லேப்டாப் குழந்தைகள்
எஸ். சங்கரநாராயணன்

தாய்நாடு இந்தியா அவர்களை, அவர்களது அறிவை த்தூ த்தூ என்று துப்ப, வெளிநாடுகள் பன்னீர் தெளித்து, வா வா, என அழைத்தன. அப்பா அம்மா அம்பி இந்தியா… எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு, சாஸ்திரி கைபர் போலன் வழியே அமெரிக்கா கிளம்பினான்.
அவை துயரமான கணங்கள். இந்திய மண்ணைப் பிரிய அவனுக்கு ஆசையா என்ன? அழகான அமைதியான ஆன்மிக நாடு. வெளிநாட்டுக்காரர்கள் ஆன்மிகம் தேடி கைபர் போலன் வழியே இங்கே வருகிறார்கள். அவன் வணங்கி சிலிர்க்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையே எத்தனை பெரிய உதாரணம்?
பிரியமான பெற்றோர்கள். அடுத்த தெரு காயத்ரி வேறு காதலும் இல்லாமல், முகச் சுளிப்பும் இல்லாமல் ‘மையப்பார்வை’ பார்த்துக் கொண்டிருந்தாள்.
மென்பொருள் கல்வி வாசித்து முடித்ததும் கிடைத்த சம்பளத்தில் ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்த்துவிட்டு, மேலே படிக்கலாம் என்று வேலையை உதறினான் சாஸ்திரி. மூத்த பையன் அப்படி வேலையை உதறியது வீட்டில் எல்லாருக்கும் அதிர்ச்சி தான். ஆனாலும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.
அவனை அமெரிக்கா அனுப்ப உறவினரகள் காட்டிய உற்சாகம் திக்கு முக்காட வைத்துவிட்டது அவனை. ஒரு விநாடி, இந்தப் பாவி எதுக்கடா இங்கன்னு தூக்கி, கில்லியடிக்கிறாங்களோ என்கிற சிறு சலனம். கூர்ந்து பார்த்திருந்தால் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பெண் குழந்தைகள் வைத்திருந்தார்கள், என கண்டுபிடித்திருக்கலாம்.
அந்த காயத்ரியின் பார்வையிலேயே சிறு படபடப்பு தெரிகிறதே…
விசா எடுக்க, வங்கிக் கணக்கில் சில லட்சங்கள் தேவைப்பட்ட போது சாஸ்திரியின் அப்பா கைநீட்டிய இடம் எல்லாம் உதவி கிடைத்தது.
அடாடா சாஸ்திரியின் அப்பா இறந்து போனார். தள்ளாத வயது. ஆளையே தள்ளியது. நடக்க முடியவில்லை. வெயில் என்ன போடு போடுகிறது. வெளியே போய்வந்தார். “மார வலிக்கறதுடீ… கொஞ்சம் குடிக்க ஜலம்…” தண்ணீர் வருமுன்னே தலை துவண்டு சாய்ஞ்சிட்டதே.
“சாஸ்திரி எப்பிடி வர ஒழியும் சொல்லுங்கோ. அவன் போனது படிக்கப் போயிருக்கான். பாவம் அப்பா முகத்தைக் கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கலை.” அம்மா புலம்பினாலும் தன் மகனையிட்டு சிறு பெருமிதம் இருந்தது அதில்.
அம்பிதான் கொள்ளி போடணும். எரிச்சலாய் வந்தது அவனுக்கு. அவன் சம்பளம் குறைவு. படிப்பும் அத்தனை விருத்தியாய் இல்லை. இங்கத்திய த்தூ த்தூ சமூகத்தில் அவன் மாட்டிக் கொண்டான். அண்ணா சாஸ்திரிக்கு எத்தனையோ வரன்கள் மாட்டி புகைப்படங்கள் வந்து குவிந்தன. வீட்டில் யாரும் இல்லாத சமயம் அந்த கொழுகொழு முகங்களை எடுத்துப் பார்த்து ஏங்கினான். அவன் அலுவலகத்தில் பக்கத்து சீட் லலிதா. ஒரு கடிதம், காதல் கடிதம் தந்தாள் அவனிடம். “இதை உங்களுக்கு அடுத்த சீட் பத்மநாதனுக்கு பாஸ் பண்ணுங்க” என்றாள். அவன் ஃபெயிலானான்.
அவன் ராசியா அது?
அண்ணா அமெரிக்காவில். அப்பா இறந்து போனார். கர்மா செலவுகள் அத்தனையும் அவன் தலையில். அண்ணா பார்ட் டைம் வேலை பார்த்தபடியே அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கிறான். எப்ப அவன் இந்தியா திரும்பி, அவனிடம் “அப்பா காரியம்…” என்று செலவுக் கணக்கு காட்டி பணம் கேட்பது? சாவு எடுக்கையில் கூட்டமான கூட்டம். எப்படியும் சாஸ்திரி வந்து விடுவான். மூத்த பிள்ளையாச்சே, என்ற நம்பிக்கையுடன் நிறைய அப்பாக்கள் தங்கள் கொழுகொழு குழந்தைகளுடன் வந்தார்கள். அந்தப் பெண்களை அம்பி ஓர் ஓரப்பார்வை பார்த்தபோது உதட்டைச் சுழித்து அலட்சித்தார்கள். இப்ப பார், நம்மாளுகளே நம்மை த்தூ த்தூன்னு துப்பறா மாதிரி ஆயிட்டதே என்று இருந்தது அம்பிக்கு.
ஆ பத்தாம் நாள் காரியத்துக்கு இன்னும் கூட்டம் வரும். தாயாதிமுறைக் காரர்களுக்கு எல்லாருக்கும், ஓரத்தில் கருப்பு பூசிய மரணச்செய்தி அட்டை அனுப்பியாகி விட்டது. ஞானவாபியில் ஆத்மாவைக் கரையேற்றும் ஏற்பாடுகள்.
அப்பாவுக்கும் அம்மாவின் தம்பிக்கும் சண்டை வந்து, “செத்தால் கூட உன் வாசல் வளாகத்தை மிதிக்க மாட்டேன்” என சபதம் போட்டுப் பிரிந்தவர்கள். தம்பி செத்துப்போன தகவலே அவளுக்குத் தெரியாது. அப்பா காரியத்துக்கு ஞானவாபியில் அறை பத்து பதிவானது. எல்லாரும் போய் இறங்கினால், பதினொண்ணில், அறை பதினொண்ணில் தம்பியின் பிதுர் காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. ரெண்டு ஆத்மாக்களும் சந்தித்துக் கொள்ளுமா? எம்ஜியார் நம்பியார் லெவலில் எதும் டிஷ்யூமிடுமா?
அறை பதினொண்ணு காரியங்ளுக்குக் கூட்டமே இல்லை. ஏகப்பபட்ட பேருடன் மாமா சண்டை போட்டவர். தவிரவும், மாமாவின் பிள்ளை அமெரிக்காவில் இல்லை. அவரது மூத்த பெண், வேறு சாதிப் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தது போல. சம்பந்தமே இல்லாத அளவில் அந்த மாப்பிள்ளையும் வந்திருந்தான். தெரு நாய் போல எல்லார் முகத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். யார் அவனைப் பார்த்தாலும் வாலாட்டத் தயாராய் இருந்தான்.
பத்துக்கு பத்தாம் அறைக்கு வந்தவர்கள் பதினொண்ணுக் காரர்களுடன் பேசுவதா வேணாமா என்று குழம்பி யிருந்தார்கள். வந்தது வந்தாச்சி. இந்தப் படையலில் அழும்போது, திரும்ப ஒரு முழுக்கு, அந்தப் படையலிலும் அழுதிட்டாப் போச்சு… என யோசித்தார்கள். அவர்கள்கூட இந்த மாப்பிள்ளையை சட்டை செய்யவில்லை. மாமாவுக்கு இரண்டு பெண்கள். ரெண்டாவது அப்பவே (அந்த வயசில்) சுமாராய்த்தான் இருக்கும். இப்போது கல்லூரி போகிறாளாய் இருக்கும். இல்லை பிளஸ் டூ-வுடன் படிப்போடு டூ விட்டாளா தெரியாது. குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட வந்தாள். அப்ப கூட கவர்ச்சியாக இல்லை அவள். கூல் டிரிங் உறிஞ்சுகிற ஸ்ட்ரா போல இருந்தாள். ஒரு சமாதான உடன்படிக்கை போல அம்பி ஒரு புன்னகைத் தூண்டிலை வீச முயன்றான். அவன் உடல் சிலிர்த்தது. விலுக்கென்று கழுத்தை ஒரு நொடி நொடித்தாள் அவள்.
ஒருவேளை இதுவும் யாரையாவது காதலித்துத் தொலைக்கிறதோ என்னமோ, என நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு தான் பிராப்தமே அற்றுப் போனது ஏனோ.
நடசேன் செத்துப்போன துக்கத்தை விட எல்லாருக்கும் சாஸ்திரி வராதது பெருந் துக்கமாய் இருந்தது. கர்மா பண்ணி வைக்கிற சாஸ்திரிகள் செல்ஃபோனில கழுத்தைச் சாய்த்துப் பேசியபடியே டூ வீலரில் வந்து இறங்கினார். செல்ஃபோனிலேயே இன்னொரு ‘காரியம்’ பண்ணி வைக்கிறாரோ என்னமோ? இளிச்சவாயர்கள் செலவில் வாங்கிய செல்ஃபோன். டூ வீலர். அவர் பிள்ளையும் இப்போது அமெரிக்காவில். அங்கேயே இப்படி வேத காரியங்களுக்கு ஆள் தேவைப்படுகிறது. என்றாலும் அவனுக்கு ஒரு அமெரிக்க மாதுவுடன் ‘இது’வாகி… இவருக்கு இன்னும் தெரியாது. வாத்தியார் பையனை நம்பி யிருந்தார். அமெரிக்காவில் ஒரு ஞானவாபி பிரான்ச் பற்றி அவருக்கு யோசனை இருந்தது. இறந்து போன ஆத்மாக்கள் விமான டிக்கெட் எடுக்காமல் அமெரிக்கா வந்து கரையேறும் போலும்.
தலை விரித்து பிண்டம் போட்டு அழும் உறவினர்களை, ஜரகண்டி ஜரகண்டி, என திருப்பதி ரேன்ஜில் விரட்டிக் கொண்டிருந்தார் வாத்தியார்.
ஒரு தூரத்து உறவினர், அதுவரை அம்பி சந்திக்காத மனிதர் வந்திருந்தார். ஆள் பார்க்க அத்தனை கச்சலாக இல்லை. “ஸீ தி வேர்ல்ட் ஹேஸ் பிகம் ஸோ ஒர்ஸ் அன்ட் ஃபார்மல் நௌஎடேஸ்…” என ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். டில்லி, மும்பை நகரங்களில் அரசு அலுவலக கிளார்க்குகள் அப்படித்தான் பேச்சு எடுப்பார்கள். மேனேஜர் குட்டக் குட்ட வாங்கிக்கொண்டு வெளியே வந்து ஆவேசப் படுவார்கள். அம்பி தலையாட்டினான். அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்றே அவனுக்கு விளங்கவில்லை.  தவிரவும் அவனுக்கு யாராவது ஆங்கிலத்தில் பேச வந்தாலே உதறல் எடுத்து விடும். அவனிடம் அலங்காரமாய் அவர் ஆங்கிலத்தில் துக்கம் விசாரித்தார்.
“சாருக்கு எத்தனை குழந்தேள்?” என்றான் அம்பி.
“ரெண்டு பையன்.”
“ஒரு பெண் பெற்றிருக்கலாம்.” சத்தமாய் வெளியே சொல்லி விட்டானா தெரியவில்லை. திரும்பி ’‘ஏன்?” என்று கேட்டார்.
அவன் சுதாரித்து “இல்ல. முதல் இது… ஆம்பளைக் குழந்தையாச்சா? அதான்… ரெண்டாவது… பொண், அப்டி எதிர்பார்த்தேள் இல்லியா?”
“இல்லியே” என்றார் அவர்.
யாரோ கூப்பிடடா மாதிரி அம்பி அங்கிருந்து அகன்றான்.
ஊனி வைத்த கல்லில் அம்பி ஈரத்துண்டைப் பிழிந்து பிழிந்து எள்ளுத் தண்ணீர் ஊற்றும்போது கண்ணீர்த் துளிகள் கலந்தன. ஒரு கணம் தானே தன்னைத்தானே த்தூ த்தூ என்று துப்பிக் கொள்வதாய்த் தோன்றியது. போன கடிதத்தில் அண்ணா பச்சை அட்டை கிடைத்து அங்கேயே எப்போது குடியுரிமை பெறுவோம் என்று யோசிப்பதாக ஒரு வரி எழுதியிருந்தான். அதற்குள் கிடைத்து விடுமா என்ன? ஆனால் அண்ணாவுக்கு அமெரிக்காவிலேயே தங்கிவிடுகிற ஆசை வந்தாகி விட்டது. அது தெரிகிறது. எள்ளுக் கணக்கு தான் இந்தச் செலவுகள் என்று தெரிந்தது அம்பிக்கு. விக்கி விக்கி அழ வேண்டும் போலிருந்தது.
“அப்பா மேல எத்தனை உருக்கமான பாசம் வெச்சிண்டிருக்கே நீயி” என்று வியந்தார் வாத்தியார். “நிறைய தானம் பண்ணு. அவாளுக்கு போற வழிக்கு ரொம்ப சௌகர்யப் படுத்தும்” என்றார் புன்னகையுடன்.
அண்ணாவும் (கொழுகொழு) மன்னியும் மடிமீது கொழுகொழு குழந்தை ஏற ஏற இறக்கி விட்டுவிட்டு லேப் டாப் கம்பியூட்டரை மடிமீது ஏந்திக்கொண்டு அதைக் கொஞ்சப் போகிறார்கள். அதற்கு இத்தனை ஆவேசம் இங்கே.
அம்மாவை பிரௌசிங் சென்டருக்கு அழைத்துப் போக வேண்டி யிருந்தது. அண்ணா வாய்ஸ்மெயிலில் அழுதான். அப்பாவோட அத்தனை அட்டாச்மென்ட். யாகூ சேட்டில் அழைத்து அம்மாவும் அழுதாள். காதில் ஹெட் ஃபோன். என்ன பேசுகிறார்கள் தெரியாது. பாச மலர்கள். ஆத்திரம் வந்தது. சொன்னால், “நீயும் படிச்சிருக்க வேண்டியது தானேடா? நாங்களா உன்னைக் கையைப் பிடிச்சி இழுத்தோம்?” என்பார்கள். பள்ளிக்கூட மனப்பாடப் பகுதியில் அவன் வாசித்த ஒரு குறள். துப்பார்க்கு துப்பாய டுமீல் என்று துப்பாக்கி அம்பியைச் சுட்டு, துப்பார்க்கு துப்பாய தூ வும் மழை… என்று ஏதோ வரும்.
கடைசியாக அண்ணா அவனையும் பேசக் கூப்பிட்டான். “பரவால்லடா, நீ குடுத்து வெச்சவன். அப்பாவுக்குக் கொள்ளி போடற பாக்யம் உனக்குக் கெடச்சுதே” என்றான். ஆத்திரமாய் வந்தது. “அம்மாவை பத்திரமாப் பாத்துக்கோ” என்றான் சாஸ்திரி.
“அம்மா வராட்டியும் நீயாவது அடிக்கடி பிரௌசிங் சென்ட்டர் வந்து பேசுடா. சும்மா காசு செலவாறதுன்னு நினைக்கப்டாது. என்ன செலவாயிடப் போறது… அப்பா காரியம்லாம் நன்னா சிரத்தையா பண்ணினியா?”
“ம். ம்…” என்றான் அம்பி.
“நீ ஒரு உதவி செய்யணும்டா…” அம்பிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. த்தூ என்று துப்பும் சமூகத்தில் இருந்து அவனை மதிக்கும் ஒரு குரல். “சொல்லு. அவசியம் செய்றேன்…” என்றான் உற்சாகமாய்.
“என்னோட ஈ மெய்ல் தெரியும்லியா?”
யார் காயத்ரி தெரியவில்லை. அண்ணா “காயத்ரி கிட்ட…” என்று சொல்லுமுன் அம்பி இணைப்பைத் துண்டித்தான். “போலாம்மா” என்றான் ஹெட் ஃபோனைக் கழற்றியபடி.
**
 91 97899 87842



Comments

Popular posts from this blog