கவாஸ்கர்


எஸ். சங்கரநாராயணன்

சார் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று தெரியும் தான். மூன்று நாளாய் மழிக்கப்படாததால் கன்னப் பகுதிகளில் சாம்பல் மூட்டம். வெண்மையும் கருமையும் குழம்பிய மங்கலான புதுநிறம். நியதிகள் தன்னைவிட்டு விலகி வருகின்றன என்று சார் உணர்ந்தார். தினசரி சவரம், கன்னம் பொலிய தனி மிடுக்குடன் சார் அலுவலகம் நுழைவார். வேகமும் தன்னம்பிக்கையும் சார்ந்த உறுதியான நடை. எல்லாம் கட்டுத் தளர்ந்திருக்கின்றன. மெதுவான நடை நடந்து நேற்று ஐந்து நிமிடத் தாமதத்துடன் அலுவலகம் நுழைந்தார். யாரும் கேட்கவில்லைதான். யார் அவரைக் கேட்க முடியும்? இருந்தாலும் லஜ்ஜையாய் இருந்தது. முதலில் கொஞ்ச நேரம் தயக்கத்துடனேயே பேச வேண்டியதிருந்தது. அவர் அறைக்குள் நுழைந்ததும் சேவகன் வந்து புது மேனேஜர் காத்திருப்பதாகச் சொல்லி விட்டுப் போனான்.
புது மேனேஜன். இளைஞன். கோட்டைக் கழற்றித் தோளில் போட்டிருந்தான். வாயில் சிகெரெட். ‘ஹல்லோ’ என உற்சாக வெள்ளமாய் உள்ளே நுழைந்தான். புகை பிடித்தபடி அவரது அறைக்குள் நுழைவது அவருக்குப் பிடிக்காது. அவர் அவனைப் பார்த்தார். ‘வாங்க’ என எழுந்து வந்து கைகுலுக்கினார்.
அவன் பெயர் சிவாஜிராவ். வெளிநாட்டில் வர்த்தகப் படிப்புகள் முடித்துவிட்டு வேறொரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை, இந்தக் கம்பெனி அழைத்து, நாளை முதல் இங்கே பதவியும் கொடுத்திருக்கிறது.
‘கணேசன்’ என்று தன்னை எளிமையாய் அறிமுகப்படுத்திக் கொண்டார். வேட்டி கட்டிய, முழுக்கைச் சட்டை போட்ட கணேசன். இந்திய ஆங்கிலம்-இம்பார்ட்டண்ட்டு, டிஃபிகல்ட்டு, என உகரம் சேர்ந்த வாக்கிய முடிவுகள். ஐம்பத்தியாறில் ஒரு சாதாரண குமாஸ்தாவாகச் சேர்ந்து, படிப்படியாக ஒவ்வொரு அடியாக அவர் மேலே வந்தார்.
‘இன்ட்ரஸ்டிங்’ என்றான் அவன். அறுக்கிறான், என மனதுக்குள் நினைத்ததை நாசூக்காக வெளிப்படுத்துகிறான் என்று அவர் புரிந்து கொண்டார். பேசியபடியே ஒவ்வொரு சிகரெட்டாக அவன் பற்ற வைத்துக் கொண்டே யிருந்தான். என்ன செலவு, உடம்புக்குதான் என்ன ஆகும், என்று அவருக்குக் கவலையாய் இருந்தது. மறுநாள் முதல்தான் அவன் வேலைக்கு வரவேண்டும். ஒரு சம்பிரதாயமற்ற சந்திப்பினைத் தான் விரும்பியதாகச் சொன்னான்.
‘ஊழியர்களை அறிமுகம் செய்யட்டுமா?’
‘நாளைக்கு’ என்றான் சிவாஜிராவ்.
‘கோப்புகள் எதையும் பார்க்கிறீர்களா?’
‘அதைவிட’ என அவன் சிரித்தான். ‘நமது ஊழியர்களைப் பற்றி எனக்குப் பயனுள்ள தகவல்களைச் சொல்லுங்கள்.’ தன்னம்பிக்கை நிறைந்த அவன் கண்கள் அப்போது சுடர்விட்டன.
‘மிஸ்டர் எஸ்ஸெம்ஜி, அப்படித்தானே இங்கே எல்லாரும் உங்களை அழைக்கிறார்கள்?’
‘ஆம்’ என அவர் புன்னகைத்தார்.
அவன் உதட்டில் ஆடிக் கொண்டிருந்த சிகரெட் நின்றது. ‘அருமையானவர் நீங்கள். கம்பெனிக்கு உங்கள் இழப்பை நான் ஈடு செய்வது கடினம்தான். முயற்சிக்கிறேன்,’ என்றபடியே எழுந்து வந்து கைகுலுக்கினான்.
‘நாளை காலை நீங்கள் எங்கள் வீட்டில் உணவருந்துகிறீர்கள். நாம் அப்படியே உங்கள் காரில் அலுவலகம் வந்து விடலாம்.’
‘அலுவலகக் காரில்...’
அவன் தலையாட்டினான். ‘என் மனைவியும் உங்களைப் பார்க்க சந்தோஷப்படுவாள். ஆக நாளை காலை உங்களை எதிர்பார்க்கிறேன்.’
‘நல்லது.’
‘ஒன்பது மணிக்கு’ என்றபடி சிவாஜிராவ் கிளம்பிப் போனான்.
  •  
எஸ்ஸெம்ஜி காலை சீக்கிரமே எழுந்து விட்டார். மப்பும் மந்தாரமுமான ஆகாயம் போல, இரவு தூக்கமாகவும் தூக்கமின்றியும் கழிந்தது. விடியலை அறிவு தன்னிச்சையாய் உணர்ந்து விழிப்பு தட்டியது. எழுந்து கண்ணாடி பார்த்தார். தலைக்குச் சாயம் பூசலாமா என ஒரு நாளும் இல்லாமல் யோசனை வந்தது. ‘அ’ என்று நினைவுகளைக் குப்பையாய் ஒதுக்கினார். நரையும் ஓர் அழகுதான். சுத்தமாய் சவரம் பண்ணிக் கொண்டு யுடிகொலோன் தடவிக் கொண்டார். ஆம்பளை வாசனை. மகனும் மருமகளும் எழுந்து கொள்ளவில்லை. சரி, குளித்துவிடலாம், என்று போனார். குளிரக் குளிர அருமையான் குளியல். வெளியே வந்தபோது மருமகள் வாஷ்பேஸினில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஒரு நிமிஷம்.’
‘அவசரமில்லம்மா.’
நேரமாகவில்லை. நிறைய நேரமிருந்தது. பேப்பரை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனார். எப்போதுமே விளையாட்டு பகுதியிலிருந்து அவர் வாசிப்பது வழக்கம். முதலில் மேலோட்டமாகத் தலைப்புகளை மாத்திரம் வாசித்து முடித்தபோது காப்பி வந்தது.
‘என்ன டிபன் பண்ணணும் உங்களுக்கு?’ என்று மருமகள் கேட்டாள்.
‘புதுசா மேனேஜர் வந்திருக்காரில்ல? காலைல அவங்க வீட்ல சாப்பிட வரேன்ருக்கேம்மா.’
‘ஓ’
பேப்பரை முழுக்க வாசித்து முடித்தார். இன்னும் நேரமிருந்தது. இப்படி இதுவரை தோன்றியதேயில்லை. பேரக் குழந்தைகள் ஊருக்குப் போயிருந்தன. அவை இருந்தால் வீடு இப்படி அமைதியாய் இருக்காது. பொழுது ‘றெக்கை’ கட்டிப் பறக்கும். ஐயோ இவர்கள் என்னைத் தனியே விட்டால் பரவாயில்லையே என்றிருக்கும். குழந்தைகளிடமோ, மகன் மருமகளிடமோ அவருக்கு ஏனோ ஒட்டவில்லை. மனைவி இறந்தபின் நினைவுகள் உட்சுருண்டு விட்டன. எப்படியோ பிறகு கரையேறி வந்தார். ஆறு வருடங்கள். தானே தனக்குத் துணையாய் ஆறு முழு வருடங்கள் கடந்து விட்டன... இனி என்ன, என்று புதுசாய் ஒரு கேள்வி பிறந்திருக்கிறது. நாளை முதல் அலுவலகம் போக  வேண்டியதிருக்காது. என்ன செய்யப் போகிறேன் என நினைக்கவே திணறியது. ‘அ’ என நினைவுகளை ஒதுக்கினார். காற்று மீண்டும் மீண்டும் ஒதுக்கிய குப்பைகளைக் கலைத்து நடுவீதியில் போட்டது. அ- என்னிடம் ஏராளமாய் மிச்சமிருக்கிறது, என்று தனக்குத்தானே போலச் சொல்லி கொண்டார். சக்தி, உழைப்பு, உறுதி, நிதானம், தன்னம்பிக்கை... ஏராளமாய் இருக்கிறது.
கௌசல்யா இறந்த சில காலம் எவ்வளவு கொடூரமாய்க் கழிந்தது- சூன்யவெளி. துக்கம். வேதனை. கூடவே பயம். நினைவின் வெருட்டல்... ஆனால் வாழ்க்கை மிச்சமிருந்தது. ஒரு கை ஒடிந்தது  உண்மைதான். இன்னொரு கை இன்னும் இருக்கிறது. அவர் மனைவியின் நினைவுகளைப் புறக்கணித்தார். தான் - தான்மட்டுமான உலகு. தன்னை முற்றிலும் அலுவலகத்தோடு அவர் இணைத்துக் கொண்டார். மிகுந்த உழைப்பும் உற்சாகமும் காட்டினார். தொலைபேசியில் அவரது ஆளுமைநிறைந்த குரலால் வெற்றிகளைக் குவித்தார். இரவுகளில்கூட அவர் அலுவலகம் பற்றியே சிந்தித்தார். பிரச்சனைகளை அசை போட்டபடியே அவர் தூங்கிப் போனால் தீர்வுகள் சில சமயம் கனவில் துள்ளி வரும். மறுநாள் காலை மகிழ்ச்சியுடன் அலுவலகம் போவார்.
ஒரே வருடம். அவருக்கு மேனேஜராகப் பதவி உயர்வு கிடைத்தது. அலுவலகக் கார். வீட்டுக்குத் தொலைபேசி. இஷ்டம்போல் செலவு செய்ய ஒரு பெரிய தொகை. அவர் தான் தலைமை எழுத்தராகப் பணியாற்றியபோது பயன்படுத்திய அதே நாற்காலியை இப்போதும் உள்ளே போட்டுக்கொண்டார். எளிமையானவராய் ஆனால் கண்டிப்பானவராய்த் தன்னைக் காட்டிக் கொண்டார். நிர்வாக ஒழுங்கு முறைகளை யாரும் அலட்சியப்படுத்தி விடாமல் கவனித்துக்கொண்டார். காலதாமதமாய் அலுவலகம் வருவதோ, ஓய்வுநேரம் தவிர அரட்டையடிப்பதோ, வேலைநேரத்தில் வெளியே போய்வருவதோ அவரிடம் முடியாது. பழகியபின், ஆனால் அந்நியதிகள் சுய திருப்தியளித்தன. அலுவலகத்தில் தட்டச்சுப்பொறி எழுப்பும் ஒலி தவிர அமைதி நிலவியது. கறைபடாத பரிசுத்தமான அமைதி. கிறீச்சுக் குரலில் மின்விசிறி எதுவும் சப்தமெழுப்பினால் கூட உடனே அவை மாற்றப்பட்டன. அமைதியின் பவித்திரம். யாருமே அதைக் கலைக்க விரும்பவில்லை.
ஐந்து வருடங்கள். யாரிடமும் கெட்டபேர் வாங்காமல் - நல்ல பேர் வாங்கியிருக்கிறாரா தெரியவில்லை - விஷயங்களை நேரடியாக அணுகி, ஊழியரின் நியாயங்களைப் பொருட்படுத்துவதாக அவர்களை நினைக்கவைத்து, தனித்தனியே அவர்கள் ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு, அவர்களது குடும்பவைபவங்களில் முற்றிலும் வேறாளாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டு, அதேநேரம் தனது இடைவெளியையும் உணர்த்திக்கொண்டு... வெற்றிகரமான ஐந்து வருடங்கள்.
சிவாஜிராவ் அலட்சியமான இளைஞன். விஷயங்களை வெகு சுருக்கமாக கிரகித்துக் கொள்கிறான். அப்படியே எதிராளியின் பலவீனங்களையோ, அவனை மடக்கி வீழ்த்துகிற ஓர் ஆயுதத்தையோ தற்காப்பு முயற்சியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விடுகிறான். அதுவரை உதட்டில் அலட்சியமாய் ஆடிக்கொண்டிருந்த சிகரெட்டை நிறுத்தி, பின் கடித்து துப்புவதுபோல அலட்சிய ஆங்கிலம். ஆனால் சாதுர்யமான வார்த்தைகள். ஓர் உள் த்வனியும், அர்த்தமும், அழுத்தமும். அது வெளித் தெரியாத அலட்சிய பாவனை அவன் முத்திரை. தன்னெச்சரிக்கையான சிவாஜிராவ்.
வாசல் கதவின் ‘க்ணிக்.’ எழுந்துபோய்ப் பார்த்தார். ட்ரைவர் மாடியைப் பார்த்து தொப்பியை கழற்றி வணங்கினான்.
  •  
சிவாஜிராவ் வாசலுக்கு ஓடிவந்தான். பளபளவென்று குர்தா. மேடைப் பாடகன் போல- சிவப்பு தூக்கியடித்தது. பளீரென்றிருந்தான். ஓர் இளமைப் புயல் போல வாசலுக்கு வந்தான்.
‘வாங்கோ எஸ்ஸெம்ஜி, சரியா ஒன்பது மணிக்கு வந்தாச்சி.’
‘நான் நேரம் தவறுவதில்லை.’
‘அட’ என்றான் சிவாஜிராவ். ‘நா ரொம்ப மோசம் அந்த விஷயத்தில். முடியல்ல சார். டயத்தைவிட விஷயம் முக்கியம் இல்லையா?’
‘ரெண்டுமே முக்கியம்’ என்றார் சார்.
‘ஓ’ என்று தோளை அலங்காரமாய்க் குலுக்கினான். ‘நிர்மலா?’ என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டான்.
வணக்கம் செலுத்தியபடியே ‘சௌக்கியமா?’ என்றார் பிரியத்துடன்.
‘உங்க ஆசிர்வாதம்’ என்றாள் நிர்மலா. அவனைவிட அவள் தமிழ் கொச்சையில்லாமல் பேசினாள்.
‘ஒரு அஞ்சி நிமிஷம்.’
‘அதுக்கென்னம்மா... இந்த ஊர் உங்களுக்குப் புதுசா இருக்கும்...’
‘இல்லை, என் தம்பி இங்கேதான் பெண்ணெடுத்திருக்கிறான்...’
‘ஓஹோ.’
அவள் உள்ளே போனதும் சிவாஜிராவ் ‘பேப்பர் பாக்கறீங்களா?’ என்று கேட்டான்.
‘ஆச்சி’ என்று அவர் புன்னகைத்தார்.
‘ஜெ. பரவாயில்லை- பல்கலைக்கழகத்துல பதவி யேத்துக்கிட்டது அருமையான விஷயம்தான். இல்லையா? நிறைய நம்பிக்கை ஏற்படுத்தறாங்க...’
‘இப்பதானே பதவிக்கு வந்துருக்காங்க? போகப் போகத் தானே தெரியும்?’ என்றார் எஸ்ஸெம்ஜி. ‘கவாஸ்கர் பாத்தீங்களா, இந்தியா இலவன்ல எழுபத்தி நாலு அடிச்சிருக்கான். எ லாட் ஆஃப் ஃபயர் யெட் வித்தின் ஹிம்மு.’
‘கர்நாடகால பௌலரே கிடையாது சார். மத்தபடி சுனில் கன்சிஸ்ட்டண்ட்டா ஆடுவான்னு சொல்ல முடியாது. ஃபார்ம் போச்சில்ல? அவன் ஒண்ணே ஒண்ணு பண்லாம் இனிமே...’
‘என்ன’
‘விளம்பரப் படத்துல நடிக்கலாம்...’
அவரும் சிரித்தார். ‘டீம் தோக்கும்போது எத்தனையோ தடவ நின்னு விளையாடிருக்கான் மிஸ்டர் ராவ். Experience pays - இல்லையா?’
சிவாஜிராவ் எதோ சொல்லுமுன் நிர்மலா வந்து அவர்களை சாப்பிடக் கூப்பிட்டாள்.
  •  
இரவோடிரவாக சிவாஜிராவ், அலுவலகத்தில் அநேக மாற்றங்களைச் செய்திருந்தான். மேனேஜர் அறை வலது மூலைக்கு மாற்றப்பட்டு குளிர்சாதனம் பொருத்தப் பட்டிருந்தது. சந்திக்க வருகிறவர்களுக்காக நாலைந்து புது இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சேவகன் சீருடையில் இல்லாமல் ஆனால் கம்பெனி பாட்ஜ் குத்தி நின்றிருந்தான்.
மாற்றங்கள். அவன் அறைக்குள் நுழைந்தார்கள். மலைத்துப் போனார் கணேசன். நவீனமான ஆடம்பரமான அறை. தரையில் கம்பளம். முகம் தெரியும் மேஜை. சுற்றிலும் குஷன் வைத்த நாற்காலிகள். அவனுக்கு சுழல் நாற்காலி. பின்பக்கம் கடற்கரை போல வால்பேப்பர். குளிர் சாதனம். கம்மென்ற சென்ட்டின் இதம். அலமாரியில் புத்தகங்கள். வெளிநாட்டுத் தொலைபேசி. பீங்கானில் ஒரு நிர்வாணப் பெண் சிலை சுற்றிலும் அவளை மூடியபடி பூக்கள்.
‘வாங்கோ எஸ்ஸெம்ஜி.’
‘இரவோடிரவாகவா?’
அவன் புன்னகைத்தான். ‘ஒரே இரவில் பாலமே கட்டுகிறார்கள். அமருங்கள் எஸ்ஸெம்ஜி.’
‘ஊழியர்களை அறிமுகப் படுத்தட்டுமா?’
‘ஓ’ என வெளியே வந்தான். வாயில் சிகரெட் மேலும் கீழும் ஆடிக்கொண்டே வந்தது. கையில் அதைப் பிடிக்காமலே முழுதும் இழுத்து ஊதிவிடுவான் போலிருந்தது.
‘இவன் பூரணசந்திரன்...’
‘உங்களைப் பற்றி நேற்று சார் மிக உயர்வாகச் சொன்னார்’ என்று கைகுலுக்கியபடியே தாண்டிப் போனான்.
‘இவர் தினகரன்...’
‘சிகரெட்?’ என சிவாஜிராவ் நீட்டினான்.
‘இல்லை, நான்...’ என்றபடி தினகரன் எஸ்ஸெம்ஜியைப் பார்த்தான்.
‘உங்கள் உதடுகள் - நீங்கள் புகைபிடிப்பீர்கள் அல்லவா?’
‘ஆனால்...’
‘பரவாயில்லை. நான் உங்கள் அதிகாரியல்ல. நண்பன்.’
‘நன்றி சார்... வேண்டாம் இப்போது.’
‘கமான் ஐஸே’ என்று சிவாஜிராவ் திணித்தான். ‘உங்கள் கை ஏன் நடுங்குகிறது?’
சார் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். தான் எதுவும் பேசக் கூடாது என்று சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டார்.
‘இனி?’ என்று சிவாஜிராவ் அவரைப் பார்க்கத் திரும்பினான்.
‘அலுவலக சொத்துக்களை நான் கணக்குடன் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.’
‘எல்லாம் தயாராய் வைத்திருப்பீர்கள். காட்டுங்கள் கையெழுத்திடுகிறேன்.’
‘ஆனாலும்-’
‘போகலாம்... அந்தப் பக்கம் என்ன இருக்கிறது?’
‘காண்பிக்கிறேன்’ என்று எஸ்ஸெம்ஜி முன்னால் போனார். அவன் பேசியபடியே பின்னால் வந்தான். ‘மிஸ்டர் எஸ்ஸெம்ஜி, புகை பிடிப்பது பிடிக்காது உங்களுக்கு. யாரும் அலுவலகத்துக்குள் புகைபிடிக்கக் கூடாது என்பது உங்கள் சட்டம். அல்லவா?’
‘நீங்கள் மாற்றிவிட்டீர்கள்.’
‘ஆம்’ என்றான் சிவாஜிராவ். ‘அலுவலகத்தில் அமைதி தேவையற்றது. இருபது பேர் சேர்ந்த இடம் கலகலப்பாக இருக்க வேண்டும். சப்தம் உயிரின் அடையாளம்...’
‘உங்கள் விருப்பம்.’
‘ஆம்.’ என்றான் அவன். ‘ஒரு மாறுதலுக்காக...’
‘அப்படியென்றால்?’ என்று சார் திரும்பினார்.
‘ஆம் - நீங்கள் தளர்த்தியிருந்தால், நான் கட்டுப்பாடுகளை விதித்திருப்பேன்.’
‘ஆனால்...’
‘நல்லது, பொறுத்திருந்து பாருங்கள்.’
‘அது சரிதான்’ என அவர் ஒத்துக் கொண்டார்.
‘பழைய ஆவணங்கள் அறை. இவர் சிவகுமார்.’
‘ஓ - நம் கிளை என்றிலிருந்து இயங்க ஆரம்பித்தது திரு. சிவகுமார்.?’
அவன் ஒரு வெட்கத்துடன் தோளைக் குலுக்கினான்.
‘ஆவணங்களை கவனமாகப் பராமரியுங்கள். இந்தப் பணி வெறுக்கத் தக்கதல்ல.’
‘சரி’ என்றான் சிவகுமார்.
அவர்கள் அடுத்த அறைக்குப் போனார்கள். சிவாஜிராவ் ரொம்பவும் அறிந்தவன் போல அங்கே நடமாடியது அவருக்கு வியப்பளித்தது. எனினும், அனுபவம்- அது மிக முக்கியம் அப்பா. உன் தன்னம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஆனால்...
‘உடைந்த மரச்சாமான்களின் அறை’ என்றார் சார். அவன் தலையாட்டியபடியே திரும்பிப் பார்த்தான். ஆடிக்கொண்டிருந்த சிகரெட் நின்றது.
‘மிஸ்டர் எஸ்ஸெம்ஜி?’
‘சொல்லுங்கள்’
‘அலுவலக நடைமுறைச் சிக்கல்களில் தேவைப்பட்டால் நான் உங்கள் உதவியை நாடுவேன்.’
‘தாராளமாக’ என்றார் சார். மகிழ்ச்சியுடன் ஓரடி முன்னால் வந்தார். அவனுக்குப் பின்புறம் அவர் பார்த்தார். நேற்றுவரை அவர் பயன்படுத்திய பழைய நாற்காலி அறைக்குள் குப்புறக் கிடந்தது.

இந்தியா டுடே’ இரு வார இதழ்
91 97899 87842

Comments

Popular posts from this blog