அலுவலர்
(நன்றி கல்கி வார இதழ்)
எஸ். சங்கரநாராயணன்

சித்திரவேல் இன்றைக்கு பதவி ஓய்வு பெறுகிறார். வந்துவிடும் வந்துவிடும் என்று காத்திருந்த நாள், வந்தே விட்டது!
உலகம் அதுபாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் தனக்குதான் வாழ்க்கை ஓய்வுபெறும் நாளைநோக்கி நாள்நாளாய்க் குறைகிறாப் போலவும் அவருக்கு இருந்தது. தினசரி கண் விழிக்கையிலேயே, இன்னும் எத்தனை நாள் இருக்கு, என்கிற யோசனையைத் தவிர்க்க முடியவில்லை. அட வரும்போது வரட்டும், என இருக்க முடியாமல் அலுவலகத்தில், ஓய்வுக்குப் பின்னான பென்ஷன் சார்ந்த விவரங்களைக் கேட்டு வாங்கிக்கொண்டே யிருந்தார்கள். ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தாள் தாளாய்க் கையெழுத்திட்டுக் கொடுத்தார். திடீரென்று தான் அலுவலகத்தில் நிறைய வேலை செய்கிறாப் போலிருந்தது!
மனைவியுடன் சேர்ந்து ஆறு புகைப்படங்கள் தந்தார். அவர்காலத்துக்குப் பின் ஓய்வூதியம் அவளுக்கு வரும். அவளும் வேலைக்குப் போகிறாள். தனியார் கம்பெனி. இவரைவிட மூணுவயசு தான் இளையவள். புகைப்படத்தைப் பார்த்தார். அவள் முதுமை அடைந்த மாதிரியே தெரியவில்லை. சதை வரம்பு மீறாமல், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாப் போல உள்ளமைதியாய் இ,ருந்தது. அவர்தான் கட்டு தொளதொள என தளர்ந்து போயிருந்தார். பார்க்க அப்பாவும் பொண்ணும் போலிருந்தது. மனசுக்குள் சிலர் “ரெண்டாங் கல்யாணமா?” என்றுகூட நினைக்கலாம், சிறு பொறாமையுடன்.
பத்துமணி அலுவலகம். எல்லாரும் அங்கே பத்தரை வாக்கில் சாவகாசமாக வேலைக்கு வந்தார்கள். பதினொன்றுக்குப் பிறகு வருகிறாட்களை மேலதிகாரி “ஏன் லேட்?” என விசாரித்தார். அவரே பத்தரை வாக்கில் தான் வருவார். லேட் பற்றிய கெடுபிடியான கேள்வி அல்ல அது. புறநகர் ரயில் லேட் ஆகலாம். பஸ், நெரிசலில் மெல்ல ஊரலாம். எல்லாமே நம்பும்படியான காரணங்கள். ஆனால் உண்மையான காரணங்கள் அல்ல. அடுத்த தெருவில் வசிக்கிறவன் கூட அலுவலகத்துக்கு பத்தரைக்குமுன் வருவது இல்லை.
ஆனால் அலுவலகம் முடிந்து எல்லாருமே சரியான நேரத்துக்குக் கிளம்பினார்கள்.
ராசியான வாச் என்று ஒரு பழைய வாச்சையே அவர் கட்டிக் கொண்டிருந்தார். அது எப்போ வாங்கியது என்றே நினைவில் இல்லை. வாழ்க்கையில் ஒரு அசையா நிலையை அவர் விரும்பினார் போலும். அதில் அவர் மணி பார்ப்பதே இல்லை. எதற்காக கட்டிக் கொண்டிருக்கிறார் பின்னே? வாச் இல்லாமல் கை வெறுமையாய் இருக்கிறதாக அவர் உணர்ந்திருக்கலாம். அந்த வாச்சின் ஸ்ட்ராப் சரியாக அழுத்திப் பொருந்தாமல் சின்னத் தொங்கல் தொங்கும். ஓய்வுகாலப் பரிசாக அவருக்கு அவர்கள் தங்கமுலாம் பூசிய வாச் ஒன்றும் மோதிரம் ஒன்றும் வாங்கி அவரிடம் காட்டினார்கள். கைல போட்டுப் பாக்கறீங்களா சார்?... என்று கேட்டார்கள். ம்ஹும், என வெட்கத்துடன் மறுத்தார்.
ரொம்ப நெகிழ்ச்சியான கணங்கள். மாமனாரே அவருக்கு மோதிரம் போட்டது இல்லை. அவரைப் பிரிவதை அவர்கள் ரொம்ப வருத்தமாயும் பிரவுபசாரத்தை சிரத்தையாகவும் செய்வதாக நினைத்தார். நாகலிங்கம் என்கிற யூனியன் ஆள், அவன்தான் ஆள்ஆளாய்ப் பேப்பர் நீட்டி காசு திரட்டியவன். சிலாட்களுக்கு அந்தத் திறமை இருக்கிறது. கம்மியா போடறவனை எதாவது பேசி அதிகம் போட வைக்கிறது. பணம் கம்மியா வசூலானால் சுண்டு விரலுக்கு மோதிரம் போடுவார்களா யிருக்கும்.
அதே வாச், என்பதைப் போலவே சித்திரவேல் தான் எல் எஸ் ஜியாக இருந்தபோது பயன்படுத்திய நாற்காலி மேசையையே இப்போது வகிக்கும் ஹெச் எஸ் ஜி (ஹையர் செலக்சன் கிரேடு) பதவியிலும் பயன்படுத்தினார். அந்த அடக்கம், எளிமை எல்லாம் இன்றைக்கு பிரிவு உபசார விழாவில் பேசுவார்கள், என நினைத்துக் கொண்டார். இத்தனை வருட சர்விசில் அவரைப் பெருமைப்படுத்திப் பேச பாராட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன... அதாவது அப்படி அவர் நம்பினார். என்றாலும் அரசு அலுவலகம். நான் வந்து நிமிர்த்திக் காட்டினேன், என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர். யார் வந்தாலும் வராட்டாலும் அந்தத் தேர் ஒடும். அது அவருக்குத் தெரியும். யாரும் வேலை செய்யாமலேயே பொதுமக்கள் இழுத்துப் போகும் தேர் அது.
பத்தே முக்கால் ஆகிவிட்டது. லேட்டாக வருவதற்காக அவர் விசனப்படவோ பரபரப்படையவோ இல்லை. அவர் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் நாகலிங்கம் “வாங்க ஐயா. வாங்க வாங்க” என ஓடிவந்து கை கொடுத்தான். கல்யாண வைபவம் போல சந்தன குங்குமம் கொடுத்தார்கள். வாசலில் ஃப்ளெக்ஸ் வைத்திருந்தார்கள், ரசிகர் மன்றம் போல, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், என்றுபோட்டு கீழே நிறைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள். அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்றாலும் இந்தச் செலவும், வர்றாட்களுக்கு எஸ்கேசி என்ற வகையிலும் வசூல் பணம் சிறிது குறையத்தான் செய்யும்.
தன் இருக்கையில் போய் அமர்ந்தபோது அது இப்போது புது அனுபவமாய் இருந்தது. நாளைக்கு இந்த நாற்காலிக்கு நான் சொந்தம் கொண்டாட முடியாது, என்று நினைத்துக் கொண்டார். ஒரு அலங்காரமான சோகம் அது. சினிமாவில் இப்படித்தான், நல்லா மேக் அப் போட்டுக்கிட்டு அழுவார்கள். அத்தனை விசேஷமான நாற்காலியும் அல்ல அது. சற்று அவர் சாய்ந்தபோது விநோதமான முனகல்களை அது வெளியிட்டது. என்ன சத்தம் இது. நாற்காலிக்கும் வாயு உபத்திரவங்கள் இருக்கலாம்.
எந்தநாளும் இல்லாத திருநாளாய் எதாவது வேலை செய்யலாம் என்று யோசனை வந்தது. சரஸ்வதி பூஜைக்கு ஏடு அடுக்கியபின் எதாவது வாசிக்க மனம் தேடுவது போல. “வேணாய்யா. நீங்க பாட்டுக்கு இருங்க” என்றான் நாகலிங்கம். அங்கே யூனியன் ஆள், என்று அவன் வைத்ததே சட்டம் என்பதாய் இருந்தது எல்லாக் காரியமும். அவர் சுத்த சைவம். இல்லாட்டி எல்லாருக்கும் நான் வெஜ் என்றும் தண்ணி என்றும் மேலும் செலவு பிடித்திருக்கும்.
நாகலிங்கம் அவர் அருகே வந்தான். “மேடம் வராங்களா?” என்று கேட்டான் புன்னகையுடன். “ம். ஒரு மூணுமணிப் போல வரச் சொல்லியிருக்கேன்” என்றார். சித்திரவேல் ஆளே ஒருமாதிரி மஞ்சள் பாரித்த மங்கோலியக் கலரில் இருப்பார். நெற்றியில் சந்தனமும், சந்தன வண்ண முழு ஸ்லாக்கும் அணிந்திருந்தார். உரிச்ச கோழி மல்லாந்தாப் போல.
அவருக்கு ஒரே பிள்ளை. மாதவமூர்த்தி ஐ ட்டி துறையில் பெங்களூருவில் வேலை. அவன் மனைவிக்கும் அங்கேயே. காதல் திருமணம் தான். ஐ ஸ்கொயர் ட்டி ஸ்கொயர் என்று சொல்லலாம் அதை. ஒரே பேரன் அவருக்கு. சதீஷ் யூகேஜி. ஐ பேடில் விளையாட்டுக்கள் விளையாடுவான் அந்த வயசிலேயே. அவர்களை அவரே தன் பதவி ஓய்வுக்காக வர வேண்டாம், என்றுவிட்டார். சொன்னால், “வரணுமாப்பா,” என்பான் மகன். நாமே வரவேண்டாம் என்றுவிட்டால் பிரச்னை தீர்ந்தது அல்லவா? “எப்பிடிப்பா அறுபது வயசு வரை ஒரே ஆபிஸ்ல, அதே நாற்காலில வேலை செய்யறே நீ?” என்பான். இந்த வயசிலேயே அவன் மூணு கம்பெனி மாறிவிட்டான். அவர்கள் காலம் வேறு. அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை. நாம பேசுவது அவர்களுக்கு உவப்பாய் இல்லை.
ஃபேன்களின் சடசட இயக்கத்தில் அதன் கீழ் கட்டிய முக்கோணக் காகித சணல் தோரணங்கள் எழும்பி அடங்கின. அவரது உட் படபடப்பை அது சிறிது அதிகரித்தது. வேலையும் இல்லை. எதாவது வேலை செய்யலாம் என்றால் நாகலிங்கம் திட்டுவானோ என்றிருந்தது. வெற்றுத்தாளை எடுத்து கையெழுத்து கையெழுத்தாய்ப் போட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் அவர் கையெழுத்துக்கே வேலை இல்லை, என்று திடீரென்று தோன்றியது. ஸ்டெனோ கோகிலா தன் பெண்ணை அழைத்து வந்திருந்தாள். அந்தப் பெண்ணுக்கு நாலு பாட்டு தெரியும். இப்பதான் கத்துக் கொள்கிறாள். இறைவணக்கம் என்று எப்பவுமே அதுதான் சுமாராய்ப் பாடும். தேவையே இல்லாமல் நாகலிங்கம் மைக் சொல்லி யிருந்தான். அவனுக்கு மைக்கில் பேச அவ்வளவு ஆர்வம். எப்பவுமே அவன் மைக்கில் யாருக்காவது எச்சரிக்கை விட்டுக்கொண்டே இருந்தான். இன்றைக்கு அது முடியாது. வேறுமாதிரிக் கூட்டம்.
அவர் மனைவி தேவிகா வந்துவிட்டாள். பட்டுப்புடவை கட்டி அம்சமாய் இருந்தாள். தன் அலுவலகத்திலேயே சிறப்பாய் உடை மாற்றி மேக் அப் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தாள். கிட்டே வந்தபோது ஒரு நறுமணம் அவளிடம் இருந்து வந்தது. ஆண்களை விட பெண்கள் கொஞ்சம் எச்சா வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள். ரிடையர் ஆவது என்பது பாம்புக்கு பல் பிடுங்குவதைப் போல. அதை இவள் கொண்டாடுகிறாளா? அவருக்கு முகம் மட்டுமாவது தான் கழுவிக் கொள்ளலாம் என்று இருந்தது. கழுவினாலும் சோப் எதுவும் கிடைக்காது. பாத்ரூமிலேயே வாளி கிடையாது. குழாயில் குனிந்து தண்ணீர் பிடித்து முகத்தில் ஊற்றிக்கொண்டார். இருந்த வாளியை ஒரு சனி முடிந்து திங்கள் வந்து பார்த்தால் காணவில்லை. திருட்டு போய்விட்டது. அந்த அலுவலகத்தில் சனி முடிந்து திங்கள் வந்து பார்த்தால் வாரா வாரம் எதாவது காணாமல் போயிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் யார் எடுத்துப் போனது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மூணரை என்று சொன்னாலும் கூட்டம் துவங்க நாலரை ஆகிவிட்டது. அதிகாரி ஒரு அவசர வேலையாய்ப் பிரதான அலுவலகத்துக்குப் போயிருந்தார். அவருக்கு நாகலிங்கம் ஃபோன் பண்ணி நினைவூட்டினான். “வரேன் வந்திட்டேன்” என்றபடி மூன்று முறை பேசினார் அவர். இந்த அதிகாரி புதியவர். ஊழல் விவகாரத்தில் இங்கே பத்துநாளுக்கு முன் மாற்றலாகி வந்தவர். தன் கேஸ் சம்பந்தமாக அலையவே அவருக்கு சரியாக இருந்தது. நாகலிங்கம் நினைத்தால் அவருக்கு எதாவது உதவி செய்யலாம், என நினைத்தார் அவர். சில நாட்கள் வேலைக்கு வராமலேயே நாகலிங்கம் மறுநாள் வந்து கையெழுத்து வைத்தான். சித்திரவேலும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர் இதோ பதவி ஓய்வு பெறுகிறார். இந்நேரம் விவகாரங்கள், அதுவும் நாகலிங்கத்தோடு வேண்டாம் என அவர் நினைத்தார். தவிரவும், அவரது பிரிவு உபசார விழாவையே அவன்தான் வசூல் செய்து ஏற்று நடத்துகிறான். எல்லாரையும் பாதிக்காசு போடச் சொல்லி விட்டால்?
·        
இரண்டு சந்தன மாலைகள். ஒன்றை அவருக்கு நாகலிங்கம் போட்டான். இன்னொன்றை அவரிடம் கொடுத்து தேவிகாவுக்குப் போடச் சொன்னான். எல்லாரும் ஹுவென்று சிரித்துக் கைதட்டினார்கள். இதில் சிரிக்கவோ இத்தனை உற்சாகத்துக்கோ என்ன இருக்கிறது தெரியவில்லை. ஆளுக்கு ஒரு ஆப்பிள் கையில் தந்தான் நாகலிங்கம். நல்லவேளை. ஒரு ஆப்பிளை அவரிடம் தந்து, இதை அந்தம்மாவிடம் குடுங்க, என்று புரோகிதர் போல எதுவும் செய்யவில்லை.
அந்தப் பெண் இறைவணங்கியது. தெரிந்த நாலில் ஒண்ணு. புதுசாய் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை போலிருந்தது. கத்துக்கிட்டதையுமே சுமாராய்த் தான் பாடுது. அவள் பாடுகிற லெட்சணத்தைப் பார்த்தால் அவ டீச்சருக்கே இத்தனை பாட்டுதான் தெரியும் என்றிருந்தது. இறைவணக்கம் முடிந்ததும் பெண்ணின் அம்மா கை தட்டினாள். பிறகு அவருக்கு துணைச் செயலாளர் மோதிரம் அணிவித்து கையில் வாச் பெட்டியைக் கொடுத்தார். உள்ளே வாச் இருக்... கும். பெட்டி, கனமாத்தான் இருக்கு.
வரவேற்புரை என்று அவரது நெடுநாளைய நண்பர் வாசுதேவன் உரையாற்றினார். வேறு கிளையில் அவர் பணியாற்றுகிறார். இதற்காக வந்திருந்தார். அடுத்த மாதம் அவருக்குப் பதவி ஓய்வு வருகிறது. தான் பழகிய அந்த நாட்களை யெல்லாம் அவர் நினைவு கூர்ந்தார். “நான் எம்ஜியார் ரசிகன், அவர் சிவாஜி ரசிகன். அந்தக் காலத்தில் எங்களுக்கு அடிக்கடி சண்டை வரும். பலநாட்கள் பேசாமலேயே இருந்திருக்கிறோம்” என்று பேசியபடியே அவர் அடிக்கடி திரும்பி சித்திரவேலுவைப் பார்த்தார். அவர் தலையாட்ட வேண்டும், என எதிர்பார்த்தாரா தெரியாது. ஆனால் சித்திரவேல் ஒரே புன்னகை, அதை மாற்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். சப்பென்று சுவரில் அடித்த போஸ்டரைப் போல மூஞ்சியில் ஒட்டவைத்த புன்னகை.
நல்லவர், வல்லவர் என்று புகழ் பாராட்டு. வீதியெங்கும் பூ இரைத்துப் போகிறாப் போல வார்த்தைகள் எல்லார் மேலும் அட்சதையாய்ச் சிதறின. அலுவலர்கள் நிறையப் பேர் அடுத்தடுத்து பேசினார்கள். அவர்மேல் உள்ள பிரியத்தினால் அல்ல, மைக் இருந்தால் அவர்களையும் பேச அழைக்க வேண்டும். எல்லாரிடமும் அவர் தன்மையாய்ப் பழகுவார் என்றார்கள். வரும் பொதுசனத்திடமும் அவர் (இருக்கையில் இருந்தால்) கடுஞ்சொல் இல்லாமல் பேசுவார் என்றார்கள். பேசிவிட்டு அவர்கள் வந்து மற்றவர்களிடம் “நான் எப்பிடிப் பேசினேன்?” என விசாரித்துக் கொண்டார்கள்.
ஓரக்கண்ணால் சித்திரவேல் சிறு பெருமையுடன் மனைவியைப் பார்த்தார். அந்தப் பேச்சு அவளுக்கு ரசித்த மாதிரித் தெரியவில்லை. இவனுங்க என்ன சொல்றது, எனக்குத் தெரியாதா இந்தாளைப் பத்தி... என யோசிக்கிறாளா?
எல்லாருமே பேசி முடிக்கையில், இனி அந்த அம்மா அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும், என வேண்டிக் கொண்டார்கள். இதுவரை கொடுமைப் படுத்தினாளா என்ன? இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் நல்க வேண்டும், என்றார்கள். எதுக்கு நீண்ட ஆயுள், என்று அவருக்குப் புரியவில்லை.
கடைசியாக மேலதிகாரி பேசினார். சமீபத்தில்தான் அவர் இந்த அலுவலகம் வந்ததாகவும், 9அதுவரை செய்த ஊழல்களில் மாட்டிக் கொள்ளவில்லை.) ஆனாலும் அவரை தான் நல்ல அளவில் புரிந்து கொண்டதாகவும், இந்த அலுவலகம் தனது முக்கியமான ஒரு தூணை இழந்து விட்டது, குறிப்பாக தனக்கு இது இழப்பு, என்று பேசுகையில் நாகலிங்கம் படபடவென்று கை தட்டினான். கூடவே எல்லாரும் கை தட்டினார்கள். இழப்புக்கு இவ்வளவு கைதட்டலா?
திடுதிப்பென்று ஏற்புரை என்று அவரை எழுப்பி விட்டுவிட்டார்கள்.
ஒருமணி ஒண்ணரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கூடடம். அலுப்பாக ஒருமாதிரி மயக்கமாய் தூக்கக் கிறக்கமாய்த்தான் இருந்தது அவருக்கு. திடீரென்று எழுப்பி விட்டதும், என்ன பேச என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் அப்படியே நின்றார். எனக்கு நீண்ட ஆயுளும், தேக ஆரோக்கியமும், சீச்சீ...
அத்தனை பேரையும் பிரிகிற துக்கம் தாள முடியாதிருந்தது. இந்தக் கணத்தோடு இவர்கள் அனைவரையும் பிரிந்து செல்லப் போகிறேன்... என நினைக்க அழுகை வந்தது. பேச வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிதறின. கூட்டமே அமைதியாய் விக்கித்துப் போய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. இத்தனை காலமும் என்னோடு சேர்ந்து பணியாற்றி ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, என்றபோது குரல் தழுதழுத்தது. நான் எதாவது யாருக்காவது மனம் புண்படும்படி நடந்திருந்தால் என்னை... மன்னிச்... என்னுமுன் அழுகை வந்தேவிட்டது.
நாகலிங்கம் வந்து அவரைக் கட்டிக் கொண்டான். அப்டியே எல்லாரையும் கும்பிட்டு விட்டு திரும்ப வந்து உட்கார்ந்தார். தேவிகாவுக்கு விஜய் டிவி நிகழ்ச்சி மாதிரி இருந்தது.
காரில் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். ஒரு இருபது பேர் வந்திருந்தார்கள். எல்லாருக்கும் இரவு உணவு, வெஜிடபிள் பிரியாணி சொல்லியிருந்தது. பம்பரமாய் நடமாடினாள் தேவிகா. அவர்தான் கொஞ்சம் படபடப்போடு இருந்தார். எல்லாரும் கிளம்பிப் போனபோது மணி பத்து ஆகிவிட்டது. இன்னிக்கு சாப்பாடு உள்ள போனது கொஞ்சம் அதிகம்தான். தூங்க முடியுமா?
“ரொம்ப நேரமாயிட்டது. நான் படுத்துக்கறேன்” என்றார் தேவிகாவிடம். கடும் அலுப்பாய் இருந்தார். மாலை மூணு மணியில் இருந்து அவருக்கு ஓய்வே இல்லை.
·        
தேவிகாவுக்கு வழக்கமான நாளாய் விடிந்தது. அவர்தான் அலுவலகம் போக வேண்டியது இல்லை. ஒன்பது மணிக்கு அவள் வெளியிறங்க வேண்டும். லேட்டாய்ப் போக முடியாது அவள். பல நாட்கள் வாஷிங் மிஷினைப் போட்டுவிட்டு அலுவலகம் ஓடுவாள். அது துவைத்து உள்ளேயே உலரவைத்து தானே அடங்கி விடும். மாலை வந்து எல்லாவற்றையும் எடுத்து காயப் போடுவாள்.
ட்டூ வீலரை வெளியே இறக்கியபடியே தேவிகா, “டேக் கேர் பாஸ். ஃபிளாஸ்க்ல காபி வெச்சிருக்கேன். பதினோரு மணி வரை சூடு தாங்கும்” என்றாள். வண்டி ஸ்டாண்டை காலால் எத்தி ஒதுக்கினாள். வண்டியில் உட்கார்ந்து கொண்டாள். “சாய்ந்தரத்துக்கு டிகாஷன் இருக்கு. ஃப்ரிஜ்லயிருந்து பால் எடுத்து காய்ச்சி, காபி....”
“போட்டுக்கறேன்” என்றார். புன்னகைக்க முயன்றார். முடியவில்லை.
தேவிகா கிளம்பிப் போய்விட்டாள். வீடே முழு அமைதியாய்க் கிடந்தது. வீட்டு கடிகாரம் டண் டண் என்று பத்து அடிக்கையில் உடலே அதிர்ந்தது. உள்ளே போனவர் ஞாபகப் படுத்திக்கொண்டு வாசலுக்கு வந்து கதவைத் தாளிட்டார். வாசல் வேப்ப மரத்தில் இருந்து அணில் ஒன்று தாவியதில் வேப்பம் பூ உதிர்ந்ததைப் பார்த்தார். அணில் அவ8ரயே பார்த்தது. என்ன இந்தாளு இந்நேரம் வீட்ல இருக்கான், என யோசிக்கிறதா? உள்ளே திரும்பினார். இனி என்ன பண்ண தெரியவில்லை. கொஞ்ச நேரம் அன்றைய நாளிதழ் வாசித்தார். அவள்தான் நாளிதழ் வாசிக்கிற பழக்கம் உள்ளவள். ஆங்கில நாளிதழ் வாசிப்பாள். இரவில் ஆங்கில நாவல்கள் தடி தடியாய் வாசிப்பாள். அவருக்குப் பழக்கம் இல்லை. வாழ்க்கையை சற்று கரையில் இருந்து ஆற்றுநீரை செம்பில் எடுத்துக் குளிக்கிற மாதிரியே அவர் வாழ்ந்து விட்டார்.
தொலைக்காட்சி சேனல்களும் சுவாரஸ்யப் படவில்லை. யாராவது ஃபோர் அடித்தால் அவருக்கு உற்சாகம் வரவில்லை. சானல் மாற்றினால், எதாவது சாமானை, இதை வாங்கு, அதை வாங்குன்னு சொல்லிட்டே யிருக்கிறான். போய் அவருக்கு பரிசளிக்கப்பட்ட வாச்சை பெட்டியைத் திறந்து பார்த்தார். இனி அவருக்கு நேரக் கணக்கே தேவை இல்லை. இப்ப எதுக்கு வாச்? பிள்ளை வந்தால் கொடுத்துறலாம் என நினைத்தார். போய் டிவியை அணைத்தார். இதை எப்படி நாள் பூரா உட்கார்ந்து பார்ககிறார்கள், என அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பொழுதை எப்படி நகர்த்த? மதியம் ஒரு மணி வாக்கில் அலுவலகத்தில் சாப்பிடுவார். கையில் கட்டிக் கொடுத்து விடுவாள் தேவிகா. இப்போது வீட்டில் ஆற அமர சாப்பிடலாம் என நினைத்து மேசையில் உட்கார்ந்து நிதானமாய்ச் சாப்பிட்டார். செல் அடித்தது. எழுந்துபோய் எடுத்துப் பேசினார். தேவிகாதான். “எப்பிடிப் போகுது பொழுது?” என்றாள். “ம்” என்றார். “சாப்பாடு?” என்றாள். “சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்ஞ்” என்றார். “பழகிடும்” என்றாள் அவள். “பழகிடுச்சு,” என்றார். “ரிடையர்டு லைஃபா? அதுக்குள்ளியா?” என அவள் ஆச்சர்யப்பட்டாள். “இல்ல. உன் சாப்பாடு, பழகிடுச்சுன்னேன்” என்றார். “பேட் ஜோக்” என அவள் போனை வைத்தாள்.
அதற்கு அப்புறம் ரொம்ப போரடித்தது. அறை அறையாய் நடந்து பார்த்தார். கொஞ்சம் தூங்கலாம் என்று இருந்தது. தூங்க முடியவில்லை. வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து பார்த்தார். உள்ளே படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டார். மதியம் இப்படி படுக்கையில் படுத்ததே இல்லை. அப்பவும் தூக்கம் வரவில்லை. புரண்டபடி இருந்தார். எழுந்து கொண்டார். எல்லாமே பழக்கம் இல்லாத விஷயமாய் இருந்தது. மேசையை இழுத்து ஃபேனுக்குக் கீழே போட்டுக் கொண்டார். நாற்காலியையும் கிட்டே இழுத்துக் கொண்டார். அப்படியே அமர்ந்தவாக்கில் மேசையில் சாய்ந்தார்.
சிறிது நேரத்தில் அவர் தூங்கிப் போனார்.
·        

storysankar@ gmail.com - 91 97899 87842

Comments

Popular posts from this blog