இளமைக் கதை - உலருமுன் பனித்துளி

உ ல ரு மு ன் 

ப னி த் து ளி

எஸ். சங்கரநாராயணன்
 சுதாகர் நைன்த் பி. கடையில் மேப் வாங்கப் போனால் தோழியுடன் அவள். லதா. நைன்த் சி. அவள் கையில் தகதக பொலிவுடன் தங்கப் பேனா.
      “இந்தப் பேனா எவ்ளோ?“
      “நூத்தியம்பது ரூவா…“
      “அவ்ளவா?“ என்று அழகாய் வெட்கப்பட்டாள். திரும்ப வைத்தாள். திரும்பி தன் தோழியிடம் “ரொம்ப அழகா இருக்கில்லே?“ என்றாள்.
      உன்னை விடவா, என நினைத்தான் சுதாகர். தலையில் ரோசாப்பூ செருகியிருந்தாள். அது பின்பக்கம் என்றால், முன்பக்க ரோசாப்பூ… உன் உதடுகள்… என ஒரு திகட்டலுடன் நினைத்தான். என்ன வாங்க வந்தோம் என்றே அவனுக்கு மறந்திருந்தது. அது நேற்று.
      இன்று இது. பள்ளிக்கூடம் விட்டு அவனும் சிவகுமாரும் சைக்கிளை எடுக்கிறார்கள். அவன் பக்கமாக சைக்கிளை உருட்டி அவள். சட்டென அவனை நிமிர்ந்து ஒற்றைப் பார்வை. திரும்பிக் கொண்டாள். உன்னை எனக்கு, ஓ தெரியுமே, என்கிற பார்வை. அவன் எதுவும் பேசியிருக்கலாம். அவன் பேச அவள் எதிர்பார்த்தும் இருக்கலாம். சே விட்டுவிட்டேன், என தாமதமாய் வருத்தமாய் இருந்தது.
      பாடம் நடத்துகையிலேயே பாதியில் தூங்கிவிடும் சுதாகர். ராத்திரி அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
      மறுநாள் அவன் காத்திருந்தான். அவள் வந்து சைக்கிளை… இப்போது அவன் எதிர்ப்பட்டான். நேரே அவள் முகத்தை இன்னுமாய் ஊடுருவி… சட்டென அவள் தலையைக் குனிந்து கொண்டாள். படபடப்பு. பறக்குமுன் பறவைகள் இப்படித்தான் அடித்துக் கொள்ளும். புன்னகை செய்துகொண்டான். கூட வரும் சிவகுமாருக்கு இதெல்லாம் தெரியாது.
லதா சைக்கிளில் ஏறி போய்விட்டாள்.
      “சிவா?“ என்று கூப்பிடடான் சுதாகர். “ஒரு பெண்ணை எப்படி லவ் பண்றதுடா?“ சிவா திரும்பிப் பார்த்தான். “யாராவது உன்னை லவ் பண்றாங்களா?“ புன்னகை செய்தான் சுதாகர். ”நீ தர்மடிக்குத் தயார்னு தெரியுது…“ என்றபடி சிவகுமார் சைக்கிளில் ஏறி போய்விட்டான். ரசனை கெட்ட ஜடம், அவனிடம் கேட்டிருக்கவே கூடாது.
      ரோசாப்பூவைப் பார்த்தாலே அவள் ஞாபகம். லேசாய் ஒரு சிரிப்பு அவனைப் பார்த்து அவள் சிரித்திருக்கலாம். பெண்தானே, வெட்கமும் பயமும் இருக்கத்தானே செய்யும், என பெண்ணைப் பற்றி ரொம்ப தெரிந்தாப் போல நினைத்தான். முதல் புன்னகை வலையை நாம்தான் வீச வேண்டும்!
      அவன் வகுப்பு ஆசிரியை ராதிகா மேடம். காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டவள், என்று பையன்கள் மத்தியில் அவள் ரொம்ப பிரபலம். என்றாலும் எப்படிக் காதல் செய்வது என்று அவள் வகுப்பு எடுக்க முடியாது. எனி டவ்ட், என அவள் கேட்டால், பையன்களும் லவ் பண்றது எப்பிடி மேடம், என்று கேட்க முடியாது. அவள் கணவர் பாலா சார். சுமாராய் இருப்பார். ஆண்கள் காதலிக்க அழகு தேவை இல்லை போலும். தான் அவரைவிட அழகு என்று சுதாகர் நினைத்துக் கொண்டான். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
      முதன் முதலில் ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசுகையில் சட்டென காதலைச் சொல்ல முடியாது. கூடாது… என்று தோன்றியது. தோழி, என்கிறாப் போல பழக ஆரம்பிக்க வேண்டும். அதுவும் சட்டென அவளைப் புன்னகைக்க வைத்து, தன்னோடு பேச சம்மதிக்க வைத்து… எத்தனை கட்டங்கள் அதில்!
      அவள் இயல்பாக தன்னுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? அவளை எங்காவது கேக் சாப்பிட என்று… கூப்பிட்டால் வருவாளா? அவள் வருவது தனிக்கதை. எல்லாத்துக்கும் பணம் வேண்டும். அப்பாவிடம் எப்ப கேட்டாலும் எதுக்கு என்ன ஏது என்று குடைகிறார். சிவகுமாரின் அப்பா நல்லவர். அவனிடம் எப்பவும் காசு புழங்குகிறது. பள்ளிக்கூடம் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கே போகிறான்.
      சிவகுமாரிடம் கேட்போமா? எப்படித் திருப்பித் தருவது? தவிரவும் என்ன ஏது என்று அவன்வேறு கேட்பான்.
      அப்பா அறியாமல் அம்மா சில ரகசிய இடங்களில் பணத்தை காபந்து பண்ணி வைக்கிறாள். அவை சில சமயம் அப்பாகையிலும் சிக்கி இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். என்றாலும் அம்மாவின் பழக்கம் மாறவேயில்லை.
      இவன் பாடம் படிக்கிற பாவனையில் இருந்தான். அம்மா எதிர்வீட்டு மாமியுடன் பேசப்போனாள். பரபரப்பானான். அதிர்ஷ்டம். அப்பா வந்துவிடுமுன் அவன் தேடி…. ஹா காதலுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
      பீரோவில் புடவைகளுக்கு அடியில், கைவிட்டுத் துழாவினான். இல்லை. உள்ளே கணக்கு எழுதும் டைரி. அதன் எதாவது பக்கத்தில்… இல்லை. வாசலில் எதும் சத்தம் கேட்கிறதா, என்று காது பதறிக் காத்திருந்தது. திருட்டு. தப்பு இல்லியா? ஆமாம், என்று திருட்டைக் கைவிட நினைத்த நேரம்… கைவிட்ட இடத்தில்… கையை இழுத்தால், 150 ரூபாய்!
      வைத்த இடத்தில் அம்மா திரும்பத் தேடினால்?... என்று கவலையை உதறி சட்டென எடுத்து தன் புத்தகப் பையில் வைத்துக் கொண்டான். அப்பவே தான் காதலில் ஜெயித்தாப்போல சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.
      அம்மா திரும்பி வந்து எதற்கோ பீரோவைத் திறந்தபோது பதட்டம். அம்மா அந்தப் பணத்தைத் தேடுவாளோ, என்று திகில். மாட்டிக் கொள்வோமோ, என்று நடுக்கம். சுதா, இங்கதான் வெச்சிருந்தேன்… என ஆரம்பிப்பாளா? பயம். அம்மா திரும்ப பீரோவை மூடினாள்.
      அன்றிரவும் தூங்க முடியவில்லை. புத்தகப் பையில் பணம். 150 ரூபாய். திரும்ப வைத்துவிடு வைத்துவிடு என்று கதறியது உள்ளே. இப்ப திரும்ப வைக்கப் போய் மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவது? காலையில் அவளை கேக் சாப்பிட தைரியமாய்க் கூப்பிடலாம். வருவாளா? ரொம்ப இயல்பாய், எப்படிக் கூப்பிட வேண்டும், என்று திரும்பத் திரும்ப ஒத்திகை. அந்தக் குரல். அதன் இயல்பான பாவம். அவளை அசத்திவிட வேண்டும். பயத்தையும் மீறி ஒருபக்கம் உற்சாகம். மனசில் தீம் மியூசிக்.
      பள்ளிக்கூடம் கிளம்ப அவசரப்பட்டான். ஷுவைக் கால்மாற்றி மாட்டிக்கொண்டான். இது பரவாயில்லை. அம்மாவிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது. இன்னும் நேரம் இருந்தது. எபபடியும் காலைகளில் அவளைப் பார்க்க, பேச வாய்க்காது. மாலை, அதுவும் சைக்கிள் எடுக்கிற இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். கூட இந்தக் கடங்காரன் சிவகுமார் இல்லாமல் இருக்க வேண்டும். காதலுக்கு முதல் எதிரி நண்பனே. அவன்தான் சொன்னான். டேய் நீ தர்மடி வாங்கும் நாள் தூரத்தில் இல்லை… பொறமைப்பிண்டம்.
      வீட்டைவிட்டு பள்ளிக்கூடம் கிளம்பும் போதே விசில் வந்தது. அப்பதான்  விசில் அடிக்கத் தெரிந்து கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்துக்குள் நுழையுமுன், சட்டென ஒரு யோசனை. ஆகா, என்றிருந்தது. அவளை கேக் ஷாப் வரை அழைத்துப் போவதை விட… அந்த தகதக தங்கப் பேனா, அதன் விலை என்ன? அதை வாங்கி அவளிடம் பரிசளித்தால்?
      காதலில் ஜெயிச்சாச்சி!
“அண்ணாச்சி அந்தப் பேனா எடுங்க.“
“எந்தப் பேனா?“
      “அந்த கோல்ட்ன் கலர்…“
      “இதுவா?“
      “இது இல்லை…“
      “இது வாங்கிக்க. நல்லா எழுதும்.“
      “வேணாம். அன்னிக்குக் காட்டினீங்களே?“
      “நானா?“
      ”ம்.“
      “உனக்கா?“
      “எனக்கு இல்ல“ என்னுமுன் சிறு வெட்கம்.
      “பின்னே?“
      “150 ரூவாப் பேனா…“
      “இதுவா?“
      “அதேதான்…“ என்றான் சுதாகர் உற்சாகமாய். லதாவுக்கு என் முதல் பரிசு!
      “இந்தா…“
      “கிஃப்ட் பேக் பண்ணிருங்க “ என்று சொல்கையில் சிலிர்த்தது.
      கடைக்காரனுக்கு ஞாபகம் வந்திருக்கலாம். அவன் புன்னகை செய்து கொண்டான்.
      பைக்கட்டில் அந்தப் பேனா. இதைத் தர மாலை வரை காத்திருக்க வேண்டும். சோதனைக்காலம் இது. வகுப்பில் பாடமே பதியவில்லை. சிவகுமார், “என்னடா ஒருமாதிரி இருக்கே?“ என்று கேட்டான். இவனிடம் சொல்லலாமா, என்றிருந்தது. வேண்டாம். எதாவது கன்னா பின்னாவென்று சொல்லிவிடுவான். தர்மடி, என்பான்.
      ராதிகா மேடம் வகுப்பு. அவள் ஜாக்கெட்டில் பேனா குத்தியிருந்தாள். பாலா சார் வாங்கித் தந்திருப்பார்...
நானும் தரப் போகிறேன் டீச்சர்!
      பள்ளிக்கூடம் விட்டதும் அடுத்த பிரச்னை. சிவகுமாரை எப்படி கழட்டிவிட?
      “என்னடா?“
      “இல்ல. கொஞ்சம் வயித்தை வலிக்கறாப்ல இருக்கு…“
      “போயிட்டு வா. நான் வெய்ட் பண்றேன்.“
      “இல்ல. நீ போ. நான்…“
      சிவகுமார் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தான். பின் ஒண்ணும் சொல்லாமல் வகுப்பைவிட்டு வெளியேறினான்.
      அவன் போனதும் அடுத்த பரபரப்பு. இவன் போகுமுன் லதா கிளம்பிவிடக் கூடாதே, என்றிருந்தது. மறைந்திருந்து பார்த்தான். சிவகுமார் சைக்கிளை எடுத்து, குனிந்து காற்று இருக்கிறதா… சீக்கிரம் போயேண்டா நாயே!
      அதோ லதா. அவனுக்குப் பரபரப்பாய் இருந்தது. அவள் சைக்கிள் ஸ்டாண்டு வரை போகுமுன், சிவகுமார் பார்க்குமுன்… வழியிலேயே அவளை மடக்கி விட்டால் என்ன? துணிவே துணை.
      “லதா?“
      அவள் ஆச்சர்யத்துடன் நின்றாள். “என்ன?“ என்றாள் விரைப்புடன்.
      கூப்பிட்டுவிட்டானே தவிர என்ன பேச தெரியவில்லை. சிவகுமார் பார்த்துவிடுவானோ என்கிற பதட்டம் வேறு. பரிசு அவன் பைக்குள் இருந்தது.
      “என்ன வேணும் உனக்கு?“ என்று அவனை நேரே பார்த்தாள் லதா.
      சட்டென இருக்கிற உற்சாகத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு சொன்னான். “இல்ல. உனக்கு ஒரு கிஃப்ட்…“
      “செருப்பு பிஞ்சிரும்“ என்றுவிட்டு லதா போய்விட்டாள்.
      அப்படியே ஒரு இருட்டு இருட்டியது அவனுக்கு. என்ன செய்ய தெரியவில்லை. அப்படியே ஆணியடித்தாப் போல நின்றான். இப்ப இந்தப் பேனா… இதை என்ன செய்ய?
      சிவகுமார் அவனைப் பார்த்துவிட்டான்.
      “என்னடா?“
      ஒண்ணில்லையே…“
      “ஏன் ஒருமாதிரி இருக்கே?“
      “ஒண்ணில்லையே.“
 இன்னும் வயிறு சரியாகலையா?“
(இப்பதான் ஒருமாதிரி இருக்கு.)
      சுதாகர் பதில் சொல்லவில்லை. அவனுக்குப் பேசவே பிடிக்கவில்லை. பேனாவை அவள் மறுத்துவிட்டாள். இப்போது திரும்ப அவன் அதை வீட்டுக்கு எடுத்துப் போக முடியாது. அப்பா அம்மாவிடம்… பேனா எப்படி கிடைத்தது, என்று விளக்க வேண்டும். அத்தோடு இன்னொரு பிரச்னை வீட்டில். அம்மா எப்போது அந்தப் பணத்தைத் திரும்பத் தேடுவாளோ தெரியாது… இப்ப என்ன பண்ண?
      சே பேனாவை அவள் வாங்கிக் கொண்டிருக்கலாம்! ஆளும் மூஞ்சியும், ரொம்ப தான் அல்ட்டிக்கறா… என நினைத்தான். வீட்டுக்குப் போகவே திகைப்பாய் இருந்தது. பைக்குள் பேனா.
      சிவா சைக்கிளை சிறிது உருட்டி அதில் ஏறப்போனான்.
      “சிவா…“ என்று கூப்பிட்டான் சுதாகர் அன்புடன்.
      “என்னடா?“ என சிவா திரும்பினான். “ஒரு அருமையான பேனா சிவா…“ என்றான்.
      “பேனாவா?“
      “ம். அழகான கோல்டன் கலர்…“
      “அதுக்கென்ன?“
      “வாங்கிக்கோ சிவா… அம்சமான பேனா…“ என்றான் சுதாகர்.
      “எங்க காட்டு…“ என்று சைக்கிளில் இருந்து கீழே இறங்கினான் சிவா.
      உறையைப் பிரித்து அவனிடம் காட்டினான் சுதாகர். “ஏய் யாருக்காவது பரிசு தரலாம்னு வாங்கினியா?“
      “இல்லடா இது… அப்பாவுக்கு யாரோ குடுத்தது…“
      “பொய்யி. உறைக்குள்ள இருக்கிற பேனா கோல்டன் கலர்னு எப்பிடி உனக்குத் தெரியும்?“ என்று கேட்டான் சிவா. திடீரென்று அவன் புத்திசாலித்தனமாய்ப் பேசுவான்.
      அவன் பதில் சொல்லவில்லை.
      “எனக்கெதுக்குடா பேனா? இருக்கறதே போதும்…“
      “150 ரூவா தாண்டா…“
      “150 தானேன்ற? நமக்கு பத்து ரூவா பேனா போதுமே…“
      “சரி. எவ்ள தருவே சிவா?“
      “நல்லாதான் இருக்கு“ என்றவன் சைக்கிளை விட்டுக் கீழே இறங்கினான். “150 ரூவான்றே? உனக்கு எப்பிடி விலை தெரியும்?“
      “ஒரு யூகம்தான்…“ என்று சுதாகர் சிரித்தான். நம்பித் தொலையேண்டா.
      என்ன தோணியதோ, சிவகுமார் “இரு என்கிட்ட பணம் இருக்கா பார்க்கிறேன்…“ என்று பின்பாக்கெட் பர்சில் தேடினான். 150 ரூபாய் தான் இருந்தது.
      “ரொம்ப தேங்ஸ் சிவா…“
      “100 வெச்சிக்க… என்ட்ட இருக்கிறதே அவ்ளதான்…“
      “ஐயோ எனக்கு வேணும் சிவா…“ என்று பிடுங்காத குறையாய் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டான்.
      “அப்பிடி என்ன செலவுடா உனக்கு?“
      “அம்மாவுக்குத் தெரியாமல் அவள் பணத்தை எடுத்திட்டேன். 150 ரூபாய். அதைத் திரும்ப வெக்கணும்…“ என்று பாதி உண்மை சொன்னான். பிறகு “பேனா 200 ரூபாய் கூட பெறும். சரி. எனக்குத் தேவை 150. அதான்…“ என்றான்.
      சிவா போனதும் தனித்து விடப்பட்டான் சுதாகர். சீ, என்ன நாள் இது, என்றிருந்தது. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனா?... எது எப்படியானாலும் அந்த விஷயம் முடிந்தது, என நினைத்தான்.
      இப்போது சாமர்த்தியமாக சிவா தலையில் பேனாவைக் கட்டி காசாக்கியதை எண்ணி சந்தோஷப்பட்டான். அதைவிடப் பெரிய சோதனை காத்திருக்கிறது. பணத்தை எடுத்தது பெரிதல்ல. இப்போது திரும்ப அதை வைக்க வேண்டும்… எடுத்தபோது மாட்டிக்கொள்ளாதவன். திரும்ப வைக்கையில் மாட்டிக்கொள்ளக் கூடாது….
      சே, இனி திருடக் கூடாது, என நினைத்தான். கடவுளே, என்னை மன்னிச்சிரு… அவனுக்கு வருத்தமாய் இருந்தது. கேடுகெட்ட காதல்… அதற்காகத் திருடுவதா என்றிருந்தது. பையில் பணம்.
“என்னடா இவ்ளோ நேரம்?“ என்று கேட்டாள் அம்மா. “ஸ்பெஷல் கிளாஸ்மா“ என்றான்.
      அன்றைக்கு முழுக்கவே பைக்குள் பணம் கனத்தது. அப்பா அந்த அறையிலேயே இருந்தார். காரணம் இல்லாமல் பீரோவைத் திறக்க முடியாது. அவன் உடைகள் எதுவும் பீரோவில் இல்லை. பாடம் படிப்பது போல் பாவனைகள் செய்தாலும் மனம் பதியவில்லை. வாசித்த அவசரத்தில், அக்பர் சாலையோரம் நிழல்தரும் மரங்களை வெட்டினார். குளங்களை நட்டார்.
      சே, இந்தச் சனியன் பேனாவை வாங்கிக் கொண்டிருக்கலாம்… எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தேன்… ஒரே நொடியில் எல்லாம் புஸ்வாணமாகி விட்டது. “செருப்பு பிஞ்சிரும்…“ போடி சர்த்தான்!
      காலையில்தான் வாய்ப்பு கிடைத்தது. சோப்பு தீர்ந்துபோய் புது சோப் வேண்டும் என்று பீரோவைத் திறந்து, அம்மா வந்து திறந்து எடுத்துத் தருமுன், “நானே எடுத்துக்கறேம்மா…“ என்று போனான்.
      திரும்ப அந்தப் பணத்தை வைத்த கணம் பொற்கணம். புதிதாய்ப் பிறந்தேன். திருந்தினேன். இனி திருடேன். ஹா ஒரு நாளில் என்ன பாடு பட்டுவிட்டேன்!
      காலையில் வழக்கம்போல பள்ளிக்கூடம் கிளம்பினான். இப்பவும் விசில் வந்தது… பள்ளியில் சைக்கிளை விடப்போனபோது எதிர்பார்க்கவேயில்லை. லதா எதிரில் வந்தாள். ஒதுங்கிக் கொண்டான். என்றாலும் தவிர்க்க முடியாமல் அவளை ஓரக் கண்ணால் பார்த்தான்.
      நீள நோட்டுகளை அணைத்துத் தாங்கியிருந்தாள். கையில்… ஆமாம். கோல்டன் கலர் பேனா வைத்திருந்தாள்.

• • •
நன்றி - பேசும் புதிய சக்தி மாத இதழ் - நவம்பர் 2015 தீபாவளி இதழ்
storysankar@gmail.com 91 97899 87842 INDIA

Comments

Popular posts from this blog