆகணும்.
                ஒண்ணும் கதையாகாத அலுப்புடன், பல வாரங்கள் கழித்து இப்போது அது கூடியிருந்தது. ஒரு டெலிமாட்ரிட் நிகழ்ச்சியில் அவன் கலந்துகொண்டான். அதிலும் தன் விருப்பத்தை வெளியிட்டான். பயன் இல்லை. அடுத்து ஒரு வானொலி நிகழ்ச்சி. இந்த விபத்தில் காயம் பட்டவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்கிற நிகழ்ச்சி அது. அப்போது தன் தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தினான். குறித்துக்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு எண்ணாய் நிதானமாய்ச் சொல்லிவிட்டு வந்தான்.
                அவனது தீவிரம், (இது பிடிவாதம்டா, என்றாள் அவன் அம்மா.) பலன் தந்தது. இந்தப் பிரச்னை அவன் ஒருத்தனுக்கு மாத்திரம் அல்ல. விபத்தில் பிழைத்த நிறையப் பேருக்கு இதே 'சந்திப்பு உந்துதல்' இருக்கவே செய்தது. இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில், மகனே, நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறாய், என்றாள் அம்மா. லக்காவது ஒண்ணாவது, என அவன் நினைத்தாலும், அவள் சொல்கிறதில் சிறு அளவு நிஜமும் இருக்கத்தான் செய்கிறது, என்று அவனுக்கே தெரிந்தது. அவன் பதில் சொல்லவில்லை.
                ரயில் பயணம். அந்த ரயில் இப்போது டெல்லஸ் சாலை ரயில் என்று அழைக்கப் படுகிறது. என்ன பேர்றா இது. ரயில் தண்டவாளத்தில் அல்லவா போகும். சாலையில் போகுமாக்கும். அவன்அம்மா அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள். சில சமயம், கொட்டினேன் கவுத்தேன்னு பேசிப்பிடறே நீ... என்பாள். முந்தில்லாம் இப்படி இருக்க மாட்டியே, என்பாள். ஹா, அதெல்லா ஒண்ணில்ல, என்று அதற்கும் பதில் வெடுக்கென்று தான் வந்தது. அடக்கியபடி, பழையதெல்லாம் திரும்பி நான் பார்க்கறதே இல்லை அம்மா, என்று சொன்னான். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கப் பழகிட்டேன். அதில் நமக்கு அனுபவிக்கக் கிடைக்கிற சந்தோஷங்கள், அது கிடைத்தால் அனுபவிக்கிறேன். அவ்வளவுதான் அம்மா. ம். அதான் தேவலை லொரன்சோ. ஆனால் அப்படியே நடந்ததையெல்லாம் நடந்த ஜோரில் அஞ்சே நிமிஷத்தில் மறந்துறவும் கூடாது...
                ரயில் சிதைவுகளின் நடுவே அவன் கிடந்தான். உடம்பே ரத்தக்களரி. இது சாவுதான்... என்றிருந்தது. எழுந்துகொள்ளவே முடியாதிருந்தது. அப்போதுதான் அந்த புகைமூட்டத்தில் இருந்து வந்தான் ஒருவன். அவன் உடைகளே கிழிந்து நாராய் இருந்தன. அரைகுறை ஸ்பானிய மொழி பேசினான். என்ன சொல்கிறான் என்றே விளங்கவில்லை. மத்தவர்கள் ஓடிவிட்டார்கள். இவன் இருந்தான். அவன் சட்டையைக் கிழித்து அவன்முட்டிக்கு மேலே தொடைக்கு கட்டு போட்டான். அத்தோடு லொரென்சோவுக்கு நினைவு தப்பி விட்டது. கண் விழித்தபோது கிரிகோரியோ மாரனோனனில் உள்ள ஆஸ்பத்திரியில் தான் அவன் கண் விழித்தது. ஒரு மருத்துவர் சொன்னார். சரியா கட்டு போட்டு வந்து சேர்ந்தாய் அப்பா. இல்லாட்டி அந்தக் காலை நாங்க வெட்டி வீசியெறிய வேண்டியிருந்திருக்கும். இன்னொரு மருத்துவர் சொன்னார். சரியான நேரத்தில் முதல் உதவி உனக்கு கிடைச்சிருக்கு. அதான் நீ உயிர் பிழைச்சதுக்கே காரணம்.
                அல்புஃபேரா நிழல்சாலை மது விடுதியில் இருந்து புன்னகையுடன் திரும்பினான். அது அவன் இல்லம்மா, என்றான் தன் அம்மாவிடம். என்னடா சொல்றே? இவன் போலந்துக்காரன். அந்த அவனைப் போல இல்லாமல், இவனது ஸ்பானிய மொழி விளங்குது ஓரளவு. இவனும் நிறைய பயணிகளுக்கு உதவி பண்ணியிருக்கிறான். இவனோட பக்கத்து வீட்டு நபர் இவனிடம் என்னைப்பத்திச் சொல்லி, என் தொலைபேசி எண்ணையும் தந்திருக்கிறார். ஆனால் இவன் அல்ல என்னைக் காப்பாத்திய அந்த அவன். இவனைவிட அவன் கொஞ்சம் மூத்தவன். சரிடா. அப்ப என்ன பண்ணினே? என்ன பண்றது... அவனை இறுக்கி அணைச்சிக்கிட்டேன். அவன் எலும்பே நொறுங்கியிருக்கும்! சாக்லேட் வாங்கிட்டுப் போயிருந்தியே? ம். அவனுக்கு அது பிடித்திருக்கும்னு நினைக்கிறேன். சரி. வணக்கம் - அப்டின்னு வந்திட்டியா? இவன் பேரு லூடோஸ்லாவ். துடைக்கும் காகிதத்தில் எழுதிக்காட்டினான். எட்டு மாதமாய் ஸ்பெயினில் இருக்கிறான். அவசர உதவி நபர்கள் வரும் வரையில் எத்தனை பேருக்கு இவன் ஒத்தாசை பண்ணினான், இவனுக்கே தெரியவில்லை.
                நாளைக்கு ரவானோவிடம் பேசப் போகிறேன். போலந்தில் இருக்கிற அவனது ரெண்டு பிள்ளைகளின் விசாவுக்காக பேசப்போகிறேன். அந்த அவன், இவன் இல்லை, அப்டின்றதை அவனிடம் சொன்னியா இவனே? நான் அவனிடம் சிநேகம் பாராட்டலாம் என்று முடிவு செய்தேன். அவ்வளவுதான். ச். நானே கூட வேறு ஆள்னு இவனையே தப்பா நினைச்சிக்கிட்டிருக்கலாம் இல்லியா? நிச்சயமாத் தெரியவில்லையே எனக்கு.
>>          
எனக்கு நிச்சயமாத் தெரியவில்லை. இந்த மனுசனை எப்படி ஒக்கிடுவது, புரியத்தான் இல்லை. இவன் முன்னைப்போல இல்லை. இனி அவன் மாறப்போகிறதும் கிடையாது என்பேன். பாதிரி வந்தார். அவனை அமைதிப்படுத்தி, கடவுள் இருக்கிறார் என்று சமாதானப்படுத்த அவர் முயற்சி செய்தார். சமையல் அறையில் அவன். கைத்துப்பாக்கி. அவன் அவரைப் பேச விட்டால்தானே? கடவுளா? இருக்கத்தான் இருக்கார். இப்பவும் இந்த நேரத்திலும். அவர் உன் உள்ளேயே இருக்கிறார் ஐயா.
                . அப்ப அவர் பேசாம வெளிய வரட்டுமே. அந்தாளை உடம்பையே சல்லடையாக்குவேன். அவருக்கு வேண்டும் அது. ஹா பரிசுத்த அன்னையே, எப்பிடி அப்பிடியெல்லாம் நாம ஒரு பாதிரியிடம் பேச முடியும்?. பாதிரி ஆகிவிட்டார் ஒரு மாதிரி.
                பிற்பாடு அவன் கோழிக்கூண்டுகள் பக்கம் போய் படபடவென்று சுட்டுத்தள்ளப் போய்விட்டான். மாட்ரிட்டில் இருந்து நாங்கள் வந்தபின், ஒவ்வொரு மதியமானாலும் இதே ரகளை தான். அக்கம்பக்கத்தார் பாவமே என்று பரிதாபப்பட்டார்கள். முதல்நாள் அவசர போலிஸ் என்று கடுமை காட்டியவர்கள், இப்போது அதெல்லாம் வேணாம் என்றுவிட்டார்கள். அவனுள் குமுறல் அப்படி வெடிக்கிறது. தன்னைப்போல சரியாயிரும்...
                ஆனால் எனக்கு அவனைத் தெரிகிறது. நான் அவனுடன் படுக்கையைப் பகிர்கிறவள். ராத்திரிகளில் அவன் போர்வைக்குள் அழுது தீர்க்கிறானே. ராத்திரிகளில் அவன் கிலியடைகிறான். அவன் அழுவதில் இருந்து அதை நான் யூகிக்கிறேன். ஆனால் நான் அதைப்பற்றி வேறென்ன சொல்வது? மார்ச் 11, அந்த வியாழக்கிழமை, அந்தப் பேச்சை வீட்டில் எடுப்பதே இல்லை நாங்கள். இவனது தங்கை ஒருநாள் வந்திருந்தாள். நாங்கள் மூணு பேருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அன்றைக்கு அவள் கூடஇருந்தது, அதுவே பெரிய விஷயமாய் இருந்தது. நாங்கள் அதற்கே அவளுக்குக் கடன் பட்டிருக்கிறோம்.
                ம். கூட இருக்க வேண்டிய அவசியம் அவளுக்கும் தெரிந்திருந்தது. நானும் இவனுமாய் மாட்ரிட் வரை போய்வந்திருந்தோம். கன்வென்ஷன் மையத்தின் பெவிலியன் எண் 6. இவளது தங்கைபையனின் உடல் சிதறலில் இருந்து, அந்த உடலை அடையாளம் காட்ட வேண்டியிருந்தது. தங்கையிடம் அவன் சொன்னான். நீ போக வேண்டாம். ஆனால், அது எம் பிள்ளைடா... ஆமாம். எல்லாம் சரிதான். ஆனால் நீ போக வேண்டாம்.
                மாட்ரிட் போகிற வழியிலேயே என்னவோ இசகுபிசகு நடந்திருப்பதாக மனம் கிலேசப்பட்டது. ஆனால் இத்தனை கோரமாகவா. இதை எப்படி யார் எதிர்பார்ப்பார்கள். பையனுக்கு அடி பட்டிருக்கிறது. அதில் சந்தேகமே யில்லை. கௌதலஹாராவில் தினசரி காலையில்... குண்டு வெடித்த அந்த ரயில்களில் ஒன்றில் தான் அவன் போவான். அவன்அம்மா விடாமல் அவனது அலைபேசியில் கூப்பிட்டபடியே இருந்தாள். அது எடுக்கப்படவே யில்லை. விடாமல் திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தாள். பிறகு ஒரு அரைமணி விட்டு திரும்ப முயற்சி செய்தாள். பிள்ளை எங்க இருக்கான் எப்படி இருக்கான் ஒண்ணுமே தெரியவில்லை.
                ஆக நாங்க மூணு பேருமாக எங்கள் காரில் மாட்ரிட் கிளம்பினோம். அன்றைக்குப் பூராவும் ஒரு ஆஸ்பத்திரி மாத்தி அடுத்த ஆஸ்பத்திரின்னு அலைந்து தேடினோம். எங்கயும் அவன் இல்லை. அவனைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இங்க பாருங்க, அங்க விசாரிங்க... என்றார்கள். நாங்களும் அலைந்தோம். மாலை எட்டு வாக்கில், இறந்த உடல்களை அடையாளம் காணவேண்டி அவர்கள் கன்வென்ஷன் மையத்துக்கு அவற்றை எடுத்துச் செல்வதாகக் கேள்விப்பட்டோம்.
                அவன் அம்மா, இவனது தங்கை... ஏறகனவே பீதியில் வெலவெலத்திருந்தாள். நீ வந்து பார்க்க வேணாம். ஒருவேளை அவனை கடவுள் அழைச்சிக்கிட்டிருந்தால், நாங்க வந்து சொல்றோம். நான் தான் அப்படி அழுத்தமாய் அவளிடம் சொன்னேன். நாங்க தெரிஞ்சிதான் சொல்றோம். நீ தயவுசெஞ்சி வீட்டுக்குப் போ. யேசுராஜா, திரும்ப நீ ரெண்டாந் தரமா எல்லாத்தையும் சொல்ல வைக்காதே இவளே.
                அவனும் நானுமாய்க் கிளம்பினோம். அவனுக்கு நான் நிழல் மாதிரி. அவனின் நிழல். அவனுக்கு நிழல். ஒரு ரெண்டுமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நாங்கள் வெளியூர் என்பதால் எங்களை முதலில் உள்ளே அனுமதித்தார்கள். உடல்களைப் பார்க்குமுன் ஒரு மனநல நிபுணர் குழுவிடம் அனுப்பி வைத்தார்கள். நாம பாட்டுக்கு அப்படி உள்ளேபோய் அந்த சதை குதறிய உடல்களைப் பார்த்துவிடுவது நல்லது அல்ல தான். அந்த இறந்த உடல்களைப் பார்க்கவே ஒரு முன் தயாரிப்பு இருப்பது நல்லது தான். ஆனால் இந்த மனநல மருத்துவர்கள் அவர்களே பாவம் தான். எப்ப யோசித்தாலும் அவர்கள் பாடு சிரமந்தான் என நினைத்துக் கொள்வேன் நான்.
                அந்த மனநலக் குழுவில் ஒருத்தன் ரொம்பச் சின்ன வயசு. அவனே ஒரு மாதிரி கண் சிவந்து இருந்தான். நான் இவனிடம், என் கணவனிடம், சொன்னேன். போ. போய்ப் பார். அழுகை வந்தால் அழுது கொட்டித் தீர்த்து விடு. கொஞ்சம் அதிகமாகவோ, குறைவாகவோ அழுவதால் நிலைமை ஒண்ணும் சீராகவோ சீரழியவோ போறது இல்லை. இந்த இறந்தவர்களின் அடையாளந் தெரிந்தவர் பட்டியலில் எங்க பையன், அவன் முதல் பெயர் துணைப்பெயர் இருக்கிறதா, என்று இவன் விசாரித்துக்கொண்டே யிருந்தான். ரொம்பவும் நொந்திருந்தான். நாங்கள் போனபோது அங்கே நிறையப் பேர் அழுவதும் அலறுவதுமாய் நிலைகுலைந்திருந்தார்கள்.
                உள்ளே என்ன பார்க்கப் போகிறோம் என்பதை முன்னாலேயே விளக்கமாய்ச் சொல்லி யனுப்பினார்கள். அதை சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் சகித்துக்கொள்ள வேண்டும்... என்றெல்லாம் தெளிவுறுத்தினார்கள். இதுல என்ன மோசமான சிக்கல் என்றால், எங்க பையனுக்கு அடையாளமாய் எதுவும் விபத்தில் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. நாங்களே அவனை அடையாளம் காண வேண்டும். அந்த வெடிச் சிதறலில் அவனது அடையாள அட்டை எங்கோ தெரித்து விழுந்திருக்கலாம். அங்கே எடுத்த புகைப்படங்களைப் பார்த்து அதில் நாங்கள் தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
                சதைக் குதறல்கள். கொத்துக் கொத்தாய் கொத்தப்பட்ட சதைக் குதறல்கள். மனசு தன்னைப்போல நெஞ்சைப் பிடித்தபடி பிராத்தனை செய்ய ஆரம்பித்து விட்டது. இதன் பிரதிகள் தாருங்கள். இன்னும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் நாங்கள் காட்டிப் பார்க்கிறோம், என சொல்லவேண்டி வந்தது.
                ஒருவேளை இது இவனாக இருக்கலாம்... நிச்சயந்தானா? ம். அவன் காதில் கடுக்கன் மாட்டியிருப்பான். ம். ஆமாம். யேசுவே. அப்ப ஒருமாசம் முன்னால் என் கணவன் அவனைக் கிண்டல் அடித்தான். என்னடா இது கோலம். நீ என்ன ஆம்பளைஆம்பளையா. என்றாலும் அவனுக்குப் பையனை ரொம்பப் பிடிக்கும். அவன் எங்களுக்கு எங்கள்மகனைப் போல. கடவுள் எங்களுக்கு அளித்த செல்வம் அவன். ச். எத்தனை கொடுமை. அவனது அடையாள அட்டை கூடவே கிடைத்திருந்தால். சதைக் குதறல் பொட்டலத்தைப் பிரிதது அவர்கள் அவனை அடையாளங் காட்டக் கோர, நாங்கள் அடையாளந் தேடவேண்டிய கோர அவசியம் நேர்ந்திராது.
                அதற்கும் ரொம்ப காத்திருக்கிறாப் போலாச்சு. எனக்கென்னவோ இதில் பாதிக்கப் பட்டவர்களை, ஒருத்தரை யொருத்தர் பார்த்துக் கொள்ளாதபடி ஏற்பாடு எதுவும் செய்யலாம். ஒருத்தர் இன்னொருத்தரை மேலும் வெருட்டி கலவரப்படுத்தி விடுகிற மாதிரி ஆகிப்போகிறது இல்லையா. ஒரு சோகத்தின் பொட்டலமாய் அவன் உள்ளே பொதிந்து கிடந்தான். அதன் முடிச்சில் ஒரு சி. ட்டி. (ஸ்கான் அறிக்கை)யும் ஓர் எண்ணும். ஒரு பை. அதில் அவனது சில சாமான்கள். ஆமாம். அது அவனே தான். குறைந்த பட்சம் அந்தத் தலை, மத்ததைப் பத்தி அறுதியிட்டு யாரால் சொல்ல முடியும்? சத்தமே போடாமல் வெளியேறினோம். சிலர் அழுதார்கள். நாங்கள் அழவில்லை.
                நாங்கள் ஊர் திரும்பினோம். அதற்குப் பிறகு தான் இவன் - என் கணவன் இப்படி ஆகிப்போனான். சில சமயம் பார்வை எங்கோ வெறித்தபடி ரொம்ப நேரம் அப்படியே இருப்பான். கண்கூட இமைக்க மாட்டான். அப்போது அவனைப் பார்க்க எனக்கே பயமாய் இருக்கும். மதியமானால் கோழிப் பஞ்சாரம்.. கையில் கைத்துப்பாக்கி. போய் கன்னா பின்னாவென்று சுடுவான்.
                நேற்றைக்கு அந்தத் துப்பாக்கியை, சுவரில் மாட்டியிருந்தது... கையில் எடுத்தேன். என் மனசில் என்ன யோசிக்கிறேன், எனக்கே தெரியவில்லை. ஒருவேளை என் கணவன் அதைக் கையில் எடுத்தால் என்ன யோசிப்பான் என நான் யோசித்துப் பார்த்திருக்கலாம். முற்றத்துக் கோழிகள் ஊடே நடந்தேன். தோட்டத்து வெளிச்சுவரைப் பார்க்க ஒருமுறை சுட்டேன். சமையல் அறையில் இருந்து இவன் என்னிடம் கேட்டான். எத்தனை பேரைக் கொன்னே? அங்கேயிருந்தபடி திரும்பி அவனைப் பார்த்தேன். அந்தக் கேள்வி என்னிடம் காற்றில் வந்தது.
                அவங்கள்ல ரெண்டு பேரை... என்றேன் சிறு உற்சாக அசைவுடன். இதுவரை இறந்தது மூணு பேர். கூட நான். மொத்தம் எத்தனை. அஞ்சா? மோசமில்லை இன்றைய பொழுது!
>>          
இன்றைய பொழுது ரயிலடிக்கு வந்தபோது அவன் வழக்கத்தை விட அலுப்பாக இருந்தான். நேத்து டி.வி. பார்த்ததில் படுத்துக்கொள்ள நேரமாகி விட்டது. ஜங்கிள் ஆஃப் ஃபேமஸ் நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். என்னவோ ஒரு நிகழ்ச்சி. அவனுக்கு அதில் ஈடுபாடு என்று இல்லை. பிரபலமான பல்துறை நபர்களிடையே வேடிக்கைப் போட்டி நிகழ்ச்சி. மறுநாள் அலுவலகத்தில் மத்த சகாக்களுடன் அரட்டையில் அதுவே விஷயமாய் இருந்தது. அவனும் அதுபற்றி என்னமும் பேசுவான். எருதுபொருதுகிறவன், அவன் ஜெயித்திருந்தான். தண்ணீர் போலோ வீரன் ஜெயிப்பான் என அவன் விரும்பியிருந்தான்.
                அதன்பின் மாட்ரிட்டும், பேயான் மியுனிச்சும் ஆடிய கால்பந்துப் போட்டி வர்ணனைகள் கேட்டான். நம்மாட்கள் சரியா விளையாடவில்லை. ரொபட்டோ கார்லோஸ் ஆடாதது பளிச்சென்று தெரிந்தது. வெற்றிக்கான கோலை ஜின்டேன் தான் அடித்தது. அத்தோடு கண் தானே மூடி தூக்கம் கண்ணைச் சுழற்றியது. பிறகு அவன் தூங்கப் போனான் - அவன் வாழ்க்கையின் கடைசி உறக்கம். அது எப்படி அவனுக்குத் தெரியும்.
                அல்கலா ரயில் நிலையம். மர்கா செய்தி இதழின் ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு மணி பார்த்தான். அந்தக் காலையில் அவன் புகைக்கும் முதல் சிகெரெட்டுக்கு இன்னும் நேரம் இருந்தது. அட வேணுன்னால் இப்பவே அதை அனுபவிச்சிரு. அது தான் உனக்கு கடைசி சிகெரெட். ரயில் சிநேகிதன் இன்னொருத்தன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். என்னப்பா சிகெரெட்டை விட்டுறப் போறதாச் சொன்னியே. இதான் கடைசி, என இவனும் பதிலுக்கு புன்னகைத்தான். அவன் நாவில் சைத்தான் என அறியாமல். அது நிஜமாகப் போவதை அறியாமல்.
                விளையாட்டுச் செய்திகள் தாள் அது. வாசிக்க ஆரம்பித்தான். ரயில் 21435. மூணாம் பெட்டியில் அமர்ந்திருந்தான். சில நாள் முதல் பெட்டி. இன்னும் சிலபோது ஐந்தாம் பெட்டி என அமர்வான். கீழ்த்தளத்திலோ மேல் தளத்திலோ. ஆனால் இன்றைக்கு செய்த யோசனை, மூணாம் பெட்டி. அவன் வாழ்விலேயே மிக மோசமான முடிவு. தண்டவாளம் இன்னும் சீராக்கப் படாததில் பயணிகள் லேசாக இங்கும் அங்கும் (பிறகு அங்கும் இங்கும்!) பெட்டிக்குள் ஆடினார்கள்.
                தெரிந்த முகங்கள். நிறைய லத்தீன் அமெரிக்க முகங்கள். மாணவர்கள். தாளை மடித்தான். திரும்பி வரும்போது மிச்சத்தை வாசிக்கலாம். வீட்டுக்குத் திரும்புவோம் என நினைத்திருந்தான். என்ன காத்திருக்கிறது, அவன் அறியாதவன். கூடிய விரைவில் இதோ அறிந்துகொள்ளத் தான் போகிறான். தாளை மடிமேல் போட்டுக்கொண்டான். அப்படியே பின்சரிந்து ஒரு கோழித்தூக்கம். கண் மூடுமுன் சன்னல் வெளியே சிறு பார்வை. வெளியே தரை விறுவிறுவென்று ஓடிக்கொண்டிருந்தது. ரயில் அப்படியே நிற்கிறது!
                பக்கத்து இருக்கைக்காரியின் சிறு புன்னகை. உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா... அவனைப் பார்க்க நீண்ட கை. என் பௌருஷ உருவம் பார்த்து நீள்கிறதா கை... என தன்னில் கிறுகிறுப்பு. அடச்சீ. உன் கற்பனையை உடைப்பில் போட. அவ செய்தித்தாள் ஓசி கேட்கிறாள். . இந்தாங்க. அவளது பெண்மையை போஷிக்கிற மந்தகாசத்துடன் பின்னால் சுகமாய் சரிந்தான். ஒரு பதில் புன்னகை, அவளைப்போலவே. இவன் பற்கள் அத்தனை வெண்மையாக இல்லை. அவன் உதடுகளும் அவளைப்போல பொம்மென்று இல்லை.
                விகால்வரோ வரு முன்னால், ஒரு இளைஞன்... கருத்த சுருட்டை கேசம். ரெண்டு மூணு இருக்கைகள் முன்னால் இருந்தவன் எழுந்து கொண்டான். ரயில் கதவுப் பக்கமாய்ப் போய் நின்றுகொண்டான். ரயில் வழக்கமான கிறீச்சுகளுடன், அல்லது விபரீதம் உணர்ந்த அலறலோ... அதைப் பத்தி என்ன. மக்கள் இறங்குகிறார்கள். ஏறுகிறார்கள். இறங்கியவர்களை விட ஏறியவர்கள் அதிகம். அடுத்த சாந்த்தா யூஜேனியா நிறுத்தத்திலும் இதே போல. இன்னும் சில நிமிடங்களில் என்ன நிகழப் போகிறது என அவர்கள் அறிந்திருக்கவில்லை. 7.38. எல் போசோவில் நிகழப்போகிறது குண்டுவெடிப்பு. தெரிந்திருந்தால் அப்பவே எல்லாரும் ரயிலில் இருந்து குதித்தோடி யிருப்பார்கள். ஆனால் இனி அப்படி முடியாது. தப்பிக்க கால அவகாசம் கிடையாது. ரயில் கதவுசாத்தி தரை திரும்ப பின்வாங்க ஆரம்பித்தாகி விட்டது. தடக் தடக் தாளத்துக்கு தலையாட்டி ஜனங்கள்.
                விகால்வரோ அல்லது சாந்த்தா யூஜேனியாவில் சற்று முன் இறங்கியவர்கள் ஆசுவாசமாக தங்களது கதகதப்பான படுக்கைகளில் உடம்பைக் கிடத்த இன்றிரவு வாய்க்கும். மறுநாளான, மழைபெய்யப் போகிற காலையில் (வானிலை அறிக்கை அப்படி) என்ன மழையப்பா இது, சனியன் வெளிய இறங்க விடுதா... என அலுத்துக் கொள்வார்கள். மூணாவது பெட்டியில் எஞ்சப் போகிற சிலர்... அவர்களுக்கும் நாளை இப்படி வானம் பார்க்க வாய்க்கும்.
                விகால்வரோ பத்திச் சொன்னால், அவனிடம் தாள் இரவல் கேட்ட பெண், திடீரென்று சொன்னாள். அந்தப் பையன் கொண்டுவந்த பையை விட்டுட்டே போயிட்டான். அவன் இருந்த இடத்தில் இன்னொரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். அடியில் அந்தப் பை... அவள் காட்டினாள். அட ஆமாம். தனது இருபதுச் சொச்ச அழகான கையால் கண்ணாடியில சுண்டி நாசூக்காய் சுருட்டைக் கேச இளைஞனை அழைத்தாள். அவன் நடைமேடைக்கு ரயிலை விட்டு இறங்கியிருந்தான். கழுத்தை விடைத்தபடி இங்குமங்குமாய்ப் பார்த்துக்கொண்டு போனான். யாரும் கூப்பிடுவார்கள் என்று அவனே எதிர்பார்த்தாப் போல. கருமையான கூர்த்த விழிகள் அவனுக்கு. இருந்த உள்ளழுத்தத்தில் நெறிபடும் புருவங்கள். அவன்மனசில் என்ன யோசனையோ யாருக்குத் தெரியும்.
                சட்டென எதிர்வாடையைப் பார்த்தான் அவன். வெளியேறும் வழியை நோக்கி ஒரு பையனின் பின்னாலேயே, அவன் இவனைப் பார்த்து அவசரமாய் எதோ சமிக்ஞை காட்டினானோ... கடந்தான். ஐய பையன் பைய விட்டுட்டுப் போறது. பை இல்லாத 'பை'யன்... என அவள். அப்படியென்ன மறதியோ, என அவன். நல்ல பெரிய பையிதான். அதெப்பிடி எடுக்க விட்டுப் போகும்.
                ம். காலைல கொஞ்சம் எல்லாருக்குமே தூக்கக் கிறக்கமா தான் இருக்கு.... அவள் சமாதானம். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தால் சொல்லலாம். அதை அவனாண்ட அவர் சேர்த்துருவார். எவனாவது போக்கிரி கையில் அது கிடைக்காமல் இருக்கணும்... என்றான் அவன். அவர்களுக்கு எப்பவுமே வேட்டை கிடைச்சிட்டு தானே இருக்கு. அமோகமாய் வாழ்கிறார்கள் அப்படி ஜனங்கள்
>>          
ஜனங்கள் தண்டவாளத்தில் விழுந்தார்கள். எங்கள் பக்கமாக நின்ற பெட்டியில் இருந்து இறங்கியவர்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் தண்ணீர் போத்தல்களுடன், கிடைத்த துணிகளையோ, துவாலைகளையோ எடுத்து வந்தார்கள். முதலுதவி சாதனங்களுடன் ஓடி வந்தார்கள். சிலர் தங்கள் சாளரங்களில் இருந்து போர்வைகளை வீசினார்கள். சிலபேர் தங்கள் அலைபேசியில் காவல்துறைக்கு தகவல் சொன்னார்கள். இடர் தடுப்பு மையங்களுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல்கள் பறந்தன. குண்டுவெடிப்பு நடந்த உடனே நடந்தவை இந்தக் காட்சிகளாக எனக்கு நினைவில் வந்தன. லேசாய் தலையைத் தூக்கிப் பார்த்தபோது எனக்கு கண்ணில் பட்டவை இவை. உடம்பில் தெம்பே இல்லை. என்னைப்போல துரதிர்ஷ்டவான்கள், அல்லது என்னைவிட அதிர்ஷ்டக் கட்டைகள்... எல்லாம் பேசியும், நடந்தும் முடிந்த பின்னால், உங்களுக்கு கதையைச் சொல்ல நான் இன்னும் உயிருடன் மிச்சம் இருக்கிறேன்.
                சுய ஆர்வமும், தீர்மானமும், நல்லெண்ணமும் உள்ள ஒருவன் அங்கே உதவிக்கு என தோன்றினான். குண்டுவெடித்ததில் நான் தூக்கி வீசப்பட்டேன். தண்டவாளத்துக்கு அருகில் விழுந்தேன். என்னால் எழுந்துகொள்ளவே முடியவில்லை. என்ன தான் நடந்தது என நினைவில் தட்டியபோது, நிஜத்தில் எனக்கு ஒரு உணர்வுமே இல்லை. வலி இல்லை. அட நானே செத்துட்டேனோ என்றுதான் அப்போது தோன்றியது... அந்த வலி இல்லாத நிலையில். ரொம்ப நம்பிக்கைப்பட வேண்டியதில்லை. நீ மறு பக்கத்தில் இருந்து எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஒரு தீவிரவாத தாக்குதலில் நாங்கள் பலிகடாக்கள், அதில் சந்தேகம் இல்லை.
                என் முகத்தை வருடிக் கொடுத்தேன். பல்லையும் தொட்டுப் பார்த்தேன். ஒரு கல். அதைத் தொட்டு உணர்ச்சி இருப்பதை சரிபார்த்துக் கொண்டேன். மனசிலேயே சொல்லிக்கொண்டேன். அம்மா. கவலைப்படாதே. நான் உயிருடன் இருக்கிறேன். ஒரு ஷு, சாக்சில் ஒன்று எங்கோ விழுந்துவிட்டது. என் பேன்ட்டே இல்லை. நாராய் ஏதோ தொங்கியது. என் கால்கள் அப்படியே திறந்து கிடந்தன. முழுக்க காயம் பட்ட கால்கள். சடசடவென்று வரிசையாய் யாரோ என் காலில் சுட்டாப்போல. முட்டி திறந்து எலும்பு வெளியே தெரிந்தது. என் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
                தவோயிஸ் அன்ட் வெலார்தே விளையாட்டு மையத்துக்கு என்னை அழைத்துப்போய் முதல் உதவி செய்தபோது அவர்கள்தான் சொன்னார்கள் விஷயத்தை. முட்டியெலும்பு முறிந்திருந்தது. அதுவரை அதை நான் அறியவே இல்லை. அதன்பிறகு மருத்துவ ஊர்தி வந்தது.
                தரையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாவப்பட்ட சனங்கள். அந்த அழுகையோலம். உதவி. உதவி... என்கிற குரல்கள் தேய்ந்து... அவர்களில் அசையாதவர்கள்... இறந்திருக்கலாம். பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை தான். எனக்கு அடுத்து கிடந்த பெண். ரொம்பக் கெஞ்சலாய் அவள் குரல், உதவி. உதவி. அப்போது தான் என்னால் எழுந்துகொள்ளவே முடியவில்லை என்று உணர நேர்ந்தது. ஒரு அரை மீட்டர் அளவு என்னை நானே இழுத்துச் செல்ல முடிந்தது. அவள் கிட்ட குனிய முயன்றேன். அவள் கையைப் பற்றிக்கொள்கிற அளவு கிட்டத்தில் வந்திருந்தேன். லேசாய் கதகதப்பான கை. திடீரென்று சனங்கள் எங்கோ வெளியே ஓடினார்கள். அட நல்லூழே... இன்னொரு குண்டு வெடித்தது.
                நான் அசையும் திறனை இழந்திருந்தேன். இடுப்புக்குக் கீழே அப்படியே மண்ணோடு உருகிக்கரைந்து போய்விட்டேனோ என்றிருந்தது. அதன்பின் அந்தப் பெண்ணைப் பற்றி கவலைப்பட முடியவில்லை. தலையில் இருந்து வழிந்து ரத்தம் என் கண்ணுக்குள் இறங்கியது. ஐயோ, யாராவது... உதவி... அவள் அழுகை, அவள் கெஞ்சல் சிறிது கேட்டது. என் கையுடன் அவள் கை. அந்த உயிர்ப்பு உணர முடிந்தது. அதை மெல்ல அடிக்கடி அமுக்கித் தந்தேன். அவளும் என்னை அப்படிச் செய்து கொடுத்தாள். அது ஒரு பரிபாஷை. இருவரும் ஒண்ணும் பேசிக்கொள்ளவில்லை. இருவருமே உயிரோடு இருப்பதை உறுதிசெய்து கொண்டோம்.
                என்னால் அவளுடன் பேச முடியாதிருந்தது. என் வாயே உலர்ந்து போயிருந்தது. தொண்டைக்குள் சூடாய் மணல் அடைத்தாப்போல. அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் கையை நான் அழுத்திக் கொடுத்தேன். அவள் பதிலுக்கு அப்படிச் செய்யவில்லை. திரும்பவும் அவள் கையை... ம். என்னை வருடித்தரக் கூட அவளிடம் தெம்பு இல்லை போல.
                அப்படியே அதேமாதிரி இருப்பதே எனக்கு பெரும் கஷ்டமாய் இருந்தது. அசையவும் முடியவில்லை. ஆகா என் நெஞ்சில் திடீரென்று ஒரு வலி. மூச்சே திணறும் வலி. ஐயய்ய என் இரத்தத்தையே நான் முழுங்குகிறேனா. என் விரல்களை அவளிடம் இருந்து பிரித்தேன். அவள் கை அப்படியே சரிந்தது. அதைப் பிடித்திருக்க, பிடித்து என் கைக்குள் வைத்திருக்... முடியவில்லை என்னால்.
>>          
என்னால் கீழே போக முடியவில்லை. மன்னிக்கணும். அந்த விபத்து... திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டுவிட்டேன். முன்வாசல் கதவைத் திறக்... முடியாமல் போய்விட்டது. முதல் குண்டுச்சத்தத்தில் அவன் விழித்துக் கொண்டான். அவன் படுக்கையறை சனனல் கண்ணாடிகளை அது நொறுக்கிச் சிதறடித்திருந்தது.
                எழுந்துக்கும் போது, கவனம்... என்றாள் சலோமி. வெறுங் காலில் நடக்க வேண்டாம். என்னாச்சி? தெரு தாண்டி சற்று தள்ளி இன்னொரு குண்டு வெடிப்பு. அவன் வீடு மோத்தமுமே சிலிர்த்தது. மூணாவது வெடி. திரும்ப அதிர்கிறது வீடு.
                வெளியே தெருவில் என்னவோ மோசமான, சோகமான விஷயம் நடக்கிறது... என்றாள் அவள். உடனே கிளம்பத் தயாராய் இருந்தாள். ஒரு செய்தித்தாள் அலுவலகத்தில் தான் அவள் வேலை பார்த்தாள். என்னைப் பத்தி கவலை இல்லை. நீ இங்க வரியா, என அவனை அழைத்தாள். சமையல் அறை சன்னல் வழியே வெளியே பார்த்தார்கள். பைஜாமாவும் ஸ்லிப்பர்களும் அவன் அணிந்திருந்தான். அவள் பத்திரிகைக்காரி, அச்சசல் நிருபர் தோரணை. கையில் கேமெரா.
                கடகடவென படம் எடுத்துத் தள்ளினாள். தெருப்பக்கமாய் ரயில் நின்ற படங்கள். ஜனவரியில் நடந்த போக்குவரத்து விபத்தை நினைவுறுத்தி கார்கள் சிதிலப்பட்டுக் கிடந்த காட்சிகள். சப்பளிந்த எஃகு உருவத் திரிபுகள். ஆண்மையற்ற செயல். ரத்தச் சிதறல்... எல்லாமான படங்கள். இதை எதுக்கு விலாவாரியாகச் சொல்ல? ஆனால் அது கார் மோதிக்கொண்ட விபத்து, இது வேண்டுமென்றே செய்த வெறிச்செயல்.
                சனங்கள் ரயிலை விட்டு வெளியேறினார்கள். சிலர் சன்னல் வழியே வெளியே பாய்கிறார்கள். காயத்துடன் திரிந்தார்கள். ரத்தத் தெறிப்பு. விழுந்து கிடந்தவர்களின் கூக்குரல்கள். நிறைய உடல்கள் அப்படியே செயலற்று விட்டிருந்தன. இதன் நடுவே வசமாய் காயம் பட்டவர்களின் தலையைத் தன் மடியில் தாங்கும் சிலர். சிலர் ஓடினார்கள். அல்லது முடிந்த விரைவுடன் நடந்தார்கள். திசை தெரியாமல் தள்ளாட்டமான நடை. திகில். பய வெருட்டல். திகைப்பு.
                சலோமி அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். சும்மா இருக்க வேணாமே என்று, எதாவது பேசணுமே என்று அவன் பேசினான். வெளியே அவசர ஊர்திகளின் ஒலி அவனை நடுக்கியது... கண்ணாடிச் சிதர்களை சுத்தம் செய்யணும், என்றான் அவன்.
                வீட்டுக்கும் தெருவுக்கும் இடைப்பட்டு ரயில் பாதை போகும் நிலம். அதில் முகமே ரத்தக்களரியாய் கிடந்தான் ஒருவன். செகோவியாவில்... அவன் அப்பா... இப்படித்தான் ஒரு குண்டுவெடிப்பில்... என நினைவு வர சரேலெனப் பின்வாங்கினான்.
                அக்கம் பக்கத்து சன்னல்களில் இருந்து சத்தங்கள் கேட்டன. இவர்கள் தளத்தின் மேல் தளத்தில் இருந்தும், கீழ் தளத்தில் இருந்தும் குரல்கள் கேட்டன. உதவிகளும். அடிபட்டவர்களோடு சிறு உரையாடலும். முதலில் வெளியே வந்தது ஒரு பையன். வலது பக்கம் தரைத் தளத்தில் இருக்கிறான் அவன். வேலியில் சிறு துவாரம் இருந்தது. அதில் நுழைந்து வெளியே போனான். அவன் கையில் சில போர்வைகள். ரெண்டாம் தளத்தின் ஆட்கள் அவனுக்குப் பின் ஓடிவந்தார்கள். தண்ணீர். முதல் உதவி சாதனங்கள். அதற்குள் இவன் வீட்டு அழைப்பு மணி. ரொம்ப திகைப்பாய் இருந்த யாருடனோ சமையல் அறையில் இருந்து சலோமி பேசுகிறது கேட்டது. இப்போது அவன் தள்ளி இருந்தாலும் அந்தப் பேச்சுகள் கேட்டன.
                என்னென்னவோ குரல் கதம்பம். மாடிப்படிகளில் தடதடப்பு. சட்டையப் போட்டுக்க. நாம அந்தப் பாவப்பட்டவங்களுக்கு உதவப் போகணும். மேலும் போர்வைகள் வரவழைக்கப் பட்டன. காயம் பட்டவர்களைக் கதகதப்பாக்க வேண்டியிருந்தது. முதல் உதவிப் பெட்டி தேவை. அலைபேசி. அதை மறந்துற வேண்டாம். ஏன்னா சிலர் அலைபேசி வெச்சிருக்க மாட்டார்கள். இருந்தவர்கள் அதை இந்தக் களேபரத்தில் தொலைத்தும் இருக்கலாம். என்னென்ன தேவைன்னு படுதோ எல்லாத்தையும் அள்ளிக்க. கிளம்பு அன்பே... என்றாள் அவள்.
                நான் கீழ போறேன். கீழ உனக்கு காத்திருக்கிறேன். சீக்கிரம் வா. அவள் போய்விட்டாள். அவனால் முடியவில்லை. சட்டென்று உடை மாற்றிக்கொண்டான். என்றாலும் கால் தயங்கியது. முன்னேற மறுத்தது. நான் கோழை தான். குளியலறைக்குப் போனான். சலோமி என்ன சொல்வாள்? என் வீட்டு ஆம்பளை... எப்படியாப் பட்டவன் தெரியுமோ? ஏம்ப்பா உனக்கு இதயமே இல்லியா?
                கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். கண்ணீர் முட்டியது. ஒரு சோகம் அவனை மெல்லக் கவ்வுவதாக உணர்ந்தான். தலையை உதறிக் கொண்டான். மெதுவாக மூச்சை சீர்ப்படுத்தினான். கதவுக்கு முன்னால்... போய் நின்றான். திகிலாய் இருந்தது. நெஞ்சு விலாவில் முட்டியது. போய் கதவுப் பிடியைத்... திருக, திறக்க முடியவில்லை. அப்படியே திருகிக்கொடுத்தான். பற்றி யிழுக்க வரவில்லை.
                அவசர மருத்துவ ஊர்தி. தீயணைப்பு ஊர்தி. சத்தங்கள். வீடெங்கும் அந்தச் சத்தம் அதிர்ந்து அவன்மேல் கவிந்தது. அப்படியே அவன் நின்றான். சுருக்கம் நிறைந்த தன் புறங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை பார்த்ததே யில்லை போல புதிருடன் பார்த்தான் அதை. ஏற்கனவே அது கதவுப் பிடியில் கதகதப்பேற்றிக் கொண்டுதான் இருந்தது.
                திடீரென்று அவன் புதைகுழியையும் அதில் படிந்திருக்கிற உறைபனிச் சில்லுகளையும் பார்த்தான். டேய் பாத்துறா, குஸ்மான்... அதான் அவர் அவனிடம் கடைசியாய்ச் சொன்னது. அந்த நினைவுகளை அழித்துவிட முடிந்தால் தேவலை. எதுவும் சாப்பிட்டு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், வாந்தி எடுத்து விடுகிற மாதிரி, அந்த நினைவுகளை வெளியேற்றிவிட முடிந்தால் நல்லது. ச். அவனால்... மறக்க முடியவில்லை. ரெண்டு மாசமாய் அவனை உள்ளே பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் அந்தக் காட்சிகள் திரும்ப மேல் மட்டத்துக்கு வந்தன. தவிர்க்கவே முடியவில்லை.
                அந்த வாகனம். உடைந்த கண்ணாடிச் சில்லுகள். தெருவோரம் போர்வை சுற்றிக் கிடக்கிற அந்த நபர். அவனுக்கு அப்படித்தான் தோன்றியது. அது அவரேதான். அவன் அப்பா.

Mangled Flesh - English Translation Valerie Miles.
Courtesy - Words without borders, March 2013
C ourtesy – Pudhupunal tamil mag. April & May 2013
storysankar@gmail.com





Comments

Popular posts from this blog