courtesy - solvanam net magazine
ஒரு கிறிஸ்துமஸ் மாலை
 
லாங்ஸ்டன் ஹியூக்ஸ்
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

வள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் ஜிலு ஜிலு ஜிகினாத் தொங்கல்களுடன் அலங்காரமாய்க் கூடத்தில். அதற்கு இன்னும் என்னவோ குறை என்று சாமான்கள் வாங்க எல்லாரும் வெளியே போயிருக்கிறார்கள். அங்கங்கே அதற்கு மெழுகுவர்த்திகள். அதை இனி ஏற்றவேண்டும். அவை காத்திருக்கிறாப் போலிருந்தது.
ஜோவுக்கும் ஒரு மரம் தன்னால் தர முடிந்தால் நல்லா யிருக்கும், என அர்சி நினைத்துக் கொண்டாள். இன்னுங் கூட அவனுக்கு கிறிஸ்துமஸ் மரம் வாய்க்கவே இல்லை. குழந்தையாய் இருக்கையில் இதெல்லாம் எத்தனை குஷியாய் இருக்கும். வயசு அஞ்சு முடிந்து ஆறு நடக்கிறது. ஓவனில் எதுவோ வறுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே அர்சி யோசித்தாள். என்னால் விளையாட்டு சாமான் என்று எவ்வளவு செலவிட முடியும் இன்றைக்கு, தெரியவில்லை. வாரத்துக்கு ஏழு டாலர், அவள் சம்பளம் அவ்வளவுதான். அறை வாடகை என்றும் அவள் வேலைக்கு வரும்போது ஜோவைப் பார்த்துக்கொள்ள என்று வீட்டுக்காரிக்குச் சம்பளம் என்றும் அதில் நாலு டாலர் செலவாகி விடுகிறது.
கடவுளே, குழந்தை வளர்க்கறதுன்றது சாமானியப்பட்ட காரியம் அல்ல, என நினைத்தாள்.
சமையலறை மேசை மேல்பக்க கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழைத் தாண்டியாயிற்று. இந்த வெள்ளையாட்கள் இன்னும் வெளியே திரிய என்ன இருக்கிறது? இராச் சாப்பாட்டுக்கு காலாகாலத்தில வர வேணாமா? அவர்கள் வந்தபின் அவள் வேலைமுடித்துக் க0ளம்ப வேண்டும். அவள் கிளம்புமுன் மத்த கடைகண்ணிகள் மூடிவிடக் கூடாது. அதெல்லாம் அவர்களுக்கும் நல்லா, தெரியாமல் என்ன? அவர்கள் வேகமாக வீட்டுக்கு வரவில்லை என்றால் அவள் ஜோவுக்கு எந்தப் பரிசும் வாங்கிப் போக முடியாது. ம். ஜோவைப் பாத்துக்கறாளே வீட்டுக்காரி, அவளும் வெளியேபோக விரும்பலாம். நான் போய் அவளை அனுப்ப வேண்டியிருக்குமே. அப்புறம் ஜோ… அவன் எத்தனை ஆர்வமாய்க் காத்திருப்பான்?
“என் நேரம்…” தனக்குள் அர்சி முணுமுணுத்துக் கொண்டாள். “பரிசு வாங்க என்கிட்டியே பணம் இருந்திட்டா, இந்த இரவு உணவை அப்பிடியே அடுப்பில் மூடி வெச்சிட்டு நான் கிளம்பிருவேன். கடை மூடறதுக்குள்ள போயி எதும் சாமான் வாங்கிக்குவேன்.“ இந்த வாரத்தின் சம்பளம் இன்னும் அவள் வாங்கவில்லை. எசமானி கிறிஸ்துமஸ் மாலையில் தர்றதாக வாக்கு கொடுத்திருந்தாள். அதாவது வாரம் முடியுமுன்னே ஒருநாள் முந்தியே தர்றதாகச் சொல்லியிருந்தாள்.
வாசல்பக்கம் கலகலப்பு கேட்டது. கதவில் ஒலிகள். பேச்சுகள். சிரிப்புகள். போயப்பார்த்தாள். எசமானியும் அவள் பெண்களும் மேல்கோட்டில் இருந்து பனியை உதறிக் கொண்டிருந்தார்கள்.
“ம்ம்… கிறிஸ்துமஸ் மாலை ரொம்ப அட்டகாசம்!” என்று ஒரு பெண் அர்சியிடம் சொன்னாள். “பனி அப்பிடிக் கொட்டுது. அம்மாவுக்குத் தெரு விளக்கே உதவல. கார்ல இருந்து பாதையே தெரியல. ரொம்ப ஜோரா இருக்கு எல்லாம்!”
“ராச் சாப்பாடு தயாரா இருக்கு” என்றாள் அர்சி. அந்தப் பனிக்கு அவளது ஷுக்கள்… சமாளிக்குமா என்று அவளுக்கு யோசனையாய் இருந்தது.
அந்த வெள்ளைப் பெண்கள்… அன்றைக்கு அவர்கள் அத்தனை மெதுவாகச் சாப்பிடுவது போல இருந்தது அவளுக்கு. ஒருவழியாக அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களைக் கழுவிவைக்க வேண்டியிருந்தது. பாதி வேலையில் எசமானி பணத்துடன் வந்தாள்.
“ஆர்சி…” எனற்ள் எசமானி. “மன்னிச்சிக்கோ. இப்ப… ஒரு அஞ்சு டால்ர் மாத்திரம் தரட்டுமா? பிள்ளைங்க பரிசு அது இதுன்னு தாம் தூம்னு வாரி விட்டுட்டாங்க. என்கிட்ட சில்லரையா இல்லியே?”
“இல்லம்மா. ஏழாக் குடுத்துருங்க” என்றாள் அர்சி. “எனக்கும் செலவு இருக்கு…”
“ம்… ஏழு, இருக்காது போலருக்கே” என்றாள் எசமானி. “முழு சம்பளமுமே கேப்பேன்னு நான் எதிர்பார்க்கல்ல. இந்த வாரம் முடிய இன்னும் நாள் . இருக்கே. பரவால்ல. என்கிட்ட ஏழு டாலர்… இருக்காது போல.”
அர்சி அஞ்சு டாலர் பெற்றுக் கொண்டு கிளம்பினாள். சூடான சமையலறையை விட்டு வெளியேவந்து முடிந்தவரை தன்னைப் போர்த்திக்கொண்டாள். குழந்தை ஜோவை விட்டிருக்கும் வீட்டை நோக்கி விறுவிறுவென்று நடைபோட்டாள். ஊருக்குள் வீடு வீடாக சன்னல் வழியே கிறிஸ்துமஸ் மரங்களை யெல்லாம் பார்த்துக் கொண்டே போகலாம்.
குழந்தையைப் பராமரிக்கிற வீட்டுக்காரி, சற்றே மஞ்சள் பாரித்த தேகம் அவளுக்கு. அன்றைக்கு அவள் நல்ல மனநிலையில் இல்லை. “என்னம்மா இது. இன்னிக்கு நீ கொஞ்சம் சீக்கிரமா வந்து பிள்ளையை அழைச்சிக்கிட்டுப் போவேன்னு பார்த்தேன். நானும் வெளியே போவேன்னு உனக்குத் தெரியும் இல்லியா? நான் எங்க வெளியே போறேன் சொல்லு, எப்பவாவது கிளம்பலாம்னு பாத்தா, நீ இப்பிடி தாமதமா வந்தா என்ன அர்த்தம்?”
அர்சி மௌனம் காத்தாள். அவளிடம் பேச முடியாது. பேசினால், ஏம்மா நீ பகல்ல இவனைப் பார்த்துக்கத்தானே பணம் தர்றே? பகலும் ராத்திரியும் இவனைப் பாத்துக்க வெச்சா எப்பிடி?... என ஆரம்பிப்பாள் என்று தெரியும்.
“ஜோ, கிளம்பு” என்றாள் குழந்தையிடம். “டாடா போகலாம்.”
“சான்ட்டா கிளாஸ் பாக்கலாம்… ஊருக்குள்ள. எல்லாரும் சொல்றாங்கம்மா” என்றான் ஜோ. கிழிந்த தன் மேல்கோட்டைக் கசக்கியபடியே சொன்னான். “அம்மா நான் பாக்கணும்மா.”
“அப்பிடியா?” என்றாள் அவன் அம்மா. “ஜல்தியா கிளம்பு. ரப்பர் செருப்பை மாட்டிக்க. கடையெல்லாம் மூடற நேரம் ஆயிட்டது.”
ஆறு எட்டு பிளாக்குகள் தாண்டி ஊருக்குள் போனார்கள். பனி விழ விழ ஊடறுத்துப் போனார்கள். லேசாய் உள்ளே நடுக்கியது என்றாலும் ரெண்டு பேரும் அதை ரசித்தார்கள்!
பிரதான சாலையில் நீல சிவப்பு விளக்குகள் தொங்கின. நகரக்கூடத்தின் முன்னால் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்தது. ஆனால் அதில் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லை. விளக்குகள் மாத்திரம் மினுங்கிக் கொண்டிருந்தன. கடைகளில் கண்ணாடிக்குள் நிறைய பொம்மைகள், எல்லாம் விலைக்கு.
ஜோ அவைகளைப் பார்த்ததும் ஒரே துள்ளல். “அம்மா… அது… அது…”
அம்மா அவள்பாட்டுக்கு நடந்து போனாள். மணி பத்து இருக்கும் போலிருந்தது. கடைகள் அடைக்கிற நேரம். அதற்குள் ஜோவுக்கு மலிவான கையுறைகள் எதாவது வாங்கிவிட முடிந்தால் நல்லது. அத்தோடு இந்தக் குளிருக்கு இதமாய் எதாவது அவனுக்கு வேண்டும். அது முடிந்தபின் ஒண்ணோ ரெண்டோ பொம்மை எதும் கிடைக்குதா பாக்கலாம். பெரிய கடையா இல்லாமல், குழந்தை ஆடைகளைக் குவித்து வைத்து விற்கிற இடத்தில் சல்லிசாகக் கிடைக்கும் என்று இருந்தது. எதையெடுத்தாலும் பத்து சென்ட் கடை. அங்கே பொம்மைகள் பார்க்கலாம்.
கடை சன்னல் கண்ணாடிகளின் உள் சாமான்களும் ஜோவைப் பரவசப் படுத்தின. “ஊ… பாரும்மா…” என அவன் விரலால் காட்டி கொந்தளித்தான். கடைகளின் அலங்கார விளக்குகள் கதகதப்பும் உற்சாகமும் தந்து கொண்டிருந்தன. கடைகள். அவற்றின் மினுங்கும் விளம்பரப் பலகைகள் பனியினூடே பார்க்க ஆகாவென்றிருந்தன.
கட்டை விரலைத் தனியாகவும் மத்த நாலு வில்களைப் பொதிந்து கொள்ளவுமான ‘மிட்டன்’ வகை உறைகள், மற்றும் சிறிய அவன் தேவைகள், வாங்கவே ஒரு டாலருக்கு மேல் செலவாகிவிட்டது. ஏ அன்ட் ப்பி கடையில் பெரிய தண்டு மெழுகுவர்த்திப் பொதி, நாற்பத்தி ஒன்பது சென்ட், வாங்கிக் கொண்டாள். தெருவின் நெரிசலூடே ஜோவைக் கையைப் பிடித்து அழைத்துப் போனாள். ஒரு ‘டைம்’ மலிவுக் கடையை அடைந்தார்கள். ஒரு டைம் டாலரில் பத்தில் ஒரு பங்கு. எல்லாமே அங்கே மலிவு. பத்து சேன்ட் கடைப் பக்கம் தாண்டுகையில் சினிமா தியேட்டர் ஒன்று. “அம்மா நாம சினிமா பாக்கலாமா?” என்றான் ஜோ.
அர்சி விளக்கினாள். “ம்ஹும்… இல்ல செல்லம். பால்டிமோர் மாதிரி இல்லே. அங்க நமக்குன்னு தனிக் காட்சி காட்டுவாங்க. இது மாதிரி சின்ன ஊரில், நாம கருப்பின சனங்கள், உள்ளே அனுமதி இல்லை. நாம உள்ளே போகவே முடியாது.”
“ஓ!” என்றான் குழந்தை ஜோ.
பத்து சென்ட் கடையிலும் ஒரே கும்பல். கடைக்கு வெளியேயே குழந்தையைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் உள்ளே நுழைந்தாள். அத்தனை கூட்டத்தில் அவனைக் கையை விடாமல் பிடித்துக் கூட்டிப் போவது அதுவே சிரமம். தவிரவும் என்னென்ன பொம்மைகள் அவள் வாங்கப் போகிறாள், அதை அவன் பார்க்க வேண்டாமாய் இருந்தது. நாளை அந்த பொம்மைகளை, சான்ட்டா கிளாசின் பரிசுகளாக அவன் வியப்புடன் பிரிக்கட்டும்… என நினைத்தாள்.
குழந்தை ஜோ அந்த வெளிச்சத்திலும் பனியிலும் வெளியே நின்று கொண்டிருந்தான். சனம் சனமாக அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆஹ்ஹா, கிறிஸ்துமஸ்னாலே ஜாலிதான். ஜிகினாத் தோரணங்கள். நட்சத்திரங்கள். பொது பொதுவென பஞ்சு மேகங்கள். சான்ட்டா கிளாஸ்…  எங்கேயிருந்து தான் அவர் வருவாரோ? அவர் உறைகளில் பொதிந்து பரிசுகள் போடுகிறார். தெருவெங்கும் சனங்கள் என்னமாவது சாமான் எடுத்துச் செல்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.
அப்படியே அந்த பத்து சென்ட் கடை வாசலில் காத்துக் கிடந்து நின்று நின்று என்னென்வோ யோசித்து யோசித்து அவனுக்கு அலுப்பாகி விட்டது. பக்கத்துக் கடை சன்னல்களில் எல்லாம் எத்தனை இருக்கு பார்க்க… அவன் மெல்ல அந்த பிளாக்கைத் தாண்டி, இன்னும் சிறிது எட்ட நடந்தான். பராக்கு பார்த்த நடை. அப்படியே நகர்ந்து வெள்ளைக்கார சினிமா வளாக வாசலுக்கு வந்திருந்தான்.
வெளி முற்றத்தில் கண்ணாடிக் கதவுகளுக்கு உட்பக்கமாக நல்ல கதகதப்பான இடம். முழு வெளிச்சத்தில் எல்லாம் மகா அழகாய் இருந்தது. உள்ளே நட்சத்திரங்கள் வண்ண ஒளிக் கீற்றுகளை திசையெங்கும் சிதறியடித்துக் கொண்டிருக்க, ஒரு அழகான கிறிஸ்துமஸ் மரம். மரத்தின் அருகே குதூகலப்பட வைக்கும் ஒரு மனிதன். அவனைச் சுற்றி பெரியவர்களும், குழந்தைகளுமாக, ஆமாம், எல்லாருமே வெள்ளைக்காரர்கள், அது ஒருவேளை மனிதனே தானா? என்ன வேஷம் இது? குழந்தையின் கண்கள் அகல விரிந்தன. இல்லல்ல. அது மனிதன் அல்ல. யார் அது? சான்ட்டா கிளாஸ்!
குழந்தை கண்ணாடிக் கதவுகளில் ஒன்றைத் தள்ளித் திறந்தான். அந்த முற்றத்துக்குள் ஓடினான். வெள்ளைக்காரர்களின் சினிமா வளாகம். குழந்தை அந்தக் கும்பலை இடித்துத் தள்ளிக்கொண்டு ஊடே புகுந்து போனான். சான்ட்டா கிளாசை கிடடத்தில் போய் நன்றாகப் பார்க்கலாம் என்று போனான் அவன். சான்டடா கிளாஸ் பரிசுகள் அளித்தபடி இருந்தார். குழந்தைகளுக்கான சின்னப் பரிசுகள். சின்னப் பெட்டிகளாய் மிருகங்கள் படம போட்ட  பட்டாசுகள். லாலி பாப் போன்ற குச்சி மிட்டாய்கள். அவர் பின்னால் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு அறிவிப்பு. குழந்தைக்கு அதைப் படிக்கத் தெரியாது. வாசிக்கத் தெரிந்தவர்கள் அதை இப்படிப் புரிந்து கொண்டார்கள். நமது இளம் தளிர்களுக்கு சான்ட்டா கிளாசின் சிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
முற்றத்தில் மேலும் அறிவிப்புகள் இருந்தன. திரைப்படம் முடிந்து வெளியே வந்தால் குழந்தைகளுடன் இங்கே சிறிது நின்று எங்கள் சான்ட்டா கிளாசைப் பார்த்துவிட்டுப் போங்கள். இன்னும் ஒரு தகவல் பலகையும் இருந்தது. ஜெம் திரையரங்கம் தனது வாடிக்கையாளர்களை சந்தோஷப் படுத்துகிறது. எங்கள் சான்ட்டாவைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்.
சிவப்பு சூட் அணிந்து சான்டடா கிளாஸ். வெள்ளைத்தாடியில் அங்கங்கே பனியும் ஜிகினாவுமாய் மினுங்கியது. அவரைச் சுற்றிலும் விளையாட்டு கிலுகிலுப்பைகளும் டிரம்களும் ஆடுகுதிரைகளும். அவை இன்னும் யாருக்கும் பரிசளிக்கப் படவில்லை. என்றாலும் அறிவிப்புகள் சொன்னவை வேறு. (குழந்தைக்கு எப்படி வாசிக்க முடியும்?) அதிர்ஷ்ட எண்கள் அச்சிடப்பட்ட சீட்டுக்காரர்களுக்கு இன்றைக்கு இரவு அவை மேடையில் பரிசளிக்கப் படும். இப்போது சான்ட்டா கிளாஸ் இனிப்புகள், குச்சி மிட்டாய்கள் என்று தான் பரிசுகள் தந்தவண்ணம் இருந்தார். விலஙகுகள் படம் போட்ட பட்டாசுகள் தந்தார்.
அந்தக் குச்சி மிட்டாயைப் பெற்றுவிட அவன் துடித்தான். அவன் சான்ட்டா கிளாசுக்கு இன்னும் கிட்டே வந்தான். சரியாக அந்தக் கூட்டத்தை விலக்கிப் பின்தள்ளி முன்னால் வந்திருந்தான். சான்ட்டா கிளாஸ் இப்போது அவனைப் பார்த்தார்.
ஒரு நீக்ரோ வாண்டுவைப் பார்த்தாலே ஏன்தான் இந்த வெள்ளைக்காரர்கள் ஈயென்று இளிக்கிறார்கள் தெரியவில்லை. சான்ட்டா ஈயென்று இளித்தார். சுற்றி மற்றவர்களும் கருப்பின ஜோவைப் பார்த்துவிட்டு ஹோவென இளித்தார்கள். வெள்ளைக்காரர்களின் திரையரங்க முற்றத்தில் இந்த நீக்ரோவுக்கு சோலி என்ன? பிறகு சான்ட்டா முன்குனிந்தார். அதிர்ஷ்டப் பரிசு என வைத்திருந்த ஒரு பெரிய கிலுகிலுப்பையைக் கையில் எடுத்தார். காபரே நடனங்களில் அதிர அதிர வாசிக்கிற பெரிய கிலுகிலுப்பை அது. அதை ஜோ முன்னால் வேகமாகக் குலுக்கினார். ரொம்ப வேடிக்கையாய் இருந்தது. வெள்ளை சனங்களும் குழந்தைகளும் சிரித்தார்கள். ஆனால் குழந்தை ஜோ, அவன் சிரிக்கவில்லை. அந்த சப்த நாராசத்தில் அவன் வெருண்டுபோனன். கிலுகிலுப்பையின் பயங்கர ஒலியிரைச்சலில் அந்த கதகதப்பான முற்றத்தை விட்டு வெளியே ஓடினான். பனி கொட்டும் தெருவுக்கு வந்தான். சனங்கள் நடமாட்டம் இருந்தது. வெள்ளைக்காரர்களின் சிரிப்பு அவனைக் கலவரப்படுத்தி யிருந்தது. அவனுக்கு அழுகை பீரிட்டது. அம்மா… என்று தேடி ஒடினான். அதுவரை சான்ட்டா கிளாஸ் அவனைப் பார்த்து பெரும் கிலுகிலுப்பை காட்டி சப்த ஓலத்துடன் பயமுறுத்தும் என்று நினைத்ததே கிடையாது. சான்ட்டா கிளாசின் அந்தமாதிரியான சிரிப்பு… அதையும் அவன் எதிர்பார்க்கவில்லை.
கூட்ட நெரிசலில் தெருவில் தப்பான வழியில் போய்விட்டான் அவன். பத்து சென்ட் கடையும் காணோம். அம்மாவையும் காணவில்லை. எங்கும் நிறைய சனங்கள். எல்லாரும் வெள்ளைக்காரர்கள். பனியில் வெள்ளை நிழல்களாய் அவர்கள் கடந்து போனார்கள். வெள்ளைக்காரர்களின் உலகமாய் இருந்தது அது.
தேடித் தேடி பொழுது நீண்டவண்ணமாய் இருந்தது. திடீரென்று அவன் அர்சியைக் கண்டான். அத்தனை வெண்மைக்கு நடுவே கருப்பினப் பெண். முகம் நிறையக் கவலை. நடைமேடையின் குறுக்கே நெரிசலில் புகுந்துவந்து அவனைப் பற்றிப் பிடித்தாள். அவள் ரெண்டு கையிலும் சாமான் பைகள் இருந்தாலும் எப்படியோ அவனை இறுக்கமாய் ஒரு பிடி பிடித்து அவன் பல் கிட்டிக்கும் படி உலுக்கினாள்.
“நான் சொன்னா சொன்ன இடத்துல நிக்க முடியாதா உன்னால?” சத்தமாய்க் கத்தினாள். “ஏற்கனவே நான் ஆஞ்சி ஓஞ்சி போயிருக்கேன். இத்தோட உன்னை வேற தேடித் தெருத் தெருவா அலைஞ்சி திரிய வேண்டியதாப் போச்சு. சரி தொலைஞ்சிட்டான்னு தலை முழுகிறலாம்னு பார்த்தேன்!”
குழந்தை ஜோ மெல்ல நிதானத்துக்கு வந்தான். வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். திரைப்பட வளாகத்தில் இருந்தத விவரம் சொன்னான் ஜோ.
“ஆனா சான்ட்டா கிளாஸ்… எனக்கு ஒண்ணுகூடத் தரலம்மா.“ அவனுக்குக் கண்ணில் தண்ணி வந்துவிட்டது. “என்னைப் பார்த்து அவர் ஏற்படுத்திய இரைச்சலில் நான் ஓடியாந்துட்டேம்மா.”
“அதான் சரி…” என்றாள் அர்சி. கால்கள் பனியைப் பரசி விட்டபடியே நடந்தன. “உனக்கு என்ன சோலி அங்கே? நான் என்ன சொன்னேன்? நான் சொன்ன இடத்திலேயே நீ நின்னுட்டிருந்திருக்கணுமா வேணாமா?”
“ஆனால் நான் அங்கே சான்ட்டா கிளாசைப் பார்த்தேன்” என்றான் ஜோ. “அதான் உள்ளே போனேன்…”
“ஹா! அது… அது சான்ட்டா கிளாஸ் இல்லேடா” என்று அர்சி விளக்கம் சொன்னாள். சான்ட்டா கிளாசா இருந்தால் உன்னிட்ட அவரு அப்பிடி நடந்துக்கிட்டிருக்க மாட்டாரு. அது வெள்ளைக்காரங்களோட திரையரங்கம். நாந்தான் சொன்னேன் இல்லியா? அது யாரோ வெள்ளைக்கார கிழவன்… அவ்வளவுதான்.”
“ஓ” என்றான் குழந்தை ஜோ.
ஆங்கில மூலத்தில் ONE CHRISTMAS EVE – ஆங்கிலப் பிரதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

https://literaryfictions.com/fiction-1/on-christmas-eve-by-langston-hughes/

Comments

Popular posts from this blog