மொழிபெயர்ப்பு – உலக இலக்கியம்
HALF OF A YELLOW SUN
Chimamanda Ngozi Adichie (Nigeria)


நெகிழ்ச்சிகரமாய் மையச்சரடு பற்றிய கவனமாய் பூத்தொடுத்தாப் போல வார்த்தை தொடுக்கிறார் சீமாமந்தா. நம் தமிழுக்கு நெருக்கமாய் இதை உணர முடிகிறது. முதலில் 'பொன் ஒளிரும் புலரி' என்றுதான் தலைப்பைத் தமிழ்ப்படுத்தினேன். ஆனால் எழும் சூரியன் என்கிற பயாஃப்ரா நாட்டுக் கொடிச் சின்னம், யுத்தத்தில் தோல்வியைத் தழுவும்போது திரும்ப உள்ளமுங்கிக் கொள்கிறதாக ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் எனத் தோன்றியதில் தலைப்பை வேறு மாதிரி மொழிபெயர்த்தேன்.

தென்கிழக்கு ஆப்ரிக்கப் பழங்குடியினரான இக்போவின் உரிமைப் போராட்டமும் அது எங்ஙனம் நசக்கப் படுகிறது எனவும் கதை விவரிக்கிறது. வாழ்க்கையின் நம்பிக்கைகளை, ஆசையை, ஏமாற்றங்களை, திணிக்கப்படும் சோகங்களையெல்லாம் நதியாய்த் தொட்டுத் தாண்டிச் செல்கிறது கதை. அறிவாளியான பயாஃப்ரன் ஒபி குண்டுச் சத்தம் கேட்க ஆசைப்படுகிறதாகச் சொல்லி, போரில் அவன் தேவைப்பட்டபோது போக முடியாமல் ஒளிந்து கொள்வதாகச் சொல்லி, அடுத்த குண்டுவீச்சில் அவன் குழிக்குள் பதுங்காமல் வெளியேயே குண்டுச் சத்தங் கேட்டு பேதலித்து மண்ணைப் பிசைந்தபடி அதிர்ச்சி தாளாமல் அடுத்த நாள் இறந்துபோகிறதாய்க் கதைசொல்வது கச்சிதம்.

1977ல் நைஜீரியாவில் பிறந்த சீமாமந்தா, வளர்ந்ததெல்லாம் இன்சுகா, பல்கலைக்கழகம் கொண்ட நகரத்தில்தான். ஊடகவியல் மற்றும் அரசியல் நோக்கியல் மேற்படிப்பை அவர் அமெரிக்காவில் கனக்டிகட்டில் படித்தார். 2002 ஆப்ரிக்க எழுத்தாளருக்கான கேன் பரிசுக்காக சிபாரிசு செய்யப் பட்டவர். 2002 காமன்வெல்த் சிறுகதைப் போட்டியிலும் இரண்டாம் பரிசு பெற்றார்.
* *
நன்றி - இருவாட்சி பொங்கல் மலர்)
தகதகக்கும் காலை
தலைகாட்டும் சூரியன்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


* *
இக்போ குடிகள் சொல்கிறார்கள், முதிர்ந்த கழுகுக்கு புள்ளி இல்லாத நிர்மலமான இறகு..
* *
மழைக்கசகசப்பான ஒரு பருவ மத்தி. சூரியனோ என் கையருகே போல தகதக, மழையும் பெய்யத்தான் செய்கிறது. வெயில்மழை! எனக்குள் சின்ன வயசுக் கிளுகிளுப்பு.. இப்படி நாட்களில் நான் வெளியே ஒடித் திரிந்திருக்கிறேன். மழைக்கும் வெயிலுக்கும் ஒரு விடாக்கண்டன் கொடாக்கண்டன் போட்டி. சூரியன்தான் ஜெயிக்கணும்! வாய் தன்னைப் போல எதாவது மெட்டெடுக்கும். வெதுவெதுவென்று வியர்வையுடன் கலந்து முகத்தில் வழிகிறது மழை. ஊர்வலம் முடிந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். என் கையில் தட்டி - 'கூட்டுக்கொலைகளை மறந்துவிடாதே.' எனது, எங்களது புதிய அடையாளத்தையிட்டு ஒரு பெருமிதம். மே பின்பகுதி அது. எங்கள் தலைவர் ஒஜுகு படை வாபஸை அறிவித்திருந்தார். , நாங்கள் இனியும் நைஜீரியர்கள் அல்ல. நாங்கள் பயாஃப்ரன்கள்!

சுதந்திர சதுக்கத்தில் நாங்கள் மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர் உற்சாகமாய்க் கூடி ஊர்வலம் போனோம். இக்போ பாடல்களை உரக்கப் பாடினோம். நதிபோல கையசைவு. காற்றிலாடும் நாற்று வயல். வெளியே பெண்மணிகள் நிலக்கடலையும் மாங்கனிகளும் விநியோகித்தபடி ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடிக் குதூகலித்தார்கள். என் பக்கத்தில் நாம்தி. நாங்கள் தட்டிகளை ஆட்டி 'வாகைக்' கிளைகளை அசைத்தபோது எங்கள் தோள்கள் இடித்துக் கொண்டன. அவன் அட்டையில் ''போர் நிறுத்தம்.'' மாணவர் தலைவர்களில் அவனும் ஒருவன் என்றாலும் என்னவோ என்கூட நிற்கலாம் என நினைத்தான். மற்ற தலைவர்கள் முன்னணியில் இருந்தார்கள். ஒரு சவப்பெட்டி, அதில் நைஜீரியா என சாக்கட்டி எழுத்துக்கள். குழியொன்று தோண்டி, அதற்குள் பெட்டியை இறக்கியபோது, ஹோவென்று ஆர்ப்பரிப்பு எங்களை ஒருசேரத் தழுவியது. தழுவித் தூக்கியது, ஒரே குரல்போல அது முழங்கியது. நாங்கள் ஒன்றுகலந்தோம்!

நான் ஆனந்தமாய் ஊளையிட்டேன். திடுக்கென்று ,இஃபேகா அத்தை ஞாபகம். நான் பிறந்தபோது என் அம்மாவிடம் பால் சுரக்காமல் அத்தையின் முலைகளைத்தான் நான் சப்பினேன். வடக்கின் படுகொலைகளில் அத்தை செத்துப் போனாள். அவள் பெண் அர்சி. கர்ப்பிணி, அவளும் பலியானாள். அவர்கள் அர்சி சாகுமுன் அவள்வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே வீசியெறிந்திருப்பார்கள். எல்லா கர்ப்பிணிப் பெண்களையும் அவர்கள் அப்படித்தான் கொன்றார்கள். நான் யோசித்துக் கொண்டிருந்ததை நாம்தியிடம் சொல்லவில்லைஎன்னை விடு, அவனது மூணு மாமன்கள், ஆறு மருமகன்கள் பலியாகியிருக்கிறார்கள்... கேட்டால் என் முகத்தை வருடி அவன் சொல்வான். ''நாந்தான் சொன்னேனே, கூண்டோடு கைலாசம், அதையே நினைச்சிட்டிருக்கப்டாது. அதுக்கா நாம வாபஸ் வாங்கினோம், இப்ப நம்ம தனி நாடு... பயாஃப்ரா பிறந்துவிட்டது! அதைப் பத்தி யோசிடி கண்ணு. நமது பாடுகளை பலமான தேசமாக மாற்ற பாடுபடுவோம். நமது துயரங்களை பெருமையான ஆப்ரிக்காவாக மாற்ற பயன்படுத்துவோம்... விளங்குதா?''

அதான் நாம்தி. ஒரு இருநூறு வருடம் முன்னால் இவன் எப்படியிருந்திருப்பான்... ஒரு இக்போ வீரன் தன் படையை முன்நடத்திச் செல்கிறான். (அப்போதெல்லாம் தர்ம யுத்தம்.) வார்த்தெடுத்த குத்தீட்டி. வாள். முன்னே பாயும் வேகம். குளம்படிகள் அதிரும் சத்தம். திரும்புகையில் குச்சிகளில் மனிதத் தலைகள்.

விடுதி வராந்தாவில் மழை நின்றிருந்தது. சூரியனுக்கு ஜெயம்! உள்திண்ணையில் பெண்கள் எல்லாரும் பாட்டெடுத்துக் கொண்டிருந்தார்கள். நேற்றுவரை அவர்கள் பிளாஸ்டிக் வாளிகளுடன் குழாயடியில் முடியைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தார்கள். துணி காயப்போட்டால் உள்ளாடைகளில் ஓட்டை போட்டு பொறாமையைத் தணித்துக் கொள்கிற ஸ்திரீகள் இப்போது கைகோர்த்துக் குலவையிடுகிறார்கள். ''நைஜீரியா வாழ்க!'' பாட்டு மாறி விட்டது, இப்போது ''பயாஃப்ரா வாழ்க வாழ்க!'' கைதட்டி ஆரவாரித்து நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன். கூட்டுக் கொலைகளைப் பற்றி நாங்கள் பேசுவதைத் தவிர்த்தோம். - வீடு வீடாக இக்போக்கள் துருவித் தேடப்பட்டார்கள். மரத்தின் மேலே இருந்தவர்களை இழுத்துப் போட்டார்கள். ''நியாமிரி நியாமிரி...'' தாய் மண்ணே வணக்கம் - நாங்கள் தலைவர் ஒஜுகு பற்றிப் பேசினோம். என்ன உணர்வுபூர்வமாய்ப் பேசுவார் மனுசன். கேட்டாள் கரைந்து போவார். கண்ல தண்ணி வந்துரும்... போராட்ட வேகம் வரும். தோள் பூரித்து நரம்பு ஜிவ்வென்று முறுக்கேறி விடும். எத்தனை தலைவர் வந்தாலும் வசீகரத்தில் அவரை அடிச்சிக்க முடியாது. ஊரெல்லைத் தேர். அவர் பக்கத்துல நிகருமா, ஜவுளிக்கடை பொம்மை! ஒருத்தி சொன்னாள். ''இமாகுரா, மொத்த ஆப்ரிக்க வம்சத்திலேயே பயாஃப்ராவில்தான் டாக்டர்மாரும் வக்கீலும் அதிகம்டி...'' இன்னொருத்தி சொன்னாள். '' இனி நாம் ஆப்ரிக்காவைக் காப்பாற்றலாம்...'' ஒரே சிரிப்பு. நாங்கள் முகம்கூட அறியாத எங்கள் ஜனங்களையிட்டு எங்களுக்கு ஒரே பெருமிதம். அவர்களையெல்லாம் அதுவரை 'நம்ம' ஆட்களாக நாங்கள் யோசித்தது கிடையாது.

வாரங்கள் குதூகலத்துடன் தொடர்ந்தன. எங்கள் வகுப்பாசிரியர்கள் தங்கள் தங்கள் வெளிநாட்டுக்கு, பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா என்று மூட்டைகட்டினார்கள். யுத்தம்னு இனி வந்தாலும், ஒரே வாரம், மொத்த நைஜீரியாவையும் நசுக்கிருவோம் நாங்கள். எங்கள் துறைமுகத்தை அடைச்சிக்கிட்டு நைஜீரியக் கப்பல்கள். பாக்கறோம்டி, இனி எத்தனை நாள் நிக்கப் போறீங்க, சிரித்தோம். ஆல மரத்தடியில் கூட்டம். பயாஃப்ராவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி நாங்கள் விவாதிக்கக் கூடினோம். உற்சாகம் பொங்கி நுரைத்தது. 'நைஜீரியப் பல்கலைக் கழகம், இன்சுகா'' பலகையை இறக்கிவிட்டு, ''பயாஃப்ரா பல்கலை வளாகம், இன்சுகா'' ஏற்றப்பட்டது. முதல் ஆணியை நாம்தி அடித்தான். பயாஃப்ரன் விடுதலை இயக்கத்தில் அவன்தான் முதலில் சேர்ந்தவன். மற்றவர் பின்னத்தி ஏர். அவனது இராணுவ உடையை வாங்கிக்கொள்ள நானும் அவனுடன் போயிருந்தேன். யுத்த ஆள்சேர்ப்பு அலுவலகம், புது பெயின்ட் வாசனையுடன். அந்த உடையில் அவன் பரந்து விரிந்த மார்புடன் ஜாம்பவானாய்த் தெரிந்தான். அதைவிட்டு அவன் பிரியவே வேண்டாமாய் இருந்தது. என்னுடன் அவன் சல்லாபித்தபோது கூட அந்த மொடமொடப்பான கித்தான் சட்டையை அப்படியே லேசாய்த் தூக்கிப் பிடித்துக் கொண்டேன்.

என் வாழ்க்கை - எங்கள் ஜீவிதம், வெட்ட வெளிச்சமாய் இருந்தது. பதனிடப் பட்ட பளபள ஆடைத்தோல்.. நாங்கள் தினவெடுத்திருந்தோம். உள்ளே ஓடுவது உதிரம் அல்ல, எஃகுக் குழம்பு. வெறுங்காலுடன் நாங்கள் தீமிதிப்போமாக்கும்!

* *
இக்போ மக்கள் சொல்வார்கள் - பூசணிக் கதுப்பில் தண்ணீர் நுழைந்ததை யார் பார்த்தார்கள்?
* *
விடுதியறை வெளியே துப்பாக்கிச் சத்தம்ரொம்பக் கிட்டத்தில்  இடி இறங்கினாப் போல. யாரோ ஒருவன் மெகாஃபோனில் கத்துகிறான். ஓடுங்கள் வெளியே! காலி செய்யுங்கள் இடத்தை! கூடத்தில் அலைபாயும் பாதங்கள், பதட்டம். பெட்டியில் சாமான்களை அடைக்கிறேன்... உள்ளாடைகளை எடுத்துக்கொள்ள விட்டுவிட்டது... கையும் ஒடலை, காலும் ஒடலை. அவசரத்ல அண்டால கை போகாதுன்னு பழமொழி. ஓடுடி வெளியே. மாடிப்படியருகே யாரோ இளம்பெண்ணின் பளபளப்பான அழகிய ஒற்றைச் செருப்பு.

எனுகு பகுதியில் மழைவாசம். பசும்புல் தலைநீட்ட ஆரம்பித்திருந்தது. எறும்புப் புற்றுகள் கிளர்ச்சியுடன் முளைத்தன. சந்தையாட்களும், மூதாட்டிகளும், இளம் பிள்ளைகளும் நாம்தியைக் கட்டிக் கொள்கிறார்கள். அவனது சிப்பாய் உடையைத் தொட்டுத் தழுவி மகிழ்கிறார்கள். ''நிஜமாவே நீ கில்லாடிதான்...'' என் பதிமூணு வயசுத் தம்பி ஒபி சொன்னான். தினசரி ஒருபுத்தகம் வாசித்துத் தள்ளும் ஒபி. சோடாபுட்டி கண்ணாடி. டபுள் புரமோஷன் வாங்கி சிறப்புப் பள்ளியில் அவன் சேர முடிந்தது... தற்போது கிரேக்கப் பண்பாட்டில் ஆப்ரிக்க மூதாதையரின் ஆதிக்கம், என ஆய்வு செய்கிறான். நாம்தியின் சீருடையைத் தொட்டுப் பார்த்தது அவனுக்குப் போதவில்லை, ஒரேயொரு தரம் போட்டுப் பாக்கலாமா, என்றிருந்தது. டுமீல் சத்தம் காதுக்கு எப்படியிருக்கும் என்று கேட்க ஆசைப்பட்டான். அம்மா நாம்தியை வீட்டுக்குக் கூப்பிட்டு மாம்பழ கேக் தந்தாள். ''இந்தச் சீருடை உனக்கு கம்பீரமாப் பொருந்ததுடா மகனே...'' என்று அவனைக் கட்டிக் கொண்டாள். ஒரு வருஷம் முன்பு எனக்கு அவனுடன் கல்யாணம் பேசப்பட்ட போது, வயசுப் பொருத்தம் இல்லையேடி ரொம்பச் சின்னப் பொண்ணு நீ, என்றும், நம்ம தரத்துக்கு அவங்க குடும்பம் அந்தஸ்து பத்தாது என்றும் பேசியவள் அம்மா, இப்போது எல்லாம் மறந்து போயிருந்தது அவளுக்கு.

அப்பா அப்பவே எங்களுக்குக் கல்யாணம் முடித்துவிட ஆசைப்பட்டார். நாம்தி சிப்பாய் உடையில் மணமகனாகலாம், பிறக்கும் பிள்ளைக்கு பயாஃப்ரஸ், எனப் பேர் வைக்கலாம், என்றெல்லாம் அவருக்குக் கனவு. அப்பா லந்தடிக்கிறார்... என்றாலும் நாம்தி ராணுவத்தில் சேர்ந்ததில் இருந்தே என் நெஞ்சில் இனம் புரியாத கனம், ஒரு பிள்ளை பெத்துக்கலாமே என்றுதான் எனக்கும் இருந்தது. பளபளப்பான மகோகனி பெஞ்சு போல சருமம் உள்ள பிள்ளை, நாம்தியைப் போல. என் மன ஆழத்தில் கிடந்த ஏக்கத்தை அவனிடமும் சொன்னேன். ஐதிக நம்பிக்கை இல்லாதவன் அவன். ஆனாலும் தன் கட்டைவிரலைக் கிள்ளி, பின் என் விரலையும் கிள்ளினான். எங்கள் ரத்தங்கள் கலப்பதாக ஐதிகம்... அதன் அர்த்தம் சரியாகத் தெரியாவிட்டாலும் சிரிப்பாய் இருந்தது.
* *
இக்போ பழமொழி. சிங்கத்தைப் படைச்சவன் அதைப் புல்லைத் தின்ன விடான்.
* *
நாம்தி போய்விட்டான். அவன் காலணி எழுப்பிய தூசி மெல்ல அடங்கி அவன் போன தடம் அழியும் வரை பார்த்தபடியிருந்தேன். என் கண்ணிலும், ஈர தேகத்திலும் பெருமை. பெருமிதம். ஆலிவ் இலை தழைகள் போன்ற அவனது சீருடையை நினைத்துப் பெருமிதம். சட்டை கைப்பகுதியில் மஞ்சளாய் எழும் உதயசூரியச் சின்னம். அப்பா தினசரி அணியும் மங்கலான பருத்தி டையிலும் அதே சின்னம் உண்டு. யுத்த ஆய்வு அலுவலகத்தில் புதிதாய் அப்பா வேலைக்குப் போகிறார். அவரிடம் நிறைய டை இருந்தது, பட்டுத் துணி உட்பட! எல்லாத்தையும் புறந் தள்ளினார்... சின்னம் இல்லாத டையெல்லாம் டையோட சேர்த்தியா. அட அம்மா, நாகரிகச் சீமாட்டி, கை நகத்தையே அப்படிப் பராமரிக்கிறவள் அவள், லண்டனில் வாங்கிய அருமையான அவளது உடைகளில் சிலவற்றை விற்றுவிட்டு, நாலைந்து பெண்களைச் சேர்த்துக் கொண்டு ராணுவ வீரர்களுக்கு உடைகள் தைத்தாள். நானும் அதில் கலந்து கொண்டேன். நாங்கள் பனியன்கள் தைத்துத் தந்தோம். இக்போ பாடல்கள் பாடினோம். வேலை முடிந்து அம்மாவும் நானும் வீடுதிரும்புவோம். பெட்ரோல் சிக்கன நடவடிக்கையாக நாங்கள் நடந்தே வீடுதிரும்பினோம். பரபரப்பற்ற நாட்கள். அப்பா வீடு திரும்புவார். வாசல் திண்ணையில் அமர்ந்து பயாஃப்ரா வானொலி கேட்டபடியே நாங்கள் நிலக்கடலைச் சட்னி தொட்டுக் கொண்டு கேப்பைக் கொழுக்கட்டை சாப்பிடுவோம். சிம்னி விளக்கு நாலாபக்கமும் வெளிறிய நிழலை விரித்துப் பரத்தும். நாங்கள் ஜெயிக்கிற செய்திகளை வானொலி சொல்லும். நைஜீரிய ராணுவச் சடலங்கள் தெருவில் கிடத்தப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும். அப்பா அலுவலகத்தில் கிடைத்த தகவல்களையெல்லாம் பெருமையாய்ச் சொல்வார் - நம்மாளுங்க எம்டங்கடா! தேங்கா எண்ணெயில் இருந்து மசகெண்ணெய் எடுக்கிறோம் நாம. ஓட்ட ஒடசல் இரும்புத் துண்டையெல்லாம் சேர்த்து கார் இன்ஜின் தயார் செய்கிறோம். சமையல் பாத்திரத்தை வெச்சே கச்சா எண்ணெயை வடிகட்டிப்பிடுவோம். வீட்டைச் சார்ந்தே பதுங்குகுழிகள், சுரங்கப்பாதை. எந்தப் படையெடுப்பும் நம்மள ஒண்ணும் புடுங்க முடியாது. மாலைஉசாவல் முடிகிற சமயம், ''நமக்குப் போராட நியாயமான காரணங்கள் இருக்கு'' என்று சொல்லிக் கொண்டோம், என்னவோ அதுவரை தெரியாததைப் போல! மனசுக்கு தேவையான நங்கூரம், ஒபி அப்படித்தான் சொன்னான். இப்படியான ஒரு சாயங்காலத்தில்தான் சிநேகிதன் ஒருவன் அந்தப் பக்கமாய் வந்து, நாம்தியின் படை பெனினை ஜெயித்து விட்டதாகத் தகவல் சொன்னான். நாம்தி சௌக்கியம்... நாம்தியின் ஞாபகங்களுடன் கள் அருந்தினோம். ''வருங்கால மாப்ளைக்காக!'' அப்பா சொல்லி கள்குடுவையை என்னைப் பார்க்க உயர்த்திக் காட்டினார். ஒபி அன்றைக்கு எவ்வளவு வேணாலும் கள் குடிக்கட்டும், என விட்டுவிட்டார். அவர் 'கோனியாக்' மதுவின் விசிறி, ஆனால் கள்ளச் சந்தையில் கூட அவர் சரக்கு 'ரெமி மார்ட்டின்' கிடைக்கவில்லை.... தடை அமலில் இருந்தது. மேலுதட்டு நுரையுடன் அப்பா சொன்னார். கள்ளே தேவலை, சீசாவக் கவுத்தி இக்கிணி இக்கிணியாக் குடிக்கண்டாமில்லே?... எல்லாரும் ஹோவென்று சிரித்தோம்.
* *
இக்போ சொலவடை. அசமந்தமாய்ப் போகும் அணில்கூட வரட்டும்
வேளை ஓட்டமெடுக்கும்.
* *
எனுகுவில் ஆடிக்காத்தின் புழுதியெடுப்பான ஒரு நாள். எனுகுவை நைஜீரியர்கள் கைப்பற்றிய நாள் அது. பெருங் காத்து, தூசி, தும்பு, காகிதக் குப்பை, இலைகள் எனப் பறந்தன. தலைமுடியில் பழுப்பாய் பிசுக்கு சேர்ந்தது. அம்மாவும் நானும் மிளகுக் குழம்பு வைத்தோம். நான் மாமிசம் வெட்ட, அம்மா மிளகை அம்மியில் நசுக்கிக் கொண்டிருந்தாள். வெளியே துப்பாக்கிச் சத்தம். முதல்ல புயலிடியாக்கும்னு இருந்தது. பயாஃப்ரா வானொலி எதிரிராணுவம் வெகு தொலைவில் இருக்கிறதாக, நாங்கள் போட்டபோட்டில் பின்வாங்கியிருந்ததாகச் சொல்லியிருந்ததே... அப்பா பதறியோடி உள்ளே வந்தார். பருத்தி டை கசங்கியிருந்தது. சமையலறைக் கதவை படபடவென்று தட்டினார். ''ஏளா எல்லாரும் கார்ல ஏறுங்க'' என்றார். ''நம்ம அலுவலகமே காலி பண்ணிப் போகுது... நாம இடம் மார்றோம்...''

எதை எடுத்துக்கொள்ள என்றே தெரியவில்லை. அம்மா நக அலங்கார சாதனங்களை எடுத்துக் கொண்டாள். சின்ன வானொலிப் பெட்டி. கொஞ்சம் துணிகள். ஒரு கைத்துண்டில் சுற்றி பாதி வேகவைத்த மிளகுக்குழம்பு பாத்திரத்துடன். நான் ஒரு பொட்டலம் உப்பு பிஸ்கோத்துகள் எடுத்துக் கொண்டேன். மேஜைமேலிருந்த புத்தகங்களை ஒபி வாரிக்கொண்டான். அப்பாவின் பூஜோ காரில் நாங்கள் எனுகுவை விட்டு வெளியேறியபோது, அம்மா எப்படியும் திரும்ப இங்கேயே வந்து விடுவோம் என்றாள். நம்ம படைகள் எனுகுவை மீட்டு விடுவார்கள். அவளது அழகான பீங்கான் பாத்திரங்கள், அங்கேயே அவற்றை விட்டுவிட்டு வந்தாச்சி, என்கிற கவலை கிடையாது. கிராமஃபோன் பெட்டி. பாரிசில் இருந்து இறக்குமதியான சரக்கு அவளது புதிய தலை'விக்.' என்ன அழகான அபூர்வமான லாவண்டர் வண்ணம்... ''அத்தோட என்னுடைய தோல்அட்டை போட்ட புத்தகங்கள்'' என்றான் ஒபி. எங்களை மோதியோடும் பயாஃப்ரன் சிப்பாய்கள், கடவுளுக்கு நன்றி, அவர்கள் யாரும் நாங்கள் அறிந்த குடும்பத்து ஆட்கள் அல்ல. நாம்தியை இப்படிப் புறமுதுகு காட்டுகிறா மாதிரி, கடும் மழையில் நடுங்கிப் பேதலித்து ஓடும் கோழி போல நினைக்க நான் விரும்பவில்லை. கண்ணாடி முன்தடுப்புகளில் அப்பிய தூசியை அடிக்கடி காரை நிறுத்தி வழித்துப் போட்டுவிட்டுப் போகவேண்டி யிருந்தது. பெரும் நெரிசல். ஊர்ந்தாப் போலப் போனது கார். பெண்கள் முதுகில் குழந்தையைக் கட்டிக் கொண்டு, கைவண்டி தள்ளிக் கொண்டு, தலைகளில் பானை சுமந்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். ஆண்கள் ஆடுகளையும் சைக்கிள்களையும் தள்ளிக் கொண்டு, மரப்பெட்டிகளை, கிழங்குகளை வேரோடு பிடுங்கி தூக்கிக் கொண்டு, கூட குழந்தைகள், எத்தனை குழந்தைகள்! மெலிதான பழுப்பு சல்லாத் துணியாய்ப் புழுதி ஊயென்று கிளம்பிச் சுழன்றடித்தது. குப்பை மலை. கலங்கலான நம்பிக்கையோடு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் சனத்திரள். பளாரென்று அந்த உண்மை அறைந்தது என்னை. , இந்த ஜனங்களைப் போல... நாங்களும் இப்போது அகதிகள்.
* *
இக்போ வழக்கு. எங்கே ஒரு மனிதன் படுத்துத்தூங்கி விழித்தெழுகிறானோ, அதுவே அவனுக்கு வீடு.
* *
அப்பாவின் பழைய சிநேகிதர் அகுபியூஸ். எப்பவும் அவர் புன்னகையில் வண்டலாய் சோகம் தெரியும், ''கடவுள் பயாஃப்ராவைக் காக்கட்டும்'' என்றுதான் பேச்செடுப்பார். இனப்படுகொலைகளில் அவரது அத்தனை குழந்தைகளும் பலியாகி விட்டார்கள். கரி படிந்த சமையலறையும், நாஸ்தியான கழிவறையும், காரை பேர்ந்த சுவர்களுமான தன் வீட்டை அவர் காட்டியபோது எனக்கு அழுகை முட்டியது. அந்த வீட்டைப்போய் வாடகைக்கு எடுக்கிறோமே என்பதால் அல்ல, அவரைப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது. எங்களுக்கு இப்படியோர் சிதிலமான வீட்டைத் தருகிறதில் அவருக்கு வேதனை, பாவம். கொண்டு வந்திருந்த உணவையும், சாமான்களையும், படுக்கிற பனையோலைப் பாய்களையும் கீழே இறக்கினோம். அறையின் மத்தியில் வானொலி. தினமும் அதையே சுற்றிச் சுற்றி வந்தோம். துடைத்துத் துப்புரவாக அதைப் பராமரித்தோம். ராணுவ அணிவகுப்புப் பாடல்கள் ஒலிபரப்பானபோது கூடவே நாங்களும் பாடினோம்...
நாங்கள் பயாஃப்ரன்கள்
வாழ்வா சாவா போர் இது எமக்கு
யேசுவின் பெயரால், ஜெயபேரிகை
வெல்வோம் நாங்கள், கொட்டு முரசே
டக் டக் ஒண்ணு ரெண்டு...
சில சமயம் பக்கத்து வீட்டுக்கார புதிய நண்பர்களும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள். பரந்த காற்றோட்டமான வெளியும், பளிங்கு மாடிப்படிகளுமான எங்கள் முன்னாள் வீட்டைப் பற்றி உரக்கச் பேசுவது பாடும்போது தவிர்க்கப் பட்டது. அலுப்பு மறைந்தது. எனுகுவை எங்கள் கையிலிருந்து எதிரிகள் ஆக்ரமித்து விட்டார்கள் என அப்போது நாங்கள் உரக்க ஒத்துக் கொள்ள வேண்டியதில்லை. .போர் அலுவலகம் இப்போது அப்பாவுக்கு சம்பளம் அல்ல, வெறும் படிகள்தான் தர முடிகிறது என்பதையும் மறக்கலாம். கசங்கிய சம்பள பில்லுடன் எல்லாத் துட்டையும் தம்பிடிக்காசு எடுத்துக் கொள்ளாமல் அப்பா அம்மாவிடம் தந்தார். நைஜீரியன் பவுண்டுகளை விட பயாஃப்ரன் பவுண்டுகள் எத்தனை அழகு. அழகான எழுத்துக்கள், தலைவர்களின் உருவங்கள்... ஆனால் பயாஃப்ரன் பணத்தைக் கொண்டு சந்தையில் நிறைய சாமான் வாங்கேலாது. மதிப்பு சரிந்து விட்டது.

சந்தைன்னா, ஒரே குப்பை கூளமான இடம். வியாபார மேஜைகள் கையொடிந்து காலொடிந்து முட்டுக் கொடுத்திருக்கும். உணவைவிட ஈக்கள் பட்டாளம் அதிகம். பூஞ்சை பூத்த மாமிசத்தில் அவை அப்பிக் கிடக்கும். அலந்து கறுத்துப் போன வாழைப்பழங்கள். மாமிசத்தையும் பழங்களையுங் காட்டிலும் ஈக்கள் கொழுத்து ஆரோக்கியமாய்த் தெரிந்தன. பெரிய பெரிய ஈக்கள். எல்லாவற்றையும் ஒரு நோட்டம் பார்த்தேன், இது சமாதான நேரமும் அல்ல, வழக்கமாய் சந்தைபோடும் இடமும் அது அல்ல, ஆனாலும், இப்போது நிலைமை சௌஜன்யமாக இருப்பதான பாவனையில் நான் எல்லாம் நிதானமாய்ப் பார்த்து கடைசியில் நோஞ்சான் கப்பைக்கிழங்கு வாங்கினேன் வழக்கம்போல, அதுதான் மலிவு, வயிறும் ரொம்பும். ஒடிசலான தண்டு, வெளிர் சிவப்புத் தோல். இதெல்லாம் நாங்கள் சாப்பிட்டதேயில்லை. அம்மாவிடம் ''விஷம் கிஷமா இருக்கப் போகுது'' என நான் பாதிகேலியாய் பயமுறுத்தினேன். அம்மாவும் சிரித்தாள். ''ஜனங்க வெறும் தோலைக்கூடத் தின்ன ஆரம்பிச்சாச்சி, இது ஆட்டுக்குப்போடற தீவனமாம்டி...''

மாதங்கள் உருண்டோடின. என் மாதவிலக்கை வைத்து நாளோடுவதை கவனித்தேன். இரத்தப்போக்கு அளவுகம்மியாய் சோகையாய் இருந்தது. நாம்தியைப் பற்றிய கவலை. அவனால் எங்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஏலாது. அவனுக்கு எதும் சம்பவிக்கலாம்... யாரும் தகவல் சொல்ல நான் இருக்குமிடம் தெரியாது. பயாஃப்ரா செய்திகளை உன்னிப்பாகக் கேட்டேன். பாதியிலேயே வானொலி ர்ர்ர்ரென்று இரைகிறது. வேணுன்னே மறிக்கிறார்கள் நைஜீரிய வானொலி, என்றான் ஒபி. நைஜர் ஆற்றில் ஆயிரக்கணக்கான நைஜீரியச் சேனையின் சடலங்கள் மிதக்கின்றன, என்றது பயாஃப்ரா வானொலி. செத்து மடிந்த, காயம் பட்ட ஆயிரக்கணக்கான எங்கள் படைவீரர்களைப் பட்டியல் இட்டது நைஜீரிய வானொலி., ரெண்டையும் ஒரே மாதிரியான கவனத்துடன் நான் கேட்டேன். பின் நானே சுயமாக சில கணிப்புகளை வைத்துக் கொண்டேன், அவையே சரி என நம்பினேன்.
* *
இக்போ முதுமொழி. பாம்பு விஷத்தைக் காட்டா விட்டால் பிள்ளைகள் அதை விறகுச்சுமை கட்ட பயன்படுத்தி விடுவார்கள்.
* *
வெக்கையான ஒரு நாளில் நாம்தி எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான். கண்மேல் ஒரு தழும்பு. ஆளே டொக்கு விழுந்து தோலே வற்றி உலர்ந்து போயிருந்தது. கிழிசல் சராய் இடுப்பிலேயே நிற்கவில்லை. அம்மா பதறி சந்தைக்கு ஓடி மூணு கோழிக் கழுத்தும், ரெண்டு சிறகும் வாங்கி வந்து சிறிது பனையெண்ணெயில் வறுத்து கோழிக்குழம்பு வைத்தாள்.. ''இது நம்ம நாம்திக்காக மட்டும்'' என்றாள் உற்சாகமாக. அம்மா கைப்பக்குவம் அலாதியானது. சமையல் புத்தகம் கித்தகம் இல்லாமலேயே வெறும் வெங்காயம் போட்டே கோழிக்குழம்பு அருமையாய்ச் செய்யும்.

நாம்தியைப் பக்கத்துப் பண்ணைக்குக் கூட்டிப்போனேன். முற்றி விளையுமுன்னே அறுவடையாகி யிருந்தது அந்த வயல். எல்லா வயலும் அப்படித்தான், இராக் களவு அதிகம். பால் முற்றி கதிர் பிடிக்குமுன் சோளம் அறு பட்டு, அட கீரைப் பாத்தியையே அரைஜாண் வளருமுன்னே களவாண்டோடுகிறார்கள். அவநம்பிக்கையால் அவசர அறுவடை, என்றான் ஒபி. ஒரு வாதமரத்தடியில் நாம்தி என்னைத் தரைபார்க்கச் சாய்த்தான். வத்தலும் தொத்தலுமான உடம்பு எனக்கு உறுத்தியது. என் முதுகைப் பிறாண்டினான். கசகசத்த கழுத்தைக் கடித்தான். காஞ்ச மாடு... அவன் அழுத்திய வேகம். என் சருமத்தைத் தாண்டி மண்ணே நுழைந்தாப் போல இருந்தது. அப்படியே பிரித்துக் கொள்ளாமல் ரொம்ப நேரம் மேலே இதமாய்க் கிடந்தான். எங்கள் ரெண்டுபேரின் இதயமும் ஒரே கதியில் துடித்தாப் போல பிரமை. இந்த யுத்தம் முடியாட்டி கூடப் பரவாயில்லை, என ஒரு பைத்தார எண்ணம். அப்பதான் எப்பவும் இந்த அவசரம், இந்த வேகம், இந்த அழுத்தம் வாய்க்கும். தொடை பிளத்தல். கலவி வாடை. மறக்க முடியாத கணம் அது. அப்புறம்தான் நாம்தி அழ ஆரம்பித்தான். அவன் அழுவான் என்பதை நினைத்தே பார்த்ததில்லை நான். பிரிட்டிஷ்காரன் நைஜீரியாவுக்கு கேட்கக் கேட்க ஆயுதம் தந்திட்டே இருக்கான். அவனுகளுக்கு இப்ப ரஷ்ய விமானங்கள் இருக்கு, அதை ஓட்ட எகிப்திய ஓட்டிகள். அமெரிக்கா நமக்கு உதவத் தயாரா இல்லை. நமக்குத் தடை இன்னும் விலக்கப்பட வில்லை. எங்களுக்கு இப்ப ரெண்டாளுக்கு ஒரு தவக்கு (துப்பாக்கி), சில அணிகளில் அதுகூட இல்லை, விவசாயக் கத்தியும் குத்தீட்டியுந்தான். ''அரக்கனுங்க, இக்போவாப் பிறந்த ஒரே காரணத்துக்காக பச்சைப் பிள்ளைகளையே சாவடிச்சிர்றானுங்க, பாத்தியே நீ?''

அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டேன், ஆனாலும் அவன் அழுகை அடங்கவில்லை. ''ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கானாடி?'' என்னைக் கேட்டான். ''சொல்லு இவளே, இருக்கானா?'' நான் அவனை ஆரத் தழுவிக்கொண்டேன். அவன் பேசுவதைக் கேட்டேன். ஷ்ர்ரில் என இரையும் பிள்ளைப்பூச்சிகள். என்னோடு ரெண்டுநாள் இருந்தான் அந்தமுறை, பிறகு பிரிகிறதாகச் சொன்னான். பிடித்திருந்த என் கையை விட அவனுக்கு மனசே இல்லை. அம்மா ஒரு சின்னப் பையில் புழுங்கரிசி தந்தனுப்பினாள்.

அந்த நாட்கள் இனி என் உள்ளத்தை விட்டு அகலாது. அந்த நாட்கள் என்றில்லை, நாம்தி பற்றிய ஞாபகங்கள். ஒண்ணொத்தையும் தனியாக ஆசுவாசமாக நான் அசை போட்டுக் கொள்வேன். எதிரி விமானங்கள் சீறி மேலே வட்டமிடும் தருணங்களில் அவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டேன். குண்டு விழும் கீச்சொலிகள். வெளியே இருந்த அத்தனை பேரும் பதுங்குகுழிக்குள் பாய்வோம். சின்ன அறையைப் போன்ற துளை. மேலே கட்டையடுக்கிய மறைப்பு. உள்ளே  ஈரத்தரை. அட்டகாசம், என்றான் ஒபி. உள்ளே இறங்கிய வேகத்தில் அங்கங்கே அவனுக்கு சிராய்ப்புகள், என்றாலும் வேடிக்கையாய் அதை நினைத்தான். புதிதாய் உழுதுபோட்டாப் போல மண்வாசனை. குண்டுச்சத்தம் ஓயும் வரை உள்ளே குழந்தைகள் பூச்சியும் மண்புழுவும் தேடினார்கள். விரலால் அந்த ஈரமண்ணைப் பிசைந்தேன். நாம்தியின் பல், நாக்கு, குரல் என நினைவுகள் அலைந்தன...

* *
இக்போ குடிகள் சொன்னார்கள். காதுகேளாதோரே நமஸ்காரம். பரலோகம் செவி சாய்க்கா விட்டால், இகலோகம் நம்மை விசாரிக்கும்.
* *
எதுவும் ஸ்திரமில்லை, அதனாலேயே அதற்கு என ஒரு மதிப்பு. அற்பமான சமாச்சாரங்கள் என்றாலும் வாழ்க்கை அச்சுறுத்தி அவற்றை ஊதிப் பெரிசாக்கி பிரதானமாக்கி விடுகிறது... துணிபோன்ற சப்பாத்தியே ருசியாய் இருந்தது  திடுதிப்பென்று அதைக்கூட எறிந்துவிட்டு நான் பதுங்குகுழிக்குள் ஒளிய வேண்டியிருக்கிறது. திரும்ப மேலேறி வருகையில் பக்கத்து ஆள் அவனோ அவன் குழந்தைகளோ அதைத் தின்றுகொண்டிருக்கலாம்.

நிறையப் பிள்ளைகள் ஓணான் பிடித்து வெறுதே திரிகிறார்கள், அவர்களுக்குப் படிப்பு கிடிப்பு சொல்லித் தந்தால் என்ன, என்றான் ஒபி. ''குண்டுவீச்சே அவர்களுக்கு சகஜமாப் போச்சே'' என அவன் தலையை உதறிக் கொண்டான். நல்ல வேப்ப மரத்தடியில் குளுமையான இடம் ஒன்றைத் தேர்வு செய்தான். சிமின்ட் ஜாலிகளில் மரச்சட்டங்களை வைத்து உட்கார வசதி பண்ணிக் கொண்டோம். மரத்தில் தொங்கவிட்ட தட்டியே கரும்பலகை. நான் ஆங்கிலம் நடத்தினேன். ஒபி கணிதமும் சரித்திரமும். என் வகுப்பில் குசுகுசுவென்று பேச்சும் சிரிப்புமாய் இருந்த பிள்ளைகள் அவனிடம் சமத்தாகி விட்டார்கள். என்னவோ வசிய வசீகரம் அவனிடம் இருந்தது. கரிக்கட்டியால் அவன் பலகையில் கிறுக்கியபடி கலகலப்பாய்ப் பாடம் நடத்தினான். பிறகு வியர்வை முகத்தைத் துடைத்து கரியை வரி வரியாய் ஈஷிக்கொண்டான். படிப்பதையும் விளையாடுவதையும் சேர்த்தே அவன் புகட்டினான் போல. ஒருமுறை பிள்ளைகளை பெர்லின் மாநாட்டை நடித்துக் காட்டச் சொன்னான். ஆப்ரிக்காவைத் துண்டாடும் ஐரோப்பியர்களாக மாணவர்கள் உருமாறினார்கள். மலைகளையும் நதிகளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் எடுத்துக்கொண்டும் விட்டுக்கொடுத்தும் விளையாடினார்கள், மலையைக் கண்டார்களா, நதியைக் கண்டார்களா... எதுவும் தெரியாத பிள்ளைகள். ஒபி பிஸ்மார்க்காக நடித்தான். ''இளம் பயாஃப்ரன்களுக்கான எனது அன்பளிப்பு'' என்றான் அவன் நக்கலாய்.

வேடிக்கைதான், அவனே ஒரு குழந்தை. எதிர்கால பயாஃப்ரன். நூத்துக் கிழவனாட்டம் பெரியமனுஷ பாவனை. சிரிப்பு வந்தது.. அவன் சிறு பிள்ளை என்றே பல சந்தர்ப்பங்களில் எனக்கே மறந்து போனது. ''எலேய் உன் பல்லுல கடிக்க முடியாதுன்னு நாந்தான் உனக்காக மாட்டுக்கறியைக் கடிச்சுச் சவைச்சு பின் திரும்ப உன் வாய்ல போடுவேன்...'' நான் அவனைப் பகடியடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ''அதெல்லாம் ஒண்ணும் ஞாபகம் இல்லை'' என்றான் முகம்மாறி.

வகுப்புகள் சூரியன் உக்கிரமாகுமுன் காலையோடு முடிந்துவிடும், அதபின் நானும், ஒபியும், சில பொம்பளைகளும், காயம்பட்டு வீடுதிரும்பிய சில ஆட்களுமாக தோட்டந் துரவுகளை, புதர்களைத் துருவித் தேடினோம். நைஜீரிய ஆட்களோ, காட்டிக்கொடுக்கும் பயாப்ரன் ஒற்றர்களோ பதுங்கி யிருக்கிறார்களா, காயம்பட்டோ இறந்தோ கிடக்கிறார்களா? உலர்ந்து உதிர்ந்த பழங்களும் நிலக்கடலைகளுமே கிடந்தன. நாங்கள் நைஜீரியன்களைப் பற்றிப் பேசினோம். எங்களுக்கு யுத்தத்தில் உதவிசெய்யும் பிரஞ்சு மற்றும் தான்சேனிய சேனை பற்றி, அவற்றின் வீரதீரம் பற்றிப் பேசினோம். ஐயோ வெள்ளைக்காரன் மோசமான பயலுவ, என்று பேசினோம். சூணாவயிறு பற்றியும் பேசினோம். அதன் ஆரம்ப நிலையில் எத்தனை பிள்ளைகள் சொஸ்தப்படுத்தப் பட்டார்கள் என்று பேசினோம். யாருமே பறித்துச் சாப்பிடாத ஓரு மரத்தின் இலைகளை குழந்தைகள் உண்ண வேண்டியிருந்தது. வயிறு நிரம்பியதே தவிர அதில் ஒரு சத்தும் கிடையாது. ஆனால் அந்த இலைகள் மருந்து என்கிற கதைகளை நாங்கள் நம்ப வேண்டியிருந்தது. இந்த இலையில் சத்து இருப்பதாகக் கதை கட்டுவதும், அதை நம்ப வைப்பதும், நாங்களே அதை நம்புவதும் வேண்டித்தான் இருந்தது.

இந்த மாதிரி கதைகளை கொஞ்சலாய்ப் பேசிப்  பரப்புவது எனக்குப் பிடித்திருந்தது, நெட்டையாய்ப் புல் மண்டிய பொட்டலில், நாங்கள் இப்படி கதை பேசியபடிப் போ ... நின்றோம். ஒரு உடல். கண்ணில் படுமுன்னே வாடை அறைந்தது. மூச்சுத் திணறி, மூளையே மரத்துப் போனது. ''சனியன், நைஜீரியன்!'' என்றாள் ஒருத்தி. நாங்கள் அதைச்சுற்றி நின்றபோது ஊதிய அந்த உடலில் இருந்து ஈக்கள் கொத்தாய் எழும்பிப் பறந்தன. சாம்பல் தேகம். கண் திறந்திருந்தது. வீங்கிய முகத்தின் கோரமான வரிகள் கலவரப்படுத்தின. ''உயிரோடு இவனை நாம கண்டுபிடிச்சிருக்கப்டாதா?'' என்றான் ஒரு பையன். ''தூத்தெறி, தேவிடியா மவன்...'' என்று யாரோ சொல்ல, ஒரு சிறுமி அவன் பிணத்தில் காறித் துப்பினாள். சற்று தள்ளி வல்லூறுகள் காத்திருந்தன. தாள முடியாத ஒருத்தி உவ்வேயென்று ஓங்கரித்தாள். அவனைப் புதைப்பதைப் பற்றி யாருமே பேசவில்லை. அந்த வாடையும், சுற்றும் ஈப்பட்டாளமும், அந்த வெக்கையுமாய் எனக்கு கிறுகிறுப்பாய் இருந்தது... இவன் எப்படியிருந்தான், என்ன மாதிரி வாழ்க்கை இவனுக்கு வாய்த்திருக்கும் என்றெல்லாம் நான் யோசித்தேன். இவனுக்கும் குடும்பம்... வழிமேல் விழி வைத்து இவனுக்காக, இவன் பற்றிய சேதிக்காக ஒரு பெண்டாட்டி, சின்னக் குழந்தைகளுக்கு அவள், ''அப்பா சீக்கிரமே வந்துருவாரு,'' என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருப்பாள். அவன் கிளம்பிப் போகும்போது அவன் அம்மா எப்படிப் பதறிக் கதறியிருப்பாள். அண்ணன் தம்பிகள், அக்கா தங்கச்சிகள், மச்சான் மாமன்கள், அவனது பிரிவு எத்தனை பேரை பாதிக்கும்... வீட்டில் இனி அவன் பயன்படுத்திய உடைகள், பிரார்த்தனைக்கான பாய், குனு பானம் அருந்தும் அவனது மரக்குவளை...

ஓவென்று அழ ஆரம்பித்தேன்.

ஒபி என்னைப் பிடித்துக் கொண்டான். அமைதியும் அவநம்பிக்கையுமாய் அவன் என்னைப் பார்த்தான். ''இவனைப் போலாட்கள் தான் இஃபேகா அத்தையைச் சாவடிச்சது'' என்றான். அவன் கையை விலக்கினேன். அழுகையை என்னால் அடக்க முடியவில்லை
* *
இக்போ மூதுரை. அடுத்த மீனைத் தின்னாமல் எந்த மீனும் கொழுக்க முடியாது.
* *
நாம்தியைப் பத்தி தகவலே இல்லை. பக்கத்தாட்கள் தங்கள் மகனைப் பற்றியோ, புருஷமார் பற்றியோ தகவல் அறிந்தால் அவர்களது நல்லதிர்ஷ்டம் போலவே எனக்கும் அமைய வேண்டும் என்றிருந்தது. நாள்கணக்கில் நான் அவர்களுடனேயே இருந்தேன். மெல்லிய பிரியமான நம்பிக்கையான குரலில் ஒபி, நாம்தி நலமாய் இருப்பதாகச் சொன்னான். கிழங்குப்புட்டு அவித்துத் தின்ன மாதங்களிலும், கீரைத் தண்டைத் தின்ன சமயங்களிலும்,  எண்ணெயும் மீனும் வறுத்து உப்பு சேர்த்து ருசியாய்த் தின்ன காலங்களைப் பற்றி நாங்கள் அசைபோட்டபடி யிருந்த காலங்களிலும் அவன் எனக்கு நாம்தி நலமாய் இருப்பதாய்த் திரும்பத் திரும்பச் சொன்னான்... அக்கம் பக்கத்தார் அறியாதபடி கொஞ்சம் உணவை நான் ஒரு பாயில் சுருட்டி கதவுக்குப் பின்னால் ஒளித்து வைத்தேன். அவர்களும் அப்படியே ஒளித்து வைத்துக் கொண்டார்கள். சாயந்தரமானால் அதைப் பிரித்தெடுத்து சமையல் அறையில் ஒன்றுகூடி உப்பு பற்றிப் பேசியபடியே அதைச் சமைத்துச் சாப்பிட்டோம். நைஜீரியாவில் உப்பு கிடைத்து வந்தது. உப்பு கிடைக்கிறதால் எங்கள் ஜனங்கள் எல்லைவிட்டு எல்லை தாண்டினார்கள். உப்பில்லாப் பண்டத்தைத் தின்னு நாக்குச் செத்துப்போன ஒருத்தி சமையலறையில் இருந்து சட்டையைக் கிழிச்சிக்கிட்டுத் தெருவில் உருண்டு மண்ணைச் சுவைத்து ஊளையிட்டாள். சமையல்கட்டு தரையில் உட்கார்ந்துகொண்டு மத்தாட்கள் பேசுவதைக் கேட்டபடி நான் உப்பின் சுவையை நாவூற நினைத்துப் பார்த்தேன். உப்பைக் கலக்க என்று வீட்டில் மிளகு மற்றும் உப்பு தூவும் குப்பிகள் இருந்ததே கனவுபோல இருக்கிறது. நான் உப்பை வீணாகக் கொட்டியிருக்கிறேன், குப்பியைக் கழுவும்போது அடிவண்டலாய்ப் படிந்த சுத்தமான பொடி உப்பு.. நாம்தியின் நினைவுகள், நல்ல உப்புபோட்ட சாப்பாடு போலத்தானே, அவையும்!

எங்களது முன்னாள் பாஸ்டர் தாமியன் பக்கத்து அமன்துக்பா அகதி முகாமில் சேவை பண்ணுவதாக அகுபியூஸ் வந்து சொன்னார்... முகாம் கிட்டத்திலதான், ரெண்டு ஊர் தள்ளி. ஆனால் நிறையப் பேர் நிறைய வதந்திகளை உலவ விட்டார்கள். அந்தாள் அங்கே இருக்காரு, இந்தாளைப் பாத்தேன். ஒண்ணும் நிச்சயமில்லை. இருந்தாங்காட்டியும் ஒரு நப்பாசை, அம்மாவிடம் நாம போயிப் பார்க்கலாமா பாஸ்டரை, என்று கேட்டேன். பாக்கோணுந்தான், என்றாள் அம்மா, அவங்களைப் பார்த்தே ரெண்டு முழு வருஷம் இருக்குமே. ''அதுக்கும் மேலயே இருக்கும்...'' என அம்மாவைப் பகடியடித்தேன், நாங்கள் என்னவோ வெளியே அடிக்கடி நற்செய்திக் கூட்டம், உபவாச ஜெபம்னு போறாப் போல. போனாத்தானே பார்க்கக் கொள்ள முடியும்?... போதகர்களுக்கு இரவுவிமானங்கள் மூலம் கரிதாஸ் பன்னாட்டுசபை உணவுப் பொருட்கள் ரகசியமாய் அனுப்பி வைத்தார்கள். அதை போதகர்கள் பாமர ஜனங்களுக்கு அளித்தார்கள்... சோளமிட்ட பன்றியிறைச்சி, குளூகோஸ், பால்பவுடர். முக்கியமா உப்பு. சட்டென இந்த விஷயம் நினைவுக்கு வந்தாலும், நானும் அம்மாவும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை.

ஃபாதர் தாமியன் ஒல்லிப்பிச்சான். முகம் ஒடுங்கி நிழலும் பள்ளமுமாய்க் கிடந்தது. அகதி முகாமில் குழந்தைகளுக்கு அடுத்தபடி அவர் திடகாத்திரம். குழந்தைகள் கையும் காலும் எலும்பு துருத்தி பார்க்கவே உறுத்தலாய்... சிக்கு பிடித்த தலையும் பலூனாய் ஊதிய வயிறுமாய். கண்கள் முகக் குழிக்குள் உள்ளொடுங்கிக் கிடந்தன. மத்த வேதக்கார ஆட்களிடம் அருட்தந்தை தாமியன் என்னையும் அம்மாவையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் எல்லாரும் புனித ஆவியாரின் ஐரிஷ் சபைக்காரர்கள். வெள்ளைக்கார துரைகள். சூரியக் குளியலில் சிவந்த முகத்தின் கம்பீரமான பொலிவு... அதைத் தொட்டுணர ஆசையாய் இருந்தது. தாமியன் ஐயா தனது சேவைகளைப் பத்தி நிறையப் பேசினார், கொஞ்ச கொஞ்சமாய் இந்தப் பிள்ளைகள் செத்துக் கிட்டிருக்கு... என்றார். அம்மா எதோ பேசி பேச்சை மாற்றிப் பார்த்தாள். பிறத்தியார் இப்படிச் செய்தால், மட்டு மருவாதி கிடையாதாடி உனக்கு முண்டம், என வைவாள். ஒரு வழியாய் அவர் பிள்ளைகளைப் பத்தியும், சூணாவயிற்று வியாதி பத்தியும் பேச்சை நிறுத்தினார். அவருக்கு எங்களை அனுப்பி வைக்க மனசேயில்லை. பேச ஏங்கிக் கிடந்தார். அம்மாவிடம் மீன்மாவும், பதம்செய்த இறைச்சியும், உப்பும் ஒரு பையில்போட்டு கொடுத்தனுப்பினார்.

அந்தப் பிள்ளைங்களைப் பத்தி நம்மளாண்ட ஏன் கதையளக்கணும் இந்தப் பன்னாடை, அம்மா வரும் வழியில் கத்தினாள். நாம அதுங்களுக்கு என்னத்தச் செஞ்சி கிழிச்சிற முடியும்? ''சரி விடும்மா,'' என்றேன் நான். தன் வேலை பத்தி யாராண்டயாவது அவரும் சொல்லிக்கிற வேணாமா... நம்மூர்ல பஜார்ல பிள்ளைங்களைச் சுத்தி வெச்சிக்கிட்டு ஸ்தோத்திரப் பாடல்களை யெல்லாம் எப்பிடி உல்ட்டாவா ராகம் மாத்திப் பாடி, அதுங்களைச் சிரிக்க வைப்பாரு, உனக்கு ஞாபகம் இல்லியா?

ஆனால் அம்மா நிறுத்தவில்லை, மனசு ஆறவில்லை அவளுக்கு. நானும் படபடப்புடன் வார்த்தைகளைச் சிந்த ஆரம்பித்தேன். பிள்ளைங்களைப் பத்தி நம்மகிட்ட அவர் அழுது மூக்கைச் சிந்த வேண்டிய அவசியம் என்ன? நாம கேட்டமா? நம்ம கதையே டப்பா டான்சாடிட்டிருக்கு இங்க... தரித்திரம் தரித்திரம்னு பக்கத்தூர் போனாக்க, அங்க ரெண்டு தரித்திரம் டங்கு டங்குனு எதிர்வந்திச்சாம்...

தெருவில் தாண்டோரா அடித்து கத்திக் கொண்டே ஒருவன் போனான். நமக்கு உணவளிக்க முன்வந்திருக்கிற வெள்ளைக்கார மகராசாக்களையிட்டு நன்றியுடன் ஜெபிக்க வேண்டும். 'புனித ஜான் பொட்டல்'பக்கம் புதிய நிவாரண முகாம் அமைக்கப் படுகிறது. எல்லா வெள்ளைக்காரனும கொலைபாதகன்கள் அல்ல... டக்கர டக்கர டக்கர். எல்லாருமே நைஜீரியாவுக்கு ராணுவ உதவி செய்கிறார்கள் என்றில்லை, டக்கர டக்கர டக்கர்!

நிவாரண முகாமில், அடித்துப் பிடித்து நான் உதவிக்குப் போராடினேன், பொய்கள் சரமாரியாகச் சொல்லி இரக்கம் சம்பாதிக்க முயன்றேன். அழுது கெஞ்சி மன்றாடினேன். மெத்தப் படிச்ச மேதாவின்றாப் போல பிரிட்டிஷ் மோஸ்தரில் ஆங்கிலம் பேசினேன், பிறகு எல்லாம் நினைத்து கண்ணீர் உகுத்து கேவிக் கேவி அழுதேன். சுற்றியிருக்கிற எதைப் பத்தியும் பார்க்காமல் கண்ணை இறுக மூடிக்கொண்டு, சுயநலப் பேயாய் இயங்கி யிருக்கிறேன், மத்தெல்லாரும் செத்து மடிஞ்சாலும் எனக்குக் கவலையில்லை போல கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்... திரும்புகையில் கண்ணீர் மறைத்து விடாதபடி கண்ணை விரியத் திறந்து ஒவ்வொண்ணையும் பார்த்தேன். தாளில் சுற்றி கையில் உணவுப்பொருள். வாங்கியமட்டும் லாபம். பதப்படுத்திய முட்டைக்கரு. பால்பவுடர். கருவாடு. சோளமாவு...

போரில் குண்டுக்காயம் பட்ட ஜவான்கள் பஞ்சைப் பனாதிகளாய் நிவாரண மையத்தைச் சுற்றி பினாத்தியபடி திரிந்தார்கள். குழந்தைகள் அவர்களைப் பார்த்துக் கலவரப்பட்டு ஓடியொளிந்தார்கள். ஜவான்கள் என் பின்னாலேயே வந்து கெஞ்சினார்கள், முடிந்தால் என்னிடமிருந்து உணவைப் பறித்துக் கொள்ள முயன்றார்கள். நான் அவர்களைத் துரத்தியடித்தேன், திட்டி காறித் துப்பினேன். நான் பிடித்துத் தள்ளியதில் ஒராள் பொத்தென்று கீழே விழுந்தான், அவன் திரும்ப எழுந்து கொண்டானா என்றுகூட நான் பார்க்கவில்லை. அவர்கள் ஒருகாலத்தில் கண்ணியமிக்க பயாஃப்ரன் படைவீரர்கள், நாம்தியைப் போல... அதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

நிவாரண முகாமிலிருந்து வாங்கி வந்த ஆகாரத்தில் கோளாறா, கிடைத்ததையெல்லாம் வயிற்றுக்குள் தள்ளிய பசிக்கொடுமையா, எதனால் ஒபி நோய்வாய்ப் பட்டான் தெரியவில்லை. கெட்டுப்போன உணவாக இருந்தாலும் அதன் பூஞ்சகாளானைப் பிய்த்தெறிந்து விட்டு, ஒட்டிக் கிடந்த எறும்புகளைத் தட்டிவிட்டுவிட்டு நாங்கள் வாயில் போட்டுக் கொண்டோம். ஒபிக்கு வயிற்றுப்போக்கு. இனிமா கொடுத்து அவன் வயிற்றைக் காலி பண்ணிய போதிலும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆ ஊ என்றான் ஒபி. அம்மா ஒரு பழைய வாளியை அவனுக்காக வைத்தாள், அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து அதில் உட்கார்த்தி உதவினாள், அதை வெளியே கொண்டுபோய்க் கொட்டிவிட்டு வந்தாள். இருந்த இடத்திலயே ராஜோபசாரம், ஒபி சிரித்தான். இப்பவும் அவன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தான், என்றாலும் அதில் பயாஃப்ரா பத்தி அதிகம் இல்லை, பழைய கால நினைவுகளை அதிகம் அசைபோட்டான். அம்மா முகத்துக்குப் பாலும் தேனுமாக போஷாக்கு செய்துகொள்வது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்க வீட்டின் புறக்கடைப் புளியமரம், தேனீக்கள் அங்கே பெரிசாய்க் கூடு வைக்கும். அல்பத்ராஸ் மருத்துவமனைக்கு அம்மா போய், எனுகுவில் தான் அறிந்த அத்தனை வைத்தியர்மார் பேரையும் பயன்படுத்தி, வராந்தாவில் நூத்துக்கணக்கில் காத்திருக்கும் பெண்கள் திரளில் தன்முறை சீக்கிரம் வருமாறு பார்த்துக் கொண்டாள். வயிற்றுப்போக்கு மாத்திரைகள் அஞ்சுதான் தந்தார்கள், அதையே உடைத்து பாதி பாதியாகப் பாவிக்க வேண்டும். மாத்திரையும் அதிக நாட்கள் வரும், வயிற்றுப் போக்கும் அடங்கும்... என்றுவிட்டார்கள். சொன்னவன் டாக்டர் படிப்பில் கடைசி வருஷங்கூட முடிச்சானா தெரியாது, ரெண்டு வருஷமாய் பயாஃப்ரா யுத்தபூமி, கத்துக்குட்டிகள் டாக்டரின் வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயம். பெரிய டாக்டர்கள் யுத்தகளத்தில் இருந்து வரும் ஜவான்களுக்கு சேதமடைந்த உறுப்புகளை நீக்கி ஆளைப் பிழைக்க வைக்கப் போராடினார்கள். அந்த அல்பத்ராஸ் ஆஸ்பத்திரி கூரையே போன தாக்குதலில் டப்னு தொப்பி தூக்கினாப் போலத் தூக்கிட்டது, இதில் நகைச்சுவை என்ன, ஆனால் ஒபி புன்னகைத்தான், அதைப் பார்த்து அம்மாவும் புன்னகைத்தாள். நானும்.

இன்னும் ஒபி சொஸ்தப்படவில்லை, படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்கவில்லை... துயோமா அறைக்குள் ஓடிவந்தாள். அவள் பெண்ணுக்கு ஆஸ்த்மா தொந்தரவு, மூத்திரமும் கெட்டுப்போன ஊறுகாயும் முகர்ந்தால் ஆஸ்த்மா அடங்கும் என்று யாரோ சொல்ல அதை முயற்சி செய்து கொண்டிருந்தார்கள், திண்ணையில் அவள் படுத்திருந்தாள். ''நம்ம ஜவான்கள் வர்றாங்க...'' என்றாள் துயோமா. சந்தையில கடைபோட்டுப் பிழைக்கிறவள், பயாஃப்ராவுக்கு முன் அம்மாவுக்கும் அவளுக்கும் எந்தப் பிராப்தியும் இல்லை, யுத்தம் அவர்களை ஒரே தரத்துக்கு அடக்கி முடிச்சிட்டு விட்டது. இப்ப வாரமாச்சின்னா இவளுக்கு அவளும் அவளுக்கு இவளும் தலைபின்னிவிட்டுக் கொள்கிறார்கள். ''ஜல்தி!'' அவள் கத்தினாள். ''ஒபிய வெளிய கொண்டு வாங்க... அவனை ஒளிச்சி வெச்சிறலாம்.'' நடந்த விஷயம் எனக்கு மூளையில் உறைக்கவே நேரமெடுத்தது, அம்மா ஒபியைக் கைத்தாங்கலாக எழுப்பி வேகமாய் வெளியே கூட்டிவந்ததைப் பார்த்தேன். பயாஃப்ரா ஜவான்கள் யுத்தத்துக்கு ஆள் பத்தாமல் இளைஞர்களை வீடுவீடாகப் அரிந்து போர்க்களத்துக்கு தவக்கு தந்து அனுப்பி வைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தோம். ஒருவாரம் முன்னால் பக்கத்துத் தெருவில் ஒரு பாலகனைப் பிடித்துப் போய்விட்டார்கள். ஒபி அவனுக்கு பத்துப் பன்னெண்டு வயசுதான் இருக்கும் என்று சொன்னான். அவர்கள் அபாகலிகி பகுதியில் இருந்து புகலாய் இங்கு வந்த சனம், அவர்களிடையே ஒரு வழக்கம். பிள்ளை இறந்துபோனால் அம்மாக்காரி முடியை வெட்டிக் கொள்வாள். மகனை ஜவான்கள் பிடித்துக்கொண்டு போவதை அம்மாக்காரி பார்த்தாள், அவளே உள்ளேபோய் ஒரு சவரக்கத்தியை எடுத்து தலையை மொட்டையடித்துக் கொண்டாள்...

போன தாக்குதலில் குண்டுவிழுந்து உத்திரம் பிளந்து மோட்டில் பெரிய துவாரம். ஒபியும் இன்னும் ரெண்டு பையன்களும் அதில் ஒளிந்துகொண்டார்கள். ஜவான்கள் நாலு பேர் வந்து தேடினார்கள், வற்றிய தேகமும் அலுத்த கண்களுமாய் இருந்தார்கள். உங்களுக்கு நாம்தி தெரியுமா, கேள்விப்பட்டிருக்கிறீர்களா, என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று தெரிந்தும் ஒரு நப்பாசையில் கேட்டுவைத்தேன். கக்கூஸ் வரை கூட விடாமல் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். அம்மாவிடம் ''யாரையும் ஒளிச்சி கிளிச்சி வைக்கலியே,'' என்று கேட்டார்கள். ''நைஜீரியனைக் காட்டிலும், நம்மாளுகள்ல சண்டித்தனம் பண்றாம் பாரு, அவன் மோசமான லவ்டகபால்,'' என்றார்கள். மிருதுவான குரலில் புன்னகையுடன் அம்மா பேசினாள். அப்பாவோடு விருந்தாளிகள் வந்தால்  இப்படித்தான் பிரியமாய் அம்மா பேசும். பேசியபடியே ஜவான்களுக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் போனபின், ஒபி ''உடம்பு தாவலையாகட்டும், நானே போய்ச் சேர்ந்துக்கறேன், பயாஃப்ரா மேல் ஆணை!'' என்றான். பெர்சியன் யுத்தத்தில் பதினஞ்சு வயசுப் பிள்ளைகளெல்லாம் சண்டை போடவில்லையா... அம்மா எழுந்துவந்து அவன் கன்னத்தில் பளாரென்று விட்டாள் ஒரு அறை. அப்படியே விரல் பதிந்து விட்டது.
* *
இக்போ வழக்கு. குழம்புச்சட்டியில் எகிறிக் குதிக்கும் கோழி, கத்திக்கு அஞ்சவில்லை என்று சவடால் பேசும்.
* *
பதுங்குகுழி கிட்டத்தில் நாங்கள் வந்தபோது, எதிரி விமானத்தைச் சுடும் துப்பாக்கியோசைகள். சரியா வந்துட்டம், என்று அம்மா சிரித்தபடி உள்ளே குதித்தாள். நான் சிரிக்க முயன்றேன், பயத்தில் உதடு கோணிக் கொண்டது.  நிவாரண முகாம் போய்த் திரும்பி வந்துகொண்டிருந்தோம். வாரித் தூற்றும் புழுதிக்காற்றில் என் உதடுகள் காய்ந்து காந்தின. அதிர்ஷ்டமில்லாத நேரம், முகாமில் எதுவுமே கிடைக்கவில்லை, வெறுங்கையுடன் திரும்பினோம்.

குழிக்குள் மக்கள் கூக்குரலிட்டார்கள், சாமி, ஆண்டவா, யேசுவே, ரட்சகா... கையில் பச்சைக் குழந்தையை ஏந்தியபடி கையே வலித்து மரத்துப்போய் ஒரு அம்மா என்னருகில். உள்ளே வெளிச்சமாய் இல்லை, என்றாலும் அந்தக் குழந்தையின் உடம்பெங்கும் வரிவரியாய் தடிப்புகள், அம்மா சுத்துமுத்தும் தேடி ''ஒபி எங்கடி?'' என என் கையை அழுத்தினாள். ''என்ன கோளாறு இந்தப் பயலுக்கு, குண்டுச் சத்தம் கேக்கலியாங்காட்டியும்...'' எழுந்துகொண்டாள். ஒபியைத் தேடிப் பார்க்கிறேன், சத்தம் எங்கியோ தொலவெட்டுலேர்ந்து வருது, என முணுமுணுத்துக் கொண்டாள். அது சும்மாச் சொல்றது. சத்தம் ரொம்பக் கிட்டத்தில், என்னமா அதிருது... அம்மாவை அப்படியே அசையாதபடி அழுத்திப் பிடித்துக் கொள்ள முயன்றேன். பசியும், நடையலுப்புமாய் இருந்தேன், உடம்பில் தெம்பே இல்லை... அம்மா என்னை உதறிவிட்டு குழிக்கு மேலேறினாள்.

அடுத்துக் கேட்ட பேரிடி... என் காதுக்குள் எதோ கலகலத்து விட்டது. லேசாய்க் காதைச் சாய்ச்சேன்னா கொளகொளன்னு விழுந்து வழியும் போலிருந்தது. தலைமேலே சரசரவென்று சிதிலங்கள், இடிபாடுகள். சிமென்ட் சுவர்கள் நொறுங்கின. கண்ணாடிச் சிதறல்கள், முறிந்து விழும் மரங்கள்... கண்ணை இறுக மூடிக் கொண்டேன், என் நினைவெல்லாம் நாம்தியிடம், காதில் ஒரே ஒரு குரல், நாம்தியின் பேச்சுக்குரல்... குண்டுவீச்சு முடியும்வரை வேறெதையும் நான் நினைக்கவேயில்லை. பிறகு துரிதமாய் குழியை விட்டு வெளியேறினேன். தெருவெங்கும் கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தன சடலங்கள். குழி வாசலிலேயே சில கிடந்ததுதான் ஆக சோகம். அவை இன்னும் அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன. எனுகுவில் எங்கள் சமையற்காரி கோழியை அறுப்பாள், கழுத்தறு பட்டதும் அவை புழுதியிறைய இறைய இப்படித்தான் தவித்துத் துடிக்கும்... உயிர் டாடா சொல்கிறது, என்று ஒபி வேடிக்கை பண்ணுவான்.

ஊளையாய் அலறியபடி அவைகளைப் பார்த்தேன், எல்லாரும்  தெரிந்தவர்கள்... அம்மாவும் ஒபியும் அதில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இல்லை. பொட்டலில், அடிபட்டவர்களின் காயத்தை அம்மா கழுவிக் கொள்ள உதவிக் கொண்டிருந்தாள், ஒபி தரைப்புழுதியில் என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவு அஜாக்கிரதையாவா இருப்பே, என அம்மா அவனைத் திட்டவில்லை. இப்படியா பதறியடிச்சி மேலேறி வருவே, என நானும் அம்மாவைத் திட்டவில்லை. சமையல்கட்டுக்குள் புகுந்து மரச் சீனிக் கிழங்கை ஊற வைத்தேன், இராத்திரிப் பாட்டைப் பார்க்கணுமே...

அன்றைக்கு ராத்திரி ஒபி இறந்து போனான். ஒருவேளை அடுத்தநாள் காலையோ? காலையில் அப்பா அவனை உலுக்கியபோது அவனிடம் அசைவே இல்லை, அதுதான் தெரியும். அம்மா அவன்மேல் விழுந்து கதறியபோதும் அவன் அப்படியே கிடந்தான். நான் போய் அவனை அசைத்தேன், தட்டினேன், குலுக்கி உலுக்கி புரட்டி யெடுத்தேன். அவன் உடல் குளிர்ந்திருந்தது.

''மாண்டவர் வருவாரோ மீண்டு?'' என்றார் அப்பா, என்னவோ அதை ரொம்பச் சத்தமாய்த் தனக்கே போல தானே தன்னை நம்புகிறாப் போலச் சொல்லிக் கொண்டார். அலங்காரப் பெட்டியை அம்மா எடுத்து வந்து, ஒபியின் கட்டைவிரலை நகம்வெட்டிச் சீராக்கினாள். ''ஏய் என்ன செய்யறே?'' என்று அப்பா கீச்சிட்டு அழ ஆரம்பித்தார். ஆம்பளை அழுகை அல்ல அது, ஆம்பளையாட்கள் மௌனமாய் கண்ணீரை வழியவிட்டு அழுவார்கள். அப்பா பேதலித்த வெற்றொலிகளுடன் அழுது அரற்றினார். அப்பா அப்படியே ஊதிப் பெருகுவது போலவும், அறையே ஆடுகிறாப்போலவும் இருந்தது. நெஞ்சில் தண்ணிப் பீப்பாயை ஏற்றி வைத்தாப் போல பாரம். அப்படியே தரையில் உருண்டு அந்தத் தண்ணீரைச் சரித்துக் கொட்ட முயன்றேன். வெளியே என்னவோ சத்தம். அல்லது என்னுள்ளேயே தானோ? அப்பா குரலா? மாண்டவர் வருவாரோ மீண்டு?... ஒபி இறந்து விட்டான். உடம்பு நடுங்க சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒபி... அவனைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்புடன் நினைவுகளை அளைந்தேன். உள்ளே வெறுமையாய்க் கிடந்தது. எத்தனை சாதனைக்காரப் பிள்ளை அது. குழந்தைத்தனம் மாறாத தம்பி அது. எதுவும் என் ஞாபகத்தில் அப்போது மேலெழும்பி வரவில்லை. முந்தைய ராத்திரி அவன் பேசியதேகூட வரவில்லை. ஒபி என்னுடனேயே இருந்தான், என்பதால் அவனை நான் அத்தனை இதுவாய் கவனிக்கவில்லை, கோவில் மகிமை உள்ளூர்க்காரனுக்குத் தெரியாது என்பார்கள், அந்தக் கதை. எப்பவும் என்கூடவே ஒபி இருந்தான், அவன் இல்லாமல் போவான் என்பதையே நான் நம்பவில்லை. ஒபியைப் பற்றி பயம் இல்லவே இல்லை எனக்கு, நாம்தியைப் பற்றி இருந்தது, ஒருநாள் நாம்திக்காக நான் அழுவேன், என்று உள்ளூற பயந்தபடி யிருந்தேன். ஆக ஒபிக்காக எப்படி அழுவது என்று தெரியவில்லை. அழுகையை விட, பயத்தை விட, திகைப்பு அதிகம். தலையரித்தது, சொறிகிறேன் பேர்வழி என்று அழுத்திக் கீறி விட்டேன் போல, தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. கொத்தாய் மயிரைப் பிடித்து மேலும் மேலும் பிய்த்துப் பிடுங்கி தரையில் வீசியபடி, அம்மா அசாத்திய நிதானத்துடன் அவன் நகங்களை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒபி இறந்தபின்பே கட்டுதளர்ந்த பலவீனம்.. மலேரியா ஜுரம் வந்தாப் போல காய்ச்சலாய் நடுக்கமாய் இருந்தது. ஒட்டுதலே இல்லாத வாழ்க்கை, ஆனால் என்னை அது விரைவாய் இழுத்துப் போகிறது. அவசர கதி எல்லாமே, கொல்லையில் ஒபியைப் புதைத்தது கூட ஒரு அவசரத்தில் தான். ஒரு பழைய மரத்தில் வம்பாடு பட்டு தானே ஒரு சிலுவையை அப்பா வடித்து அந்தக் கல்லறையில் வைத்தார். அக்கம்பக்கத்தாரும், அருளாளர் தாமியனும், கதறியழும் மாணவப் பிள்ளைகளும் கலைந்து போனபின், அம்மா என்ன கண்றாவிடி இது, என்று ஏசி அந்தச் சிலுவையை எத்திச் சாய்த்தாள். பிடுங்கி உடைத்தெறிந்தாள். பெத்த வயிறு கொதிக்கிறது...

யுத்த இயக்க அலுவலகத்துக்கு அப்பா போவதை நிறுத்தி விட்டார். நாட்டுப் பற்றுடன் அவர் கட்டிக் கொள்ளும் டை, அதை கக்கூசில் வீசி தண்ணீர் ஊற்றினார். தினந்தோறும் வாரந்தோறும் எங்கள் அறைக்கு முன்வராந்தாவில் அமர்ந்து வெளியை வெறித்துப் பார்க்கிறோம், நானும் அப்பாவும் அம்மாவும்... கீழத் தெருவிலிருந்து ஒரு காலையில் பெண் ஒருத்தி வேகவேகமாய் எங்களைப் பார்க்க வந்தாள், அவள் கையில் ஒரு பச்சைக் கொம்பு. அவள் சத்தமெடுக்கும் வரை நான் தலைதூக்கியே பார்க்கவில்லை. என்ன போஷாக்கான, பளபளப்பான பசுமையான கிளை. இதை எப்படி அவள் எங்கே கண்டெடுத்தாள் என ஆச்சர்யம். இந்தப் பக்கத்துச் செடி கொடி மரம் எல்லாம் ஜனவரி மாதக் கொளுத்தும் வெயிலில் குத்துயிரும் கொலையுயிருமாய்க் கிடந்தன, இலைகளைச் சூறாவளி பிய்த்தெறிந்து விட்டுப் போயிருந்தது. பூமியே காய்ந்த கரம்பைக் காடு.

யுத்தம் தோல்வியில் முடிந்தது, என்றார் அப்பா. அவர் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை, எங்கள் எல்லாருக்குமே விவரம் தெரியும். ஒபி செத்தானே, அத்தோடு தோல்விமுகம் தெளிவாகி விட்டது எங்களுக்கு. எல்லாரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டினார்கள். நைஜீரியப் படைவீரர்கள் லாரி நிறைய சவுக்குடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என ஊரில் வதந்தி பரவியது. நாங்களும் சாமான் செட்டுகளை எடுத்து வைத்துக்கொள்ளத் தயாரானோம்... பார்த்தால், அதிர்ச்சியான விஷயம், எங்களிடம் எடுத்துக் கொள்ள என பெரிதாய் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. அதுவரை எங்களிடம் எதுவுமே இல்லை என்பதே உறுத்தாதிருந்திருக்கிறது...
* *
இக்போ சொலவடை. ஒரு மனிதன் கீழே விழுகிறான் என்றால், அவனாக விழவில்லை, கடவுள் செயல் தான் அது.
* *
என் கையை இறுக்கமாகப் பிடிக்கிறான் நாம்தி. எங்களுக்குக் கல்யாணம். எந்த வேலையையுமே அதிக சிரமத்துடனேயே அவன் செய்ய வேண்டியிருந்தது. அவன் இடது கை வெட்டியெடுக்கப் பட்டுவிட்டது. இழந்த கைக்குப் பரிகாரம் போல, தன் இயலாமையை மறைக்கும் விதமாக வலது கையால் அதிகம் சிரமப்பட்டான். அப்பா படம் எடுத்தார். ''நல்லா வாய்விட்டுச் சிரிடி'' என்றார். ''மாப்ள நிமிர்ந்து நில்லு...'' ஆனால் அப்பா அவரே குறுகிக் கூனிதான் நடக்கிறார். யுத்தம் முடிந்த முதலே இப்படித்தான். பயாஃப்ராவில் அவரிடம் இருந்த அத்தனை பணத்துக்கும் ஈடாக 50 நைஜீரிய பவுண்டுகளே அவருக்குக் கிடைத்தன. சொந்த வீடு போச்சு. பளிங்கு மாடிப்படிகளுடனான எங்கள் இல்லம். அநாமத்துச் சொத்தாக அது அறிவிக்கப் பட்டு கைவிட்டுப் போய்விட்டது. ஒரு பட்டாளத்தான் அதை ஆக்கிரமித்துக் கொண்டான். அம்மா ஒருநடை அந்த வீட்டை, அவளது பிரியமான வீட்டைப் போய்ப் பார்த்து வர விரும்பினாள், சனியனே, ஒனக்கு வேற சோலிக் கழுதை இல்ல, என அப்பா திட்டினார். என்றாலும் அம்மா போனபோது அந்தவீட்டுப் பெண் பயங்கரமான நாயை ஏவிவிட்டு அம்மாவைத் துரத்தியடித்தாள். எங்கள் சைனாக் கோப்பைகள், ரேடியோகிராம்... அதுங்களை மட்டுமாவது தரப்டாதா, என்றிருந்தது அம்மாவுக்கு. பட்டாளத்தான் பெண்டாட்டியோ பிளாக்கி, என விசிலடித்தாள்.

''கொஞ்சம் இரும்'' என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, அம்மா என் பக்கம் வந்து தொப்பியைச் சரி செய்தாள். என் கல்யாண உடையை அவள்தான் தைத்தது, ஒரு பழைய தொப்பி வாங்கி அதில் சரிகை அலங்காரம் பண்ணித் தந்தாள். கல்யாணம் கழிந்து சிறு விடுதியில் விருந்து. என் கல்யாணத்துக்காக எப்படி ஒரு பிரமாதமான கேக் செய்ய நினைத்திருந்தார் என அப்பா சொன்னார். வெளிர் சிவப்பு அடுக்குகள் கொண்ட கேக். ஒன்னையே மறைச்சிர்றாப்ல உயரம்டி கண்ணு. மாப்ளை முகங்கூடத் தெரியாது. கேக் வெட்டும் படம், அதில் நீங்க ரெண்டு பேருமே கண்ல பட மாட்டீங்க, மாப்பிள்ளைத் தோழன், ஒபிதான் இருப்பான்...

அப்பா மேல் பொறாமையாய்க் கூட இருந்தது, ஒபி பற்றி இத்தனை இதமாய் அவரால்தான் எடுத்துப் பேச முடியும். இப்ப இருந்திருந்தால் அவனுக்கு 17 வயது ஆகியிருக்கும். அந்த வருடத்தில்தான் நைஜீரியாவில் வாகனங்கள் இடது புறமாக அல்லாமல், வலது புறமாகப் போக மாற்றம் செய்யப் பட்டது. நாங்கள் நைஜீரியர்கள் எனத் திரும்பவும் மாறிப் போனோம்.

* *

Comments

Popular posts from this blog