manalveedu - may 2017
வெ யி ல்
எஸ். சங்கரநாராயணன்

ழுத்தாளர் கலிங்கமித்திரன் இறந்து போனார். வயதானவர்தான். இதற்கு மேல் நாம் உலகத்தில் செய்ய எதுவும் இல்லை, என்கிறாப் போலத்தான் அவருக்கும் இருந்தது. இதுவரைக்கும் தான் என்ன செய்தோம், அதுவே தெரியவில்லை. மூப்பெய்தி அலுத்திருந்தார். எதுவுமே அழுத்தமாக அவர் மனதில் பதியவில்லை. மகிழ்ச்சி, துக்கம்… என எதிலுமே அவர் ஒட்டாத நிலைக்கு வந்திருந்தார். உடலும் மனசும் அதன் ‘எலாஸ்டிக்’ தன்மையை, பொங்குதல் மீண்டு சுருங்குதல்களை இழந்துவிட்டிருந்தன. நாட்கள் அவற்றின் வீர்யத்தை இழந்திருந்தன. கதைகள் எழுத முடியவில்லை. எழுத எதுவுமே இல்லாதிருந்தது. வயது அவரைக் காலிப் பாத்திரமாக ஆக்கி இருந்தது. சாவு வந்துவிட்டால் தேவலாமாய் இருந்தது. எப்போது வரும் தெரியவில்லை. எவ்வளவு தான் காத்திருப்பது. வாழ்வுக்குக் காத்திருப்பதில் ஓர் அர்த்தம் இருந்தது. எதிர்பார்ப்பு இருந்தது. சாவு? அதற்காகவா காத்திருப்பது? வேறு வழியும் இல்லை.
இப்போது எழுத்தாளர்கள் எல்லாரும் கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். திருத்தங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய கணினி மகா வசதி. அவர் கையால் தான் எழுதினார். இப்போது ஜெராக்ஸ் பிரதியாவது எடுத்துக் கொள்ள வசதி வந்திருக்கிறது. அந்தக் காலங்களில் கார்பன் பேப்பரை அடியில் வைத்துக்கொண்டு அழுத்தி எழுதி பிரதி வைத்துக்கொள்ள வேண்டும். பிரதியில் உள்ளங்கை அழுந்தி திட்டுத் தீற்றலாய் நீலம் அப்பிக் கிடக்கும். பிரதி எடுத்துக்கொள்ளாமல், பத்திரிகை அலுவலகத்தில் அவரது எத்தனையோ கதைகள் தொலைந்து விட்டன. அது தமிழின் அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியாது.
கணினி இயக்க இனிமேல் கற்றுக்கொண்டு ஆவதென்ன, என விட்டுவிட்டார். எல்லாவற்றிலும் ஓர் அலுப்பு வந்திருந்தது. எத்தனை புத்தகங்கள் எழுதியிருந்தார். வரிசையாகச் சொல்ல அவராலேயே முடியாது. எழுத்துக் குசேலர். எத்தனை வாசிப்பு அனுபவம். எத்தனை நிகழ்வுகள் தன் வாழ்வில். மாநாடுகள், பரிசுகள், உள்ளூர். வெளியூர். வெளி மாநிலம். வெளி நாடு… பிற எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாக்கள்… வயதாக ஆக அவரது எழுத்தாள அந்தஸ்தும், கௌரவமும் விரிந்தபடியே வந்தாப் போலிருந்தது. அவர் அலுப்படைந்த நேரம் அதிகப் பிரபலமாக வேண்டிய துக்கம்… ஏ பாவிகளா, எழுதுவதை நான் நிறுத்தியதைக் கொண்டாடுகிறீர்களா, என்று கூட நினைத்தார். குறிப்பாக அவரது இந்த வயதில், வயது முதிர்ந்த அநேக எழுத்தாளர்களை அவர் பழகி அறிந்தவர் என்ற அளவில், அந்த எழுத்தாளரின் மரணத்திற்கு அவரையே அஞ்சலிக் கட்டுரை கேட்டார்கள். இன்னும் எத்தனை அஞ்சலிக் கட்டுரைகள் நான் எழுதுவேனோ தெரியவில்லை… என்று இருந்தது. தொலைபேசி வந்தாலே, என்ன, அஞ்சலிக் கட்டுரையா?... என யோசித்தபடியே எடுத்துப் பேசினார்.
கூட்டங்கள் வைபவங்களுக்கு அவரைப் பேச அழைத்தார்கள். வயதுக்கு மரியாதை. வீட்டுக்கே காரில் வந்து அழைத்துப் போய் திரும்பக் கொண்டு விட்டார்கள். அவர் எங்கே போனாலும் யாராவது இளம் எழுத்தாளர் அவரிடம் தான் சமீபத்தில் எழுதிய ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து தருவார். அவரால் படிக்க முடியாது. கண்ணுங் கிடையாது. வாசிக்கவும் மனம் ஒட்டுவது இல்லை. என்றாலும் வேண்டாம் என்று தட்ட முடியாது. வாங்கிக் கொள்வார்.
அவரது கதைகள் எப்படி அமைந்தன? முதல் கதையைப் போல வார்த்தைப் பாம்பு தலைதூக்கி விடாத அளவில், தரையில் சரசரவென வழுகிச் செல்கிறாப் போலப் பயன்படுத்தினார் அவர். இன்றுவரை அதில் கவனத்தைக் குறைக்கவேயில்லை. பெரும்பான்மை சனங்களைப் பற்றியவை என்றாலும் அவை பெரும்பான்மை சனங்களுக்கானவை அல்ல. நுணுக்கமானவை அவை. நுட்பமானவை… என்பது அவரது நம்பிக்கை. சற்று கருப்பு அல்லது மாநிற சனங்கள் அவர் காட்டும் பாத்திரங்கள். பணத்தை ஒரு கௌரவத்துடன் மரியாதையுடன் கையாளும் சனங்களின் கதைகள். ஒருமுறைக்கு இருமுறை எண்ணிவிட்டு பணத்தை அவர்கள் தந்தார்கள். “எண்ணிப் பாத்துக்கங்க” என்று சொல்லி தந்தார்கள். நடுத்தர கீழ்நடுத்தர வர்க்க சனங்கள் அவர்கள். அவர்களைப் பற்றி அவர் எழுதினார். அதனினும் கீழ்நிலைப் பாத்திரங்கள் அவருக்குத் தெரியாது. அப்படி கீழ்நிலைப் பாத்திரங்கள் எழுதினாலும் இந்த வர்க்கத்தோடு அவை கலந்து புழங்குகிற அளவிலேயே கதைக் களம் அவரால் தர முடிந்தது.
அவர் அப்படியொரு சூழலில்தான் பிறந்தார். வளர்ந்தார். வாழ்ந்தார். வேறு கதை அவருக்குத் தெரியாது. தெரிந்ததை அவர் எழுதினார். தெரிந்ததை மாத்திரம் எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரால் எழுத முடிந்தது. இந்திய எழுத்தாளருக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்திருப்பது ஒரு வரம். அவர்பாணிக் கதைகளுக்கு பெரிய வரவேற்பு இராது என்பதை அவர் அறிவார். சற்று வாசிக்கத் தக்கதாக அது அமைய சிறிய எள்ளல், தன்னைத் தானே எள்ளுவது,.. வாழ்க்கை தரும் முடிச்சுகள் எப்படி நம்மைக் கட்டி இழுத்துப் போகிறது… என்கிற மாதிரியான, ஒரு மீற வகையில்லாத சோகப் புன்னகையை அவரது பாத்திரங்கள் சிந்தின.
வாழ்க்கை சிக்கலானது. புதிர்கள் நிறைந்தது வாழ்க்கை. ஒருபோதும் அதில் தரிசனமோ பரவச அம்சமோ கிடையாது. அன்றாடம் நம்மை இழுத்துப் போகிற இந்த வேகத்தில் சாமானியன் நிலை இது தான். அவன் வாழ்க்கையில் தத்துவமோ, தேடலோ எந்த இழவும் கிடையாது… என அவர் தன்னளவில் நம்பினாப் போலிருந்தது. ஆனால் இதையே அவர் சுவாரஸ்யமாக அதேசமயம் வார்த்தைஜாலங்கள் எதுவும் அற்று எழுதிப் பார்த்தார். அலங்காரம் பண்ணிக்கொண்ட பின்னும் சுமார் மூஞ்சி சனங்கள் அவர்கள்.
வாழ்க்கையின் ஒரு கூறை எடுத்துக்கொண்டால் அதில் மரபு மீறாத ஓட்டத்தில் அந்தப் பாத்திரம் உணரும் அனுபவங்களை, தான் கண்டடைந்த இடம் வரை காட்டி நிறுத்துவார்  சமூகக் கட்டுக்கோப்புகளுக்கு ஊடே அதை அனுசரித்து ஏற்று நடமாடின அவர் பாத்திரங்கள். மாற்று சிந்தனை அவர்களிடம், அவரிடம் இல்லை. கதையில். அந்தக் கடைசிப் பத்தியில் ஒரு ‘வெயில் வந்த நிலை’ இருக்கும். அதை முடிவு செய்தபின்னரே எழுத ஆரம்பிப்பார் போலும். காலப்போக்கில் அப்படியான முடிவுகளை நோக்கி அவரால் தன்னைப் போல சிந்தனையை நகர்த்திப் போய் நிறுத்த லாவகப் பட்டுவிட்டது அவருக்கு. மாட்டை தொழுவத்துக்குக் கூட்டி வந்து கட்டினாப் போல.
அவர் எழுத வந்தபோது அப்படி ஒன்றும் எழுத என்று நிறையப் பேர் வந்துவிடவில்லை. யாராவது பத்திரிகை நடத்தினால் அதில் வேலைக்கு அமர்ந்தவர்கள் கதை எழுதினார்கள். வெளியாள் கதை எழுதினால் துட்டு தர வேண்டும்…. என்பதற்காக அவர்களே எழுத நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அப்புறம் சில பத்திரிகைகளுக்கு சில எழுத்தாளர்கள் என அமைந்தார்கள். அநேகமாக அவர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். இவரும் பிராமணர் தான். கதை எழுத அது ஒரு பிளஸ் பாயின்ட் அந்தக் காலத்தில்.
கதை நிராகரிக்கப்பட்ட சிலர் தங்கள் கதைகளைப் போட என்றே. சிறு பத்திரிகைகள் என்ற பெயரில் தாங்களே ஆரம்பித்தார்கள். பதினாறு, முப்பத்திரெண்டு பக்கத்தில் பொதுவாக காலாண்டிதழ்கள். ஒரு காலத்தில் புரட்சி வெடித்தாப் போல நிறைய சிறு பத்திரிகைகள் கிளம்பின. கதை நிராகரிக்கப்பட்ட ஏராளமான எழுத்தாளர்கள் இருந்திருக்கலாம். இதில் எழுதுகிறவர்கள் தாம் இலக்கியவாதிகள், பெரிய சுற்று இதழ்க்காரர்கள் எழுத்தெல்லாம் எழுத்தே அல்ல, என இவர்களே மேடைகள், விவாதங்கள், சங்கங்கள் என வைத்துக்கொண்டு மைக்கில் பேசினார்கள். நிராகரிப்பின் ஆத்திரம் நியாயமானதே… சனி ஞாயிறுகளில் இலக்கியம் அமளிதுமளிப் பட்டது.
பெரிய இதழ்களில் எழுத இவருக்கு ஆசை. துட்டும் கிடைக்கும். கையிலும் பண ஓட்டம் அத்தனைக்கு இல்லை. என்றாலும் சிற்றிதழ்களில் எழுத அவர் தயக்கம் காட்டியது கிடையாது. நிறைய எழுதினார் அவர். கதைகள். கட்டுரைகள். பத்திகள். புத்தக மதிப்புரைகள்… கதைக்கும், கட்டுரைக்குமாகவே கூட அவர் கடைசிப் பத்தியின் அந்த ‘வெயில் வந்த பாவனை’ அவரது முத்திரை என ஆக்கிக் கொண்டார். காலப் போக்கில் அதை சிலாகித்தார்கள் எல்லாரும்.
சிறு பத்திரிகை துவங்க பெருமபாலும் மனைவிகள் ஆதரவு தருவது இல்லை. இருந்தாலும் மோதிரத்தை அடகு வைத்து பத்திரிகை நடத்திய இலக்கியவாதிகள் உள்ளனர். இந்நிலையில் தில்லியில் இருந்து துட்டுவசதியுள்ள சிலர் சிறு இதழ் ஒன்று ஆரம்பித்து, (மோதிரம் என்றே பெயர் வைத்து) பிறகு அவர்களே சென்னைக்கு குடிபெயர்ந்து வந்தபோது, சென்னையில் இருந்து அந்த இதழ் வர ஏற்பாடானது…
அதற்கு கலிங்கமித்திரன் ஆசிரியராகவும் பல பத்தாண்டுகள் அமர்ந்ததும், அவர் கதைகளைப் பற்றி பிறர் ஓயாமல் பேச வழி வகை செய்தது. மோதிரக் கையால் குட்டு. எழுத்தில் அங்கீகாரம் பெற இப்படியொரு ரகசிய ‘கொள்வினை கொடுப்பினை’ வேண்டிதான் இருக்கிறது. சிற்றிதழ்களிலும் சிலவற்றுக்கு ஒரு தோரணை, நட்சத்திர அம்சம் சேர்ந்து கொள்கிறது தன்னைப்போல. மோதிரம் மின்ன ஆரம்பித்திருந்தது.
அப்படியோர் இதழுக்கு அவர் ஆசிரியர் என்பது முக்கியமான விஷயம்.
ஆனால் தன் வாழ்நாளில் சரியான வேலை கடைசிவரை அவருக்கு அமையவில்லை. இதுவே அவருக்கு அதிகம் என எல்லா முதலாளிகளும் நினைத்திருக்கலாம். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. ஒரு நல்ல குமாஸ்தா வேலை, நம்ம எதிர்பார்ப்பே அதுவாகத்தானே இருந்தது. இதில் என்ன பெருமைப்பட என்றும் புரியவில்லை. போதாக்குறைக்கு எழுத்தில் கிறுக்கு வந்தாகிவிட்டது. பேரை அச்சில் பார்க்கிற ஆவேசம். எழுத வேண்டுமானால் அலுவலகத்தில் அடிமை உத்தியோகம் தான் சரி. முதலாளிகள் கதை எழுத வர மாட்டார்கள். அவர்களுக்கு உருப்படியாய் வேறு வேலை தெரியும்.
நெடிய பயணம் அது. பிள்ளைகள் தலையெடுத்தால் தான் இந்தக் குடும்பம் தழைக்கும் என்கிற நிலை எல்லா எழுத்தாள வீட்டிலும் சகஜம். அவனும் கதை எழுத வர வேண்டாம், என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். வயிறு வாழ்க்கையின் பெரிய பிரச்னை. எழுத்தாளன் என்பவன் ஓடக் கற்றுத் தருகிற நொண்டி, என நினைத்தார் அவர். எழுத்து என்பது மலையாளப் பழமொழியில் சொல்வதானால், நாயர் பிடிச்ச புலி வால். ஆனால் தன் எழுத்தைப் பிறர் பாராட்ட வேண்டும் என்றும் நினைத்தார்.
எழுத்தினால் ஒரு குழப்பமான வாழ்க்கையே நமக்கு வாய்க்கிறது என நினைத்தார். எழுத்தில் ஓர் உன்னதத்தை அடைய நினைக்கிற எழுத்தாளன் தன் வாழ்நாளில் அதை எட்ட முடியாமலேயே ஆகிப் போகிறது. வேறு வேறு திசைகளில் இழுக்கிற இரு குதிரைகளில் ஒரே சமயம் எப்படி பயணம் செய்ய, என்கிற திகைப்பு. ஒழுக்கம் உசத்தி தான். என்றாலும் யாருக்கும் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டால் எத்தனை திருப்தியாக இருக்கிறது… இதுகுறித்து ஒண்ணும் செய்வதற்கு இல்லை. எழுத்து என்பதே ஒருவகையில் அட்வைஸ் தான். புத்திசாலிகள், வெற்றி பெற்றவர்கள் அறிவுரை கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் மாட்டார்கள். வெற்றி என்பது கற்றுக்கொடுத்து வருவது அல்ல. தோற்றவர்கள் தமக்குத் தெரிந்தாப் போல கற்றுக்கொடுக்க முன்வருவது வெட்கக் கேடானது… எழுதப் படிக்கத் தெரியாத அம்மா குழந்தைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்க உட்கார்ந்தா அதன், குழந்தையின் நிலைமை என்ன?
ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தபின்னும் ஓர் எழுத்தாளர் உயிருடன் இருந்தால் அவரது எழுத்துக்கு தன்னைபோல ஒரு கௌரவம் கிடைத்து விடுகிறது. இலக்கிய உலகில் அவரது புழக்கத்திலும் பழக்கத்திலுமே பரிசுகள் விருதுகள் என அவருக்கு வரிசையில் நின்று வழங்க ஆரம்பித்து விடுவார்கள். வயதானதினால் தான், எழுத்தினால் அல்ல இந்தப் புகழ், என்பது வேடிக்கை தான். கண் கூசும் போது வெளிச்சம் வருகிறது! ஆனால் தாமதித்தேனும் இந்த அங்கீகாரம் வேண்டித்தான் இருக்கிறது. இப்பவும் அது அமையாது போனால் அந்த எழுத்தாள ரிஷி, அதுவும் சிறுபத்திரிகைக்கு மூச்சுப் பிடித்து முட்டுக் கொடுத்தவன், அவன் பாவம் இல்லையா?
ஒரு வயதான சிறுபத்திரிகை எழுத்தாளனுக்கு புதிதாய் வெளிவரும் சிறுபத்திரிகை ஆசிரியன் தரும் கௌரவம் அபரிமிதமானது. பைத்தார ஆஸ்பத்திரியில் புதுப் பைத்தியம் என்ன, பழைய பைத்தியம் என்ன? என்ன கௌரவ வித்தியாசமோ தெரியவில்லை. இந்த இளைஞனுக்கு இப்படி ‘குரூப் ஃபோட்டோ’ பிடித்திருக்கிறது. வேண்டியிருக்கிறது. தனியே நிற்க கால் உதறுகிறதோ என்னவோ. இப்படியே திண்ணையில் கூட்டம் கூடி விடுவதும் நடக்கிறது.
ஜீயர் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் ஒரு பையன் அவருக்கு அறிமுகமாகி வெகு சுருக்கில் நெருக்கமாகி விட்டான். அவரது பாத்திரங்களில் ஒரு பாத்திரத்துக்குத் தகுதியானவன் அவன். அலங்காரம் பண்ணிக்கொண்ட பின்னும் சுமாராய் இருப்பான் அவன். எழுத்தும் அவ்வளவில் இருக்கும். அவரை வெளியிடங்களுக்கு கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டு போய்வருவான். அவரது வலக்கை போல நடந்துகொள்வான். எப்படியாவது தன்னைப் பற்றி அவர் எங்காவது பேட்டியில், அல்லது எழுதும்போது குறிப்பிட வேண்டும்… என ஜீயர் எதிர்பார்த்திருக்கலாம். கடைசிவரை அது நடந்ததா தெரியாது.
என் கதைபாணி எனக்கே அத்தனை உவப்பா இல்லியேடா… என்பார் கலிங்கமித்திரன். அவரைப்போல எழுத முயற்சிக்கிற ஜீயரைப் பார்க்க அவருக்குப் பாவமாய் இருந்தது. அவனும் அவரிடம் இப்படி பாவம் பார்த்திருக்கலாம். அஞ்சலிக் கட்டுரை கேட்டு வாங்கி பத்திரிகைகளுக்கு எடுத்துப்போகிற உதவியும் அவன் செய்தான். அதைவிட மறைந்த எழுத்தாளரின் வீட்டுக்கும் அவரை அழைத்துப் போனான். ஏன் இவன் இத்தனை உதவிகரமாக இருக்கிறான் என அவருக்கே திகைப்பாய் இருந்தது…
ஒரு கூட்டம். நீங்க தலைமை தாங்கணும்… என்று அழைத்தான் ஜீயர் அவரை. அவனது சிற்றிதழின் நூறாவது இதழ் வெளியீடு அது. ஏ அப்பா, நூறு இதழ் கொணடு வந்திட்டியா… என்றார் அவர். இன்னுங் கூட உன் கதை வெளிப் பத்திரிகைல வரல்லியா?.. என்றும் சிரித்தார். ஆனால் விழாவில் கலந்துகொண்டு உற்சாகமாகப் பேசினார் கலிங்கமித்திரன். நல்லவேளை, அஞ்சலிக் கூட்டத்துக்கு இடையே இப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு.
திடீரென்று கலிங்கமித்திரன் இறந்து போனார். ஜீயருக்கு செய்தியே தொலைக்காட்சி பார்த்துதான் தெரியும். திகைத்துப் போனான் அவன். லேசாய் உலகம் இருட்டு கொடுத்தாப் போலிருந்தது. தன் தந்தை போல் அவரிடம் அவனுக்கு ஒரு வாஞ்சை. ஆனால் அவன் அப்பாவுக்கு அவன் எழுத்தில் ருசி இல்லை. வேறு யாருக்குத்தான் அது ருசித்தது? அதுவே தெரியாது. முகநூல், பத்திரிகை என்று செய்திகள் பரபரத்தன.
முகநூலில் பரிவும் துக்கமும் பொங்கி வழிந்து நுரைத்து தெருவெங்கும் ஓடியது. ஆளும் அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ அவர் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் காபி குடித்ததுக்கொண்டே முகநூலில் கோபப்பட்டார்கள். நூற்றாண்டு காலமாக ஆங்கிலத்தில் வரும் ஒரு நாளிதழ் தமிழ் மொழியிலும் ஆரம்பித்திருந்தது. பக்கங்களை நிரப்ப அவர்கள் சிரமப்படும் போதெல்லாம், இப்படி எழுத்தாள அஞ்சலிப் பத்திகளை முழுப் பக்கத்துக்கே வெளியிட்டு சேவை செய்தது. தொலைபேசி எட்டத்தில் இருந்தவர்கள் அஞ்சலிக் கருத்துகளைச் சொல்லிவிட்டு மின்னஞ்சலில் புகைப்படமும் அனுப்பித் தந்தார்கள். தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு… என்கிற ரீதியான அழுகை முகம் காட்டியது பக்கம்.
ஜீயருக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று நடத்திவிட வேகம் வந்தது. யார் யாருக்கோ அஞ்சலிக் கூட்டம் நடத்தியிருக்கிறது. இவருக்கு வேண்டாமா? உடனே கிடுகிடுவென்று இடம் ஒன்று பிடித்து பேச நபர்களை வகைதொகை யில்லாமல் அழைத்தான். கலிங்கமித்திரனுக்கு அவரது வயதின் காரணமாக ஏராளமான பேரைத் தெரிந்திருந்தது. யாரையும் விட்டுவிடக் கூடாது என நினைத்தானா ஜீயர்? கசாப்புக்கடை. அடுத்து ஒரு பூக்கடை. காற்கறிக்கடை. அடுத்து சர்பத் கடை…. என கலப்படமான சந்தைபோல் இருந்தது மேடை.
இத்தனை பேர் பேசினால் அது எப்படி மனப்பூர்வமான அஞ்சலிக் கூட்டமாக இருக்கும்? அதுகூடவா தெரியாது ஜீயருக்கு? ஏற்கனவே ஒரு கவிஞருக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தி அவன் பேரைக் கெடுத்துக் கொண்டிருந்தான்… மகிழ்ச்சியைக் கூடி கொண்டாடலாம். துக்கத்தை அத்தனை கூட்டமாய் ஒன்று சேர்ந்து கொண்டாட எப்படி முடியும்? திருப்பதி ஜரகண்டி நிலைதான். பல வகைப்பட்ட மனிதர்கள் வேறு. அரங்கத்தில் கேட்க வந்தவர்களை விட பேச வந்தவர்கள் அதிகம் என்று ஆகிவிடுமோ என்றிருந்தது. அந்த ஏழையின் வேட்டியில் நெய்த நூலை விட தைத்த நூல் அதிகம் என்பார்களே, அந்தக் கதை ஆகிவிடலாம். கதை கந்தல் ஆகிவிடலாம்.
அதில் ஒரு பிரபல எழுத்தாளர், நான் முதல்ல பேசிடறேன்… நான் கிளம்பணும்… என்று காதோடு வந்து சொன்னார். அவர் பிரபலத்தை மத்தவர் மதித்து வழிவிட வேண்டும், என அவருக்கு இருந்தது. பெண் எழுத்தாளர் ஒருவர் பிரத்யேக அலங்காரத்துடன் வந்திருந்தார். ஒருத்தர் மது அருந்திவிட்டு வந்திருந்தாப் போலத் தெரிந்தது. அது இல்லாட்டி அவருக்கு சரியாப் பேச வராது. மேடையில் இருந்த பிரமுகர்களே ஒருத்தரை ஒருத்தர் பெரிதாய்ப் பாராட்டுகிறவர்கள் அல்ல.. கலிங்கமித்திரனுக்காக அவர்கள் வந்திருந்தார்கள். தாங்கள் வராமல் இருக்கக் கூடாது, என்றுகூட அவர்கள் வந்து உட்கார்ந்திருக்கலாம். நாளைக்கு இவனது பத்திரிகையிலோ, முகநூலிலோ புகைப்படம் வரும்போது அவர் முகம் தெரியவேண்டும். எல்லாமே யூகங்கள் தாம். நேரத்தில் கூட்டத்தை ஆரம்பித்து நேரத்தில் முடிக்க வேண்டாமா, என்றிருந்தது ஜீயருக்கு. இதில் அவரைப் பற்றிய ஆவணப்படம். அவர் கதையில் வந்த குறும்படம்… எல்லாம் வேறு காட்ட வேண்டும். கலிங்கமித்திரனை, பிரசவ அறையில் இருந்து இனறு வரையிலான பல்வேறு கால கட்ட புகைப்படக் கண்காட்சி கூட வைத்திருக்கலாம்… நேரம் இல்லை.
மேடையை அளித்து விட்டு ஜீயர் பின்தங்கிக் கொண்டான். அவனும் ஒரு கட்டுரை எழுதி வாசிக்க என எடுத்து வந்திருந்தான். ஒவ்வொருவராய்ப் பேசப் பேச கை தட்டல்கள். அஞ்சலிக் கூட்டத்தில் கை தட்டுவதே ஆபாசமாய்த் தான் இருந்தது. ஒரு மரணத்துக்குப் போயிருந்தானாம் நண்பன். கணவனிடம், உன் மனைவி இறப்புக்கு வருந்துகிறேன், என்றானாம். எதுக்கு அவ சொர்க்கத்துக்குப் போயிடடான்னு வருத்தப் படறியா?... என்றானாம் அவன். இல்லடா, சநதோஷப் படறேன்… என்று சமாளித்த போது, ஏண்டா செத்துப் போனதுக்கு சந்தோஷப் படறியா?... என்று ஆத்திரப்பட்டானாம் கணவன்… மரணமே அபத்தம் தான். அதுசார்ந்து அபாத்தங்கள் தொடர்கின்றன.
ஒரு பழைய சிநேகிதர் பேசினார். “அந்தக் காலத்தில் என் கடையில்தான் பெரியவர் பலசரக்கு சாமான் வாங்குவார். எத்தனை கஷ்டம் இருந்தாலும் மாசக் கடனை அடைத்து விடுவார்…. ஒருமுறை…” என நிறுத்தினார். “அவர்கிட்ட பணம் இல்லை. அப்படியே…. இங்க பாருங்க, ஒரு கத்தைக் காகிதம், கதைகள், என்கிட்ட கொண்டு வந்து எடைக்குப் போட்டுட்டார்” என்றார். கூட்டம் திகைத்து அப்படியே அமைதி காத்தது. நாளைக்கு முகநூலில், எழுத்தாளர்களுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்க கோரிக்கை எழலாம்…

சென்னையின் பிரதான அண்ணா சாலையில் வேலை பார்க்கும் ஒரு எழுத்தாளர். முதல் முதலில் என்னை கலிங்கமித்திரன் சந்திக்க வந்த நாள் இப்போதும் நன்றாக நினைவு இருக்கிறது, என ஆரம்பித்தார்.அவரை என் மேசை முன் பார்த்ததும் அயர்ந்துவிட்டேன். “வாங்க ஐயா வாங்க. வராதவங்க வந்திருக்கீங்க. உங்களுக்கு நான் என்ன செய்யணும்?” என்று கேட்டேன். “இல்லப்பா. அவசரமா ஒண்ணுக்குப் போகணும். இந்த ரோட்ல எங்கயும் ஒதுங்க முடியல்ல” என்றார் அவர்… என முடித்தார் சஸ்பென்சை.
அடப் பாவிகளா, இதுக்கும் கைதட்டியாகிறது.
அவரது குடும்பத்தில் இருந்து யாராவது பேசலாம்… என்று ஜீயர் யோசித்து வைத்திருந்தான். யாரும் முன்வரவில்லை. பெரியவரின் பேத்தி இருந்தது அங்கே. அவருக்கு மிகவும் பிடித்த பேத்தி. தாத்தா, தாத்தா என்று அவரையே சுத்தி வரும் அது. பேத்தியை ஜீயர் மைக் அருகே தூக்கிக் காட்டினான். “தாத்தா…” என்றது அது. கையை மேலேபார்க்க மலர்த்தியது. “இய்ய” என்றது அது. கூட்டமே ஹோவென பெருங் குரல் எடுத்து அழ ஆரம்பித்தது.
ஜீயர் கண்ணைத் துடைத்துக் கொண்டான். தன் கட்டுரையை அவன் வாசிக்கவே இல்லை. அதற்காகவும் அவன் அழுதிருக்கலாம்.
 --

91 97899 87842

Comments

Popular posts from this blog