shortstory
புலிக்குகை
எஸ்.சங்கரநாராயணன்
மிக மிகத் துயரமான கண்ணீர்
ஒரு கருப்பு நங்கையின் கண்ணீர்தான்
ஏனனில் அவளை
அழ வைப்பதுழழா

சுலபமல்ல
அவள் மகனை
அவளிடமிருந்து எடுத்துச் செல்
… … ஒரு பிஎச்.டி. பட்டத்துடன்
ஓட்டலில் உணவு பரிமாறச் செய்
… …
கண்ணீர் பெருகும் உள்ளுக்குள்
ரத்தச் சிவப்பாக
அவள் கணவனை
அவளிடமிருந்து பிரித்து வை
சமையல் அறையிலேயே
சாக வை …
ஆயினும் வெள்ளையனே
நீ அவளிடமிருந்து
கண்ணீரை மட்டும் பெற முடியாது
ஏனெனில் அவள்
துயரங்களின் அரசி – (1)

அவர்கள் வந்தபோது மகாகவி எழுதிக் கொண்டிருந்தார். மேலே தொங்கிய மண்ணெண்ணெய் விளக்கின் குறு வெளிச்சம் காற்றுக்கு ஆடியாடி மேசையில் விழுந்தது. கவியின் கிழிந்த கோட்டின் தோள்ப்பக்கம் வெளிச்சத்தில் தெரிந்தது.
நஞ்சுண்டேஸ்வரன் உள்ளே வந்தவாறே “வெளிச்சம் போதவில்லை அல்லவா?” என்றார். மகாகவி திரும்பவில்லை. “ஆனால் நாடே அல்லவா இருளில் கிடக்கிறது?” என்றார் அவர்.
“இருட்டு நமது நிறம். நிகழ்காலத்தின் நிறம். வெளிச்சத்தின் வெள்ளையோ வேறுப்புக்குரியது.” கிண்கிணி நாதமாய் ஒரு பெண்ணின் குரல். மகாகவி வியப்புடன் திரும்பிப் பார்த்தார். திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தார். இருட்டு அவள்மீது கவிந்து நிழலைப் போர்த்தி யிருந்தது.
“உள்ளே வாருங்கள் பாரதமாதா”என்று மகாகவி கைகூப்பினார்.
“பரவாயில்லை” என்று இருட்டில் சற்று தள்ளியே அவள் நிழலில் உட்கார்ந்தாள்.
“என் மகள்.”
“ஓ.”
“உங்கள் ரசிகை. விநோதினி” என்றாள் அவள். “எப்பெரும் பேறு இது. உங்களை தரிசிப்பது என் நெடுநாட் கனவு…” என்றாள்.
நான் உழைத்துச் சலித்து விட்டேன்
வேறு யாருடைய நாகரிகத்தையோ
நிர்மாணித்து நிர்மாணித்து
நான் களைத்து விட்டேன் – (2)

“உங்கள் கவிதை போர்ப்பரணி. பள்ளியெழுச்சி.”
மகாகவி தலையாட்டினார். “நமக்கு நிறைய வேலை இருக்கிறது. ஆம்” எனறார்.
நஞ்சுண்டேஸ்வரன் “உணவருந்தி விட்டீர்கள் அல்லவா?” என்று பரிவுடன் கேட்டார். “கரிய இரவில் நெடிய பயணம். எங்கும் எங்கெங்கும் இரவுப் பூச்சிகளாய் சுற்றித் திரிகிறார்கள். உங்களைத் தேடிப் பிடிக்கத் துடிக்கிறார்கள். வழியில் எங்குமே நாம் இறங்வோ நிற்கவோ இயலாது.”
“வேதபுரம் இங்கிருந்து எத்தனை தூரம்?” என்று கேட்டார் மகாகவி. வேதபுரம், புதுவையின் முன்னாட் பெயர்.
“இரண்டு மணிநேரப் பயணம், எதுவும் தடை இல்லாதிருந்தால்… எதிரி வியூகத்துக்குள் புகுந்து சிப்பாய்களுக்குத் தப்பித்துப் போக வேண்டியிருக்கும். அதிக நேரம் எடுக்கலாம்.”
“வீட்டு வாசலில் சுவரொட்டி… பார்த்தீர்களா?” என்றாள் விநோதினி.
“உங்களுக்கு விலை நிர்ணயித்துள்ளார்கள். உங்களைப் பிடித்துத் தருகிறவர்களுக்குப் பரிசாம்.”
“தன்மானம் உள்ள எந்த இந்தியனும் உங்களைக் காட்டிக்கொடுக்கத் துணிய மாட்டான்…” என்றார் நஞ்சுண்டேஸ்வரன். “கிளம்பலாமா?”
“உங்களுக்குச் சளியாய் இருக்கிறதே?”
“விநோதினி” என மகாகவி அழைத்தார்.
“சொல்லுங்கள்.”
“நீ எப்படி இந்த இரவில் திரும்பிச் செல்வாய்?”
“அவளும் நம்மோடு வருகிறாள்” என்றார் நஞ்சுண்டேஸ்வரன்.
“நானும் அப்பாவும் எங்கள் உயிர்போல உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வோம்.”
“பெண்கள்… நமது அருமைப் பெண்கள்… சுதந்திரப் போரில் அவர்களின் பங்கு, ஆகா, எத்தனை முக்கியமானது.”
“பாலங் கட்டும் அணில்கள் ஐயா நாங்கள். நாங்கள் பிறந்ததே இந்த சுதந்திரப் போரில் பங்குகொள்ளவே. இது எனது பெருமை.”
“எவ்வளவு கொடுத்துவைத்தவர் நீர் நஞ்சுண்டேஸ்வரன். எத்தவம் செய்து இப்பெண்ணைப் பெற்றீர்” என மகாகவி நெகிழ்ந்தார். “விநோதினி என் உயிர்காக்கும் தாயே. அருகே வா அம்மா. நான் உன் மங்கலமான முகத்தைப் பார்க்கிறேன்.”
“ஆனால்…”
“வா பெண்ணே” என்றார் மகாகவி. விளக்கை அவள் அருகில் உயர்த்திப் பிடித்தார்.
இருளின் கருமை உதறிய வெள்ளை உடையுடன் சலூனில் முடி உதிர்த்து எழுந்தாப் போல அவள் எழுந்து நின்றாள். வெள்ளாடை. பதட்டத்துடன் விளக்கைத் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தார். பெண்ணின் நீறிட்ட நெற்றி பாழ். “ஐயோ” என்றார் மகாகவி. விளக்கை அப்படியே மேசையில் வைத்தபோது விளக்கில் உள்ளே எண்ணெய் தளும்பியது. திகைப்பு தாளாமல் மகாகவி எதுவும் பேச வராமல் நாற்காலியில் சரிந்திருந்தார்.
“ஆம் ஐயா. நான் விதவை.”
“இளம் பெண். பெதும்பை. வெள்ளாடைக் கலைவாணி. பூக்களே இல்லாத உலகம் உன்னுடையது.” மகாகவி “நஞ்சுண்டேஸ்வரன்” என்று திரும்பினார். “சற்றுமுன் உம்மை அதிர்ஷ்டக்காரர் என்றேன். நான்… என்னை…”
“விழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத நஞ்சுண்ட ஈஸ்வரன் நான்.”
“வெளியே வண்டி காத்திருக்கிறது. தட்டுமுட்டு சாமான்களுடன் ஒரு சாக்கைப் போர்த்திக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள். வேறு வழியில்லை” என்று விநோதினி புன்னகைத்தாள்.
“நாங்கள் வீட்டைக் காலி செய்துகொண்டு போகிறோம்.”
“சொல்லுங்கள்” என்றார் மகாகவி. “எப்படி நேர்ந்தது அந்த விபத்து?”
‘விபத்து அல்ல அது. கொலை.”
“ஐயோ.”
“சென்றவாரம் சிப்பாய்கள் நடுத்தெருவில் அவரைச் சுட்டுக் கொன்றனர்.”
“ஆனால் எதிர்பாராதது அல்ல அது. என் கணவர் ஒரு பரிசுத்த வீரர். அவரது மரணம் கௌரவத்துக்குரியது.”
“நிச்சயமாய் நிச்சயமாய்.” என்றார் மகாகவி. “உன்னை என்னால் மறக்க முடியாது பெண்ணே.”
“கிளம்பலாம்.”
வெளியே அமைதியாய் இருந்தது. விளக்கை அணைத்ததும் பெரும் இருட்டு அங்கே சூழ்ந்துகொண்டது. வாசலைப் பார்க்க உத்தேச திசையில் கால்களால் துழாவி  நடந்தார்கள். மாடுகள் பூட்டிய வண்டி காத்திருந்தது. கூட்டு வண்டி. உள்ளே பானை அண்டா என்று குடும்ப சாமான்கள். விநோதினி வண்டியை ஓட்ட இருவருமாக சற்று உள் பதுங்கியவாக்கில் உட்கார்ந்து கொண்டார்கள். வண்டி கிளம்பியது.
“காலை நீட்ட மடக்க வழியில்லை. சிரமந்தான்” என்றாள் விநோதினி.
“உன் கணவரின் மரணம்… எப்பேர்ப்பட்ட இழப்பு உனக்கு…” என்றார் மகாகவி.
“வெள்ளைக்காரர்கள் அவரது உயிருக்கு மாத்திரம் தந்தார்கள் விடுதலை…”
“எளிமையாய்க் கேட்கிறேன் விநோதினி. உன் மன உறுதி எனக்குப் பெரிதும் நிறைவு தருகிறது. ஆனால், நமது சுதந்திரப் போரில் கணவனை இழந்த பிறகும், தொடர்ந்து நீ, பின்வாங்காது, இழப்பைப் பொருட்படுத்தாது, ஊக்கமுடன் உன்னைப் பங்குபெறச் செய்வது எது?”
“பதிலும் எளிமையானது தான் ஐயா” என்றாள் விநோதினி. நீண்ட நெடும் பாதை. மாடுகள் இரண்டும் தளர்ந்து நடையிட்டன. இரவு முடிவற்று முன்னால் நீண்டு கிடந்தது. எங்கும் வெறுமையும் சூன்யமும் அவநம்பிக்கையுமான அமைதி, வாயில் ரப்பார் மாட்டிய குழந்தை போல.
அவர்கள் கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொண்டு வந்தார்கள்.
“என் கணவர் இறந்த பின்னும் நான் சுதந்திரப் போரில் ஈடுபடக் காரணம்… என் கணவரின் இறப்புதான் ஐயா” என்றாள் விநோதினி. “ஓர் உயரிய நோக்குடன் அவர் தன்  இன்னுயிரை ஈந்துவிட்டார். அவரது நோக்கம் பயனற்றுப் போகலாமா? அவரது லட்சியம் வீணாகலாமா? அதுவா, நான் ஒரு மனைவியாய் அவருக்குத் தரும் மரியாதை?”
“எவ்வளவு அழகாய், அலங்காரமாய், அதே சமயம் தெளிவாய்ப் பேசுகிறாய் நீ?”
“நீங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அப்பா பாவம் களைத்துப் போயிருந்தார். தூங்கியே விட்டார் போலிருக்கிறது.”
“எனக்கு உறக்கம் வரவில்லை” என்றவர் அவள் அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டார். “உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி யடைகிறேன் விநோதினி.”
“உங்களுக்கு உதவக் கிடைத்த இந்த வாய்ப்பு எங்கள் அதிர்ஷ்டம். நீங்கள் உள்ளே இருங்கள் தயவுசெய்து…”
மகாகவி மீண்டும் உள்ளே மறைந்துகொண்டார். “இரவுப் பயணம் எவ்வளவு அருமையானது” என்றார்.
“உங்களுக்கு பயமாய் இல்லையா?”
“அ” என்றார். “நீங்கள் இருக்கிறீர்கள். தவிரவும், பயந்து ஆவதென்ன?”
மேடு பள்ளங்களில் வண்டி குலுங்கிச் சரிந்து போய்க் கொண்டிருந்தது. தவிர வேறு சப்தம் இல்லை. அப்பா எப்போதோ தூங்கி யிருந்தார். மகாகவி எதுவும் பேசாமல் உள்ளே உடலைக் குறுக்கி உட்கார்ந்திருந்தார். மேலே சாக்குப் படுதா ஒன்று. விநோதமான பயணம் அது. சற்றும் அதுவரை தொடர்பு இல்லாத அவரும் விநோதினியும், ஆனால் வெகு நெருக்கமானவர்கள் போல, ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையுடன், பாசத்துடன்… அதுவே போர்க்கால அற்புதம். மகாகவி லேசாக இருமிக் கொண்டார்.
“யாரும் கவனிக்கிறார்களா விநோதினி?”
“இதுவரை இல்லை. நல்ல காலம்.”
“நல்லது. லேசான குளிரான இருள். அழகான இரவு. இந்த நிமிஷ அற்புதத்தில் தூங்கி அதை இழப்பது சரியல்ல, என்று படுகிறது. கேள் விநோதினி…”
“சொல்லுங்கள்.”
மகாகவி இரவைப் பற்றிய ஒரு கவிதை சொன்னார், சளிக்குரலில்.
ஆசையுடன் காதலனைத் தேடி விரையும்
காதலியைப் போல
இரவு
உலகென்னும் அறைக்குள் வந்து
கவனித்து உடன்பட்டு
மன நிறைவுடன்
நிலவின் குளிர் வடிக்கும் வட்ட முகத்தின்
எதிரே படுத்திருந்தது.

2
இரவு
ஒரு குறும்புக்காரக் குழந்தை
வானத்துக்கும் பூமிக்கும்
இடையிடையே நடைபழகி
சன்னல்களிலும் கதவுகளிலும்
தவழ்ந்து
அண்டை வீட்டில் எல்லாம்
கருநீலத்தை அப்பிவிடும் குழந்தை
அதைத் துடைப்பதற்குக்
கையில் துணியுடன்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டே
தொடரும் தாய்தான் பகல்

3
இரவு
வீடு வீடாகச் சென்று
கருப்புப் பை நிறைய
நட்சத்திர மிட்டாய்களும்
அட்டைக் கோப்பைகளில்
இனிக்கும் நிலவையும்
திரிந்து விற்று
கைச்சரக்கு தீர்ந்த பின்னால்
விடியற் காலையின்
சாம்பல் நிறக் காசுகளை
ஓசை எழக் குலுக்கிக் கொண்டே
வீடு திரும்புகிறது – (3)

மகாகவிக்கு நல்ல இசைஞானமும் குரல்வளமும் உண்டு என்பது விநோதினிக்குத் தெரியும். மெதுவான குரலில் அவர் மிக லயித்துப் பாடியபடி கூட வந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இப்படியே போய்க்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
“ஐயா கவனம். தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.”
மகாகவி அமைதியானர். வண்டியின் சடக்முடக் ஓசையும் மாடுகளின் நடையோசையும் தவிர வேறு சத்தம் இல்லை. எதோ ரயில்வே கிராசிங் அது. இரு சிப்பாய்கள் குதிரையில் புயல் போல் வந்தார்கள். ஏன் அத்தனை வேகம் தெரியவில்லை. ஒரு சில கார்கள் முன்னால் நின்றிருந்தன. சிப்பாய்கள் ஒவ்வொரு வாகனமாக கிட்டே போய் விசாரித்தார்கள்.
மகாகவி தும்மல் வருவது போல் உணர்ந்தார். ஐயோ இந்நேரம் பார்த்தா வரவேண்டும், என்றிருந்தது. தும்மலை அடக்கிவிடத் தவியாய்த் தவித்தார். ஐயோ மாட்டிக் கொள்வோமோ என்றிருந்தது. நாம மட்டும் மாட்டிக் கொளவ்தாய் இருந்தால் கூட பரவாயில்லை, இவர்களும் சேர்ந்தல்லவா பிடிபடுவார்கள், என்றிருந்தது. எப்படியும் தும்மக்கூடாது என்று சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். அடக்க அடக்க மூச்சு திணறியது.
சிப்பாய்கள் வண்டிக்கு அருகே வந்ததும் குதிரையில் இருந்து குதித்திறங்கினார்கள். விநோதினி ஒரு ரொட்டியைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தாள்.
“ஏய் யார் நீ?”
 “விநோதினி” எனறாள் நடுங்கினாப் போல.
“எந்தூர் உனக்கு?”
விநோதினி ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
“ஏய் ஏய் என்ன?”
“அடிக்காதீங்க அடிக்காதீங்க.”
சிப்ய்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இங்கேயிருந்து மகாகவிக்கு அவர்களைப் பார்க்க முடியவில்லை. குரல் மாத்திரம் கேட்டது. அவரால் எதையுமே யோசிக்க முடியவில்லை. அவர் மூக்கில் தும்மல் முட்டியது. எங்கே தும்மி விடுவோமோ என்று அவருக்கு பயமாய் இருந்தது.
“எங்க போறே?”
“வேவ்… வே.”
ஹச்சென்ற பெரிய தும்மல் சத்தம். சிப்பாய்கள் சட்டென திரும்பிப் பார்த்தார்கள். வண்டிக்கு அருகே வந்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.
“நா… நாந்தான்” என்று நஞ்சுண்டேஸ்வரன் எழுந்து கொண்டார். “ஒரே சளி. ஜும். அதான் பொண்ணு வண்டி ஓட்டுறா.” ஹச்சென்று திரும்ப தும்மினார்.
“யார் நீ?”
“அவளோட அப்பா. வீட்டைக் காலி பண்ணிட்டுப் போறம்…”
“இந்த ராத்திரிலயா? உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்…”
“ஐயா வேற வழி இல்லய்யா. எங்க வீட்டைத் தான் கொளுத்திட்டீங்க. மருகமனையும் சுட்டாச்சி. நாங்க என்ன பண்றது? அதான் உறவுக்காரங்க கூடயாவது போயி வாழலாம்னு ராவோட ராவா கிளம்பினோம்…’‘
“பகல்ல வெளிய வர முடியுதா? அதான் ராத்திரி கிளம்பினோம்” என்றாள் விநோதினி. “அதுலயே மணு இடத்துல சோதனை ஆயிட்டது.”
கொஞ்ச நேரம் சிப்பாய்கள் பேசாமல் நின்றார்கள். ஒரு பெண்ணே, விதவையே கெஞ்சியது அவர்களுக்கு என்னவோ போலிருந்திருக்க வேண்டும்.
“உன் புருஷன்… செத்திட்டானா?”
“ம்.”
“எப்ப?”
“போன வாரம்.”
“நீ கூட… முழுகாம இருக்கியா?”
“ஆமா” என்றாள் விநோதினி.
“சரி சரி போ” என்று வழிவிட்டார்கள்.
மகாகவியால் நம்பவே முடியவில்லை. வண்டி ரயில்வே கிராசிங் தாண்டி போய்க் கொண்டிருந்தது. மிகவும் சிரமப்பட்டு அவர் பேசாமல் வந்தார். எப்படி அவர் இதை இதுவரை கவனிக்காமல் போனார்? விநோதினி தாய்மை அடைந்திருக்கிறாளா? அடேடே. தாய்மைக் கோலத்தின் மகிழ்ச்சிப் பொழுதில் கணவனை இழப்பது… எப்பெரும் கொடுமை அது.
“விநோதினி” என மென்மையாய் அழைத்தார்.
“அவர்கள் திரும்பி வரக்கூடும். நீங்கள் தயவுசெய்து அமைதியாய் இருக்க வேண்டும்.”
ஹச்சென மகாகவி தும்மினார். “இல்லை. நீ என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்.”
“வீணாய் மாட்டிக் கொள்ளாதீர்கள்.”
“பரவாயில்லை.”
விநோதினி வண்டிக்குள் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
“சொல்லுங்கள்…”
“வயிற்றில் குழந்தையோடு… நீ… இது எவ்வளவு பெரிய ஆபத்து.”
“இல்லை” என விநோதினி புன்னகைத்தாள். “என் குழந்தை என்னுடன், என் அரவணைப்பில், இதைவிடப் பாதுகாப்பான இடம் வேறு எதை நான் அதற்கு அளிக்க முடியும்?”
“அது சரி. ஆனால் நீ…”
“அது அறியட்டும் ஐயா. இந்த சுதந்திரம் யாருக்காக? அதற்காக அல்லவா? அதன் நன்மைக்காக அல்லவா? அதற்கான நமது பாடுகளை கஷ்டங்களை அது கட்டாயம் அறிய வேண்டும். இன்றைய தலைமுறை எப்படி இருக்கிறது? பார்த்தீர்களே சிப்பாய்களை? அடிமையாக, பிறரை எதிர்பார்த்ததாக, எவ்வளவு மோசமானதாக இருக்கிறது? நீங்கள் பாடவில்லையா?
நமது எல்லா இளைஞர்களும்
காட்டில் இறந்து விட்டனர்
வகுப்பறைகளில்
அவர்களது ஆண்மை
சாகடிக்கப்பட்டு விட்டது
அவர்களது
விதைக் கொட்டைகள்
கனமான புத்தகங்களால்
நசுக்கப்பட்டு விட்டன (4)

என் குழந்தை நாளை ஓர் சுதந்திரப் பறவை. நாம் பெற முடியாத வெற்றியை, அதன் பலன்களை நாம் அதற்கு ஏற்படுத்தித் தருகிறோம்.”
 “அருமை. விநோதினி, என் தாயே.” என மகாகவி அவள் கண்களில் முத்தமிட்டார். பின் திரும்பி நஞ்சுண்டேஸ்வரனைப் பார்த்தார். “சக்தியின் வடிவம் உங்கள் பெண். உமக்குப் பிறந்த புலி. பெண்ணே, உன் மணி வயிறு, அது வயிறல்ல. புலிக்குகை. உன் குழந்தை… அது குழந்தையல்ல. அதுவே இந்நாட்டின் சுதந்திரம். சுதந்திரமே உன்னில் கருவாக உனக்குள்ளே வளர்வுறக்கம் கொண்டுள்ளது. அது வெளிவருவது நமக்கெல்லாம் ஆனந்த சுபிட்சம்.”
“ஆகா, மகாகவியல்லவா பேசுவது…” என்றார் நஞ்சுண்டேஸ்வரன்  நெகிழ்ந்து.
ஒரு புதிய பூமி எழுந்து வரட்டும்
வேறொரு புதிய உலகம் பிறக்கட்டும்
வானத்தில் அமைதி என்பது
அழகுறப் பொறிக்கப் படட்டும்
அஞ்சாமை மிக்க ஒரு இரண்டாம்
தலைமுறை வெளிவரட்டும்
விடுதலை வேட்கை நிரம்பிய
மக்கள் வளரட்டும் (5)

மகாகவி உற்சாகத்துடன் பாடினார். வண்டி போய்க் கொண்டிருந்தது.

பின்குறிப்பு
இது மொத்தமும் கற்பனையான என் கதை. வரலாற்றின் பக்கங்களைத் தேட வேண்டாம். இதில் மகாகவின் கவிதைகளாகப் பயன்படுத்தப் பட்டவை தென்னாப்பிரிக்கக் கவிஞர்கள் எழுதி இந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டு அன்னம் வெளியீடாக ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ என நூல் வடிவம் பெற்றவை. கவிஞர்கள் விவரம் 1. ரேமுரம் 2, ஃ பென்டன் ஜான்சன் 3, ஃபிராங்கு மார்ஷல் டேவிஸ் 4, ஓ கோட் மீ மீடெக் 5, மஸ்கரேட் வாக்கர்.
இந்திரனுக்கு நன்றி.

91 97899 87842






Comments

Popular posts from this blog