shortstory
ஊதல் உதைபட வாழ்தல்
எஸ். சங்கரநாராயணன்

 வன் தம்பி. அவள் அக்கா.

அவனது நடவடிக்கைகளை அவள் கண்காணித்தாள். வயசுக் கோளாறு இது. பெரியவர்களிடம் நின்று பேசுகிறானில்லை. மதிப்பு மரியாதை எல்லாம் போச்சு. அலட்சியமாய் பதில் சொல்கிறான். அவனது நடவடிக்கைகள் திருப்திகரமானதாய் இல்லை. இதை விடக்கூடாது. அவனைத் திருத்துகிற, வழி நடத்துகிற, கண்டிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் அவன் அக்கா.

கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்தாள். பெட்டிக் கடைப் பக்கம் பிரகாசம். தம்பி. அங்கே அவனுக்கு என்ன வேலை? பார்த்தும் பாராதது போல் நிற்கிறான். கூட யார் யார்? ஓரக்கண்ணால் சிறிது எரிச்சலுடன் பார்த்தாள். அந்தக் காலர் பனியன் - நான் பார்க்கிறதில் சுவாரஸ்யப்பட்டு, உற்சாகமாய் சூயிங்கம் மெல்கிறான். ராஸ்கல்.

‘பிரகாசம்?’ சற்று தள்ளி நின்று கொண்டு கூப்பிட்டாள்.

அவன் அதை எதிர்ப்பார்க்கவில்லை. திரும்பி, கிட்டே போக யோசித்து, வராமல், என்ன, என்று பார்த்தான்.

என்ன இங்கே நிக்கறே - ‘பள்ளிக்கூடம் இல்லியா?’ என்று கேட்டாள்.

‘மதிய எக்சாம்’

‘அப்ப படிக்க வேண்டாமா?’

‘படிச்சிட்டேன்’

‘ஒரு தடவை ரிவைஸ் பண்ணலாமில்லையா?

‘பண்ணிட்டேன்’ என்றான் முக இறுக்கத்துடன்.

நாயே அவங்க கூட ஏண்டா நின்னுட்டிருக்கே? உன் சகவாசம் சரியா இல்ல போலுக்கே. இதுல்லாம் எனக்குப் பிடிக்காது...

கத்த வேண்டுமாய் ஆத்திரம் அவளுள் கொதித்தது. சாயந்திரமா வீட்டில் பேசிக் கொள்ளலாம்...

கல்லூரி பஸ் வந்தது. ஏறிப் போய்விட்டாள்.

உயிர் சிநேகிதர்கள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டு விட்டதாய் உணர்ந்தான்.

அவளை யார் பெட்டிக்கடை வாசலுக்கு அந்து பேசச் சொன்னது? இவ மனசுல என்னதான் நினைச்சிட்டிருக்கா? வயசுல மூத்தவன்னா ரெண்டு கொம்பா என்ன? அதெல்லாம் வேறாள்ட்ட வெச்சிக்கிறணும். என்ட்ட காட்டினா நடக்கற கதையே வேற... மூச்சு முட்டியது. சிவந்த முகத்தை ஆசுவாசப்படுத்தி சிரமத்துடன் நண்பர்களைப் பார்த்துப் புன்னகைத்தான்.

நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

வழக்கமாக அந்த நண்பர்கள் அந்நேரம் அங்கே காத்திருக்கவே செய்கிறார்கள். சற்று தள்ளி பஸ் நிறுத்தம் இருந்தது. பெட்டிக் கடைக்காரன் இவர்கள் வரவை நம்பியே சிகரெட், குளிர்பானங்கள், பீடா இத்யாதி வாங்கிப் போட்டிருக்கிறான்.

பக்கத்து வேப்ப மரத்தில் ஆணியடித்து கயிற்றில் நெருப்பு தொங்குகிறது.

மதியந்தான் பள்ளிக்குப் போக வேண்டும், என்றானதும் காலை விழித்ததும் அவன் முதல் நினைப்பு பஸ் நிறுத்தத்துக்குப் போவதுதான். விதவிதமான பெண்கள் அங்கே பஸ்ஸேறுகிறார்கள். வளையல் அளவுக்குக் காதில் ரிங் அணிந்த ஒருத்தி. எந்த ஆண் பார்த்தாலும் அவள் பூமி பார்க்கச் சிரித்துக் கொண்டே போகிறாள்.

அவள் பேர் என்ன என்று கண்டுபிடிக்க ரசிக மகாஜனங்கள் கூட்டாய் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாலைகளில் நண்பர்கள் செட் சேர்ந்ததும் சுவாரஸ்யமாய்ப் பிற பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டதைப் பார்த்து பிரகாசம் வாய் பிளந்தான்.

அவனுக்கு எட்டரைக்குப் பள்ளியில் இருந்தாக வேண்டும். ஆண்கள் பள்ளி. நாட்டில் அவனவன் கோ எஜுகேஷனில் வாழ்க்கையை அனுபவிக்கிறான். ஹ்ம், எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.

அக்கா இன்னும் சாயந்திரம் என்னென்ன கேட்பாளோ? எரிச்சலாய் இருந்தது. நண்பர்கள் அவனைப் பார்த்த பார்வை வேறு, ஒரு மாதிரி யிருந்தது. டேய், உனக்கு இப்படியொரு அக்கா இருக்கறதைச் சொல்லவே இல்லியே, என்கிற பார்வை. போன வாரம், பாஸ்கரை, தங்கையைப் பற்றிச் சொல்லவில்லை என்று ஆளாளுக்குக் கிண்டலடித்தார்கள். வேண்டுமென்றே பாஸ்கர் இல்லாத சமயங்களில் அவன் வீட்டுக்குப் போய், ‘பாஸ்?’ என்று கூப்பிட்டார்கள்.

பிரகாசம் ‘பாஸ்?’ என்று கூப்பிட்டான். அவளே வெளியே வந்தாள். பரபரப்பாய் இருந்தது.

‘அவன் இல்லை.’ சரி என்று கிளம்ப முடியுமா என்ன? ‘எங்க போயிருக்கான்?’ உள்ளே போகப் போனவள் திரும்பி ‘தெரில’ என்றாள். ஓகே என்று கிளம்ப முடியுமா என்ன? ‘பாஸ் வந்தா, பிரகாசம் வந்து தேடிட்டுப் போனதாச் சொல்றீங்களா?’ என்றான் புன்னகையுடன். பெண்ணே என் பெயர் பிரகாசம். உன் பெயர் என்ன?

‘அவசரமாப் பாக்கணுமா?’ இதற்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை. பயமாய் இருந்தது. தொண்டை வறண்டு விட்டது. ம், என்று தலையாட்டினான். ‘என்ன விஷயம்?’ என்றாள் அவள் விடாமல். பேச மாட்டாளா, என்று நினைத்தவள், விட மாட்டாளா, என்று தடுமாறினான்.

‘பெர்சனல்’ என்று மெல்லச் சொல்லிவிட்டு, அவளைப் பார்க்காமல் கிளம்பினான்.

அந்த பாஸ்கரின் தங்கை, அக்காவின் சிநேகிதி என்று தெரியாது. கோவிலில் அக்கா கூட அவள் பிராகாரம் சுற்றிக் கொண்டிருந்தாள். அதுவரை அக்காவைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வரும் அவனுக்கு. அப்போது நின்று நாலு வார்த்தை பேச வேண்டுமாய் இருந்தது. அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தான். தனது காதுகள் ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கின்றன. அவர்கள் பேசுவது சரியாகக் கேட்காததில் துன்பபட்டான்.

‘இந்த ஆம்பிளைங்களுக்கு வேற வேலையே கிடையாதாடி?’

பாதிப் பிரதட்சணத்தில் எபவ்டேர்ன் அடித்தான்.

அக்கா போனதும் பெட்டிக்கடை நிற்றல் சுவாரஸ்யப் படவில்லை. நண்பர்களும் அவனிடம் சரியாகப் பேசவில்லை. பாஸ்கரின் தங்கை ஒல்லிப்பிச்சா. கடைக்குப் போய் புடலங்காய் வாங்கி வந்தால், புடலங்காய் அவளைவிட குண்டாய் இருக்கும். டென்னிஸ் கோர்ட். அவளுக்கே அலைஞ்சாங்கள் இவர்கள். ரேணுகாவைப் பார்த்து அவனவனுகு வாய்ல ஈ போனது தெரியல. கோபத்துடன், சிறிது பெருமிதமாயும் இருந்தது..

‘மதியம் பள்ளிக்கூடத்துக்குச் சேர்ந்தே போலாம்டா. வீட்டுக்கு வந்திர்றேன்’ என்றான் பாஸ்கர். அவனுக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை. காதில் விழாத மாதிரி நடந்து போனான்.

ரேணுகா தன் தங்கையின் சிநேகிதி என்று பாஸ்கருக்குத் தெரியாது.

ரேணுகா ஒரு மாதிரி அதிகாரப் பித்து. வீட்டில் அவள் பெரியவள். அதற்காக இந்த ஆட்டமா ஆடுவாள் ஒருத்தி. பவுடர், ஷாம்பு, டூத்பேஸ்ட் என்று எல்லாவற்றிலும் அவள் சொன்னதைத்தான் அப்பா வாங்கினார். பெரிய கிளாஸ் அவள், படிக்க அதிகம் இருக்கும். அம்மா இப்படிச் சொல்லிச் சொல்லியே அவனை வேலை வாங்கினாள்.

அவ டிரஸ்சை அவ அயர்ன் பண்ணி வெச்சிக்கக் கூடாதா? சரியாகக் கிளம்பும் நேரம்தான் தெரியும். (போ, கையோட அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா.) எனக்கு வேலை இருக்கு, என்று தயங்கினால், சீக்கிரம் போடா, என்று அப்பா விரட்டினார். பொம்பளையாள் துணியெல்லாம் தூக்கிட்டுத் தெருவில் நடக்கவே அசிங்கமாய் வெட்கமாய் இருந்தது.

அக்காமேல் ஆத்திரம்.

பருவம் மடலவிழ்த்துப் பெண்களிடம் ஒரு விசித்திர வியூகத்தை உருவாக்கி விடுகிறது. இந்த அக்காதான் சில சமயங்களில் எப்படி ஒளிவீசி பிரமிக்க வைக்கிறாள். சுடிதார், தாவணி போட்டால் ஒரு மாதிரி. ஐயோ புடவை கட்டினால் எத்தனை வளர்ந்த பெண்ணாய் மனதை நிறைக்கிறாள். கனவு வண்ணத்துப் பூச்சிகள் சிறகு விரித்து வெளிக் கிளம்புகின்றன.

அதனால்தான் அப்பாவும் அம்மாவும் அவளிடம் தனி வாஞ்சை பாராட்டினார்கள். சற்று விலகிய பல்வரிசையில் அக்கா ஒற்றைச் சிரிப்பில் அத்தனை பேரையுமே மயக்கினாள். தான் அழகாய் இருக்கிறோம் என்கிற திமிர் இருந்தது அவளுக்கு. அவள் விரலசைவில் உலகில் மாற்றங்கள் நிகழும் என்கிற துணிவு. சனியங்கள் இந்த அப்பாவும் அம்மாவும் அவள் ஆட்டுவிக்கிறபடி யெல்லாம் தானே ஆடினார்கள்.

ரேணுகா பற்றி அவர்களுக்குத் தெரியாது. இரவு தூக்கம் முழித்து அவள் பாடம் படிகிறாதாய் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் படிக்கும்வரை ‘நீயும் படியேண்டா’ என்று அப்பா, கூட உட்கார்த்தினார். அவனுக்கு கத்தி வாய்விட்டுப் படிக்க வேண்டும். அப்போதுதான் மனசில் பதியும். அவள் அமைதியாய், விளக்கு வெளிச்சம் பின்பக்கத்தில் இருந்து வர, பக்கம் பக்கமாய் வாசித்துப் போவாள்.

வாசிக்கிற அலுப்பில் ஒருநாள் அப்படியே கண் சொருகி ரேணுகா தூங்கி விட்டாள். அவன் போய் பாடப் புத்தகத்தை எடுத்து வைத்தான். அது பாடப் புத்தகம் அல்ல. ஹெரால்ட் ராபின்ஸ் நாவல். பிரித்த பக்கத்தை அப்படியே வாசித்தான். உவ்வே என்று வந்தது. இத்தனை அசிங்கமாய்க் கூட எழுதுவார்களா? திகைப்பாய் இருந்தது. தமிழில் இதை மொழிபெயர்த்தால் மஞ்சள் புத்தகம் என்பார்கள். அவன்கூட ஒன்றிரண்டு வாசித்திருக்கிறான் - ஆங்கிலத்தில் அல்ல தமிழில்... சாணித்தாள் அட்டை. கஜிலி கிஜிலி என்று விநோதமான தலைப்புகள்.

அக்கா அறையில் இல்லாத சமயம் ஹெரால்டு ராபின்ஸ் முழுதும் வாசித்துப் பார்த்தான். அவள் மேஜை டிராயரைத் துழாவினான். பெட்டியைக் குடைந்தான். காஜல். லிப்கார்டு. ஸ்டிக்கர் பொட்டு. வெங்கடாஜலபதி படம் ஒருபுறமும், ஆண்டு காலண்டர் ஒருபுறமும் அடித்த கார்டு. தலை பேண்டுகள். காதுக்கு தினசரி ஒருவகை என்று ஏராளம். ஆன்னி பிரன்ச். புது சென்ட் பாட்டில். டியோடரன்ட். எடுத்து அக்குளில் தேய்த்துக் கொண்டான். பர்சுக்குள் துளசி. சில்லறை கொஞ்சம். பஸ் டிக்கெட். பாதி கிழிந்த சினிமா டிக்கெட்டுகள் இரண்டு. பிருந்தாவன் தியேட்டர் என்ன படம், என்று யோசித்தான். அ, தீபா மேத்தாவின் ‘தீ’. அவனும் பாஸ்கருமாய்ப் போய்ப் பார்ந்தார்கள். பேன்ட் போட்டுக் கொண்டு பெரியாள் தோரணையில் போனார்கள்.

இடைவேளையின் போது பாஸ்கர் சிகரெட் வாங்கினான். அதுவரை அவன் குடித்து பிரகாசம் பார்த்ததில்லை. ‘என்னடா,’ என்றான் பயந்து. ‘என்ன’ என்று பாஸ்கர் அலட்சியமாய்த் திரும்பினான். ‘ஒண்ணில்ல,’ என்றான் பிரகாசம்.

‘இந்தா’ என்று ஒரு சிகரெட்டை நீட்டினான். ஐயோ வேணா, என்று சொல்ல வந்தவன், பேசாமல் வாங்கிக் கொ?ண்டான். படபடப்பாய் இருந்தது.

அவர்களில் ராஜா புகை பிடிப்பதில் கில்லாடி. நிறைய ட்ரிக்கெல்லாம் செய்வான். இருமாமல் அப்படியே ரொம்ப நேரம் உள்ளுக்குள் புகையை அடக்குவான். வாயால் புகை உறிஞ்சி மூக்கால் விடுவிப்பான். வாயில் வளையம் வளையமாய்ப் புகை விடுவான்… ஹீரோ!

கையில் லாவகமாய் சிகரெட் பிடிப்பதும், சாம்பல் சேரச் சேர அதை தோரணையாய்ச் சுண்டிக் கொண்டே பேசிக் கொண்டிருப்பதும் அட்டகாசமாய்த் தான் இருந்தது.

அப்பா அம்மா அறியாத ரகசியஙள் இப்போது அவனிடம் இருந்தன. அவன் ஒண்ணும் பயந்தோணி பக்கோடா அல்ல. வீட்டுக்குப் போகும்போது பாக்கு போட்டுக் கொண்டார்கள்.

இரவில் மொட்டை மாடியில் யாருமில்லாத் தனிமையில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் பிரகாசம். யாரும் இல்லை. பைக்குள்ளிருந்து சிகரெட் எடுத்தான். கோல்ட் பிளேக் பில்டர். அதிக விலையான சிகரெட் புகைப்பதே ஒரு அந்தஸ்துதான். பற்ற வைத்து நாலு இழுப்பு இழுத்திருப்பான். ‘பிரகாசம்’ என்று மாடியேறி வந்தாள் ரேணுகா. பதட்டத்தில் சிகரெட்டை உதறினான்.

‘என்ன பண்ணிட்டிருக்கே?’

‘ஒண்ணில்லக்கா’ என்றான் பதறி.

‘உன்ட்டேர்ந்து ஏதோ வாசனை வருதே?’

‘பாக்கு’ என்று அவளிடம் காட்டி ஒருவாய் போட்டுக் கொண்டான். ‘வேணுமா’ என்று நீட்டினான்.

‘இதை எப்ப கத்துக்கிட்டே?’ என்றவள், ‘இல்ல அது வேற வாசனை...’ என்றாள்.

‘வேற என்ன வாசனை? இல்லியே?’

‘டாய், கண்டுபிடிச்சிட்டேன்... சிகரெட் பிடிச்சியா?’

‘ஐயோ அதெல்லாம் ஒண்ணில்-’ என்றவன், அவள் தரையில் தேடிக் கண்டுபிடித்து விட்டதைக் கவனித்ததும் ‘ம்’ என்றான் சுருதி இறக்கி.

‘ராஸ்கல் எப்பலேர்ந்து இந்தப் பழக்கம்?’

‘சும்மாக்கா, ரொம்ப படிச்சி.. மூளை டயர்டா இருக்கும்போது...’

‘அதுக்கு?’

‘அதுக்கு ஒண்ணில்ல. அக்கா யார்ட்டயும் சொல்லிடாதே. இனி நான் சிகரெட்டைக் கையால்கூடத் தொடமாட்டேன். உன்மேல சத்தியம்.’

‘எங்க, சத்தியம் பண்ணு’

அவள் தலையில் அடித்தான். ‘அப்புறம் வார்த்தை மாறினே?...’

‘இல்லக்கா, நான் மாற மாட்டேன்.’

ஒரு ஆணை ஒரு பெண்ணால்தான் திருத்த முடியும். பெண்கள் கருணைப் பிறவிகள். ‘அந்தப் பசங்களோட உன்னைப் பெட்டிக்கடைல பாதப்பவே நான் நினைச்சேன்டா.’

அவன் அவளைப் பார்த்தான். ‘இனிமே அவங்க கூடல்லாம் சேராதே.’

போடி பெரிய இவ - ‘சரி’ என்றான். ‘நீ அப்பாம்மாட்டச் சொல்லக் கூடாது’

‘சரி’ என்றாள் அவள். இவள் சொல்வாள், என்று நினைத்துக் கொண்டான்.

‘அதுல என்னடா டேஸ்ட் இருக்கு?’

‘ஒண்ணுங் கிடையாது’

‘‘பின்ன அதைப் போயி?...’ என்று அவள் சிரித்தாள். ‘சரி நீ கீழ போ’ என்றாள்.

‘ப்ளீஸ்க்கா, யார்ட்டயும்...’

‘சொல்ல மாட்டேன்’

அவன் கீழிறங்கிப் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அழுதது வேடிக்கையாய் இருந்தது. ஆனாலும் ரொம்ப தைரியம். மாடியிலேயே வெச்சிக் குடிக்கிறானா? அவள் குனிந்து தரையில் தேடினாள். பதறி விசிறியடித்த சிகரெட் உருண்டு கிடந்தது. அணையுந் தறுவாயில் இருந்தது. இதுல என்ன ருசி கிடைக்குதோ... ஆச்சரியப் பட்டுக்கொண்டாள். குனிந்து அந்த சிகரெட்டை எடுத்தாள். வாயில் வைத்து, ஒரு இழுப்பு இழுத்தாள். நெருப்பு உக்கிரம் பெற்று, ஒளி கனன்றது.
*

storysankar@gmail.com
91 97899 87842


Comments

Popular posts from this blog