இல் அறம்
Short story – நன்றி குங்குமம் வார இதழ்
எஸ். சங்கரநாராயணன்
 வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவள், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்க அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது.
வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று பட்டது அவனுக்கு. கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகின்றன. தான் அவளிடம் சிக்கிக் கொண்டதாகவும் இனி இந்த ஜென்மத்தில் தான் இதிலிருந்து மீள முடியாது என்றும் அவன் நினைத்தான். ஆத்திரமாய் இருந்தது அவனுக்கு. அடிமனசில் சிறு கசப்பு திரண்டு விஷமாய் உள்ளே இறுகி வெறுப்பென கெட்டிப்பட்டு ஆத்திரச் சீற்றமாய் இந்நாட்களில் உள்ளே உரும ஆரம்பித்திருந்தது. இடியுருமல் வெளியே அல்ல, அவன் உள்ளே என்று தோன்றியது.
நேற்றுவரை பொழுது மேகந்திரள்வதும் இருள்வதுமாய்ப் போக்கு காட்டிவிட்டு விலகிச் செல்வதாய் இருந்தது. மழைக்கு முந்தைய வெயிலோ புழுக்கமோ தாள வொண்ணாதிருந்தது. மனுசர்கள் எல்லாருமே ஒரு வெறுப்புடன் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதுவும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வரை மழை அடையாளங்கள் இல்லாமல், கிளம்பித் தெருவில் நடக்கையில், பஸ்சில் இருந்து வீடடையும் நேரத்தில் மழை பயமுறுத்தியது. உலகம் கலவரங்களால் ஆனது என்று தோன்றியது.
எல்லாவற்றையும் விட கலவரம், வீடடைதல். வீடடைய அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுவலகம் வருவது அவனுக்கு ஆசுவாசம் தருவதாய் அமைந்தது. அலுவலக நேரம் முடிந்ததும் எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புகையில் உற்சாகமடைந்தார்கள். சிலர் எப்ப ஐந்து மணியாகும் என்று கூட பொறுமையில்லாமல் காத்திருந்தார்கள், அவனைத் தவிர. ஐந்து மணி ஆனதும் அவன் பெரும் திகைப்புக்கு உள்ளானான். இனி அலுவலகத்தில் இருக்க முடியாது. வீடு நோக்கித் திரும்பவுது தவிர்க்க முடியாத விசயமாய் இருந்தது. கால்கள் பலவீனமாகி தெம்பே இல்லாமல் சோர்வாய் உணர்ந்தன.
அவளுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வரையே கூட ஆசிரியர்கள் இரக்கப்பட்டு அவளை பாஸ் போட்டார்கள். தமிழையே எழுத்து கூட்டி வாசிக்க சிரமப்பட்டாள். எழுத அதிக சிரமப் பட்டாள். ஒன்பதாம் வகுப்பில் வயதுக்கு வந்த போது, இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம் எனத் தோன்றிவிட்டது. “சரிடி, வீட்ல இருந்து என்ன செய்யப் போற?...” என்று அம்மா கேட்ட கேள்விக்கு மௌனமாய் நிற்கத்தான் முடிந்தது அவளால். ஆற்றோடு போகிற மரக்கட்டை அவள். படிப்பு அத்தோடு நின்று போனது.
பெரிய லண்டன் மாப்பிள்ளையா வரப் போகிறான்? அவளும் எதிர்பார்க்கவில்லை தான். அட வாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு முழம் பூ. கோவிலுக்கு அழைத்துப் போக என்ன செலவு இருக்கும்? ஒரு எஃப் எம் ரேடியோ இருந்தால் நல்லது. விடிய விடிய அதில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தனிமை தெரியாது. பெண் பார்க்க வந்திருந்தான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெரும் ஆர்வம் ஆசை கனவு… அதெல்லாம் இல்லை. ஒரு அளவெடுக்கிற பார்வை. நெடு நெடுவென்று உயரமாய் இருந்தான். தொண்டை எலும்பு துறுத்தி வெளியே தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி மயிர் வளராமல் கிடந்தது. முழுக்கைச் சட்டை நாதசுரத்தை உறைபோட்டு மூடினாப் போல. நேரே அவன் கண்களைப் பார்த்தாள். வெட்கம் எல்லாம் இல்லை. அவன் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்து மீண்டன. அவனிடம் சலனம் இல்லை. சற்று சிரிப்பான் என நினைத்தாள். தான் சிரிக்க நினைத்தாள். அவன் சிரிக்காமல் அவள் சிரிப்பதாவது... அவன் மனசில் என்ன நினைக்கிறான் தெரியவில்லை. ஒரு பெருமூச்சு வந்தது அப்பவே அவளுக்கு. வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது அவளுக்கு. அவள் உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது.
அவன் அவளைப் பார்த்தான். அதேநேரம் அவளும் அவனைப் பார்ப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. வறண்ட அவள் கண்கள். அவனிடம் அவை என்ன எதிர்பார்க்கின்றன? சரி, நான் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறேன்? இங்கே நான் எதற்கு வந்திருக்கிறேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? அம்மாக்களுக்குப் பிள்ளைகளையிட்டுப் பெருமை பாட வேண்டியிருந்தது. அந்தப் பொய்களும் இல்லாமல் அவர்களால் வாழ முடியாதிருந்தது. புருசப் பெருமைகள் காற்றில் கரைந்து விட, இப்போது பிள்ளைகளையிட்டு நம்பிக்கை சார்ந்த கனவு சார்ந்த பெருமை. அவனுக்கு தன்னைப் பற்றி அம்மா பேசுவது பிடிக்கவில்லை. அதிகப் பிரசங்கம். இப்படித்தான் அவனது பாட்டி இவளை, அம்மாவை ஏமாற்றி தன் அப்பாவைக் கட்டி வைத்திருப்பாள் என்று தோன்றியது. கல்யாணம் என்றால் யாராவது வந்து வலை விரிக்கிறார்கள். பிறகு அவன் அவளைக் கல்யாணம் செய்துகொண்டான்.
அவளை ஏன் கல்யாணம் செய்து கொண்டான், அவனுக்கே புரியவில்லை. அட ஒரு ஆண்மகன் ஏன் பெண் ஒருத்தியை மணந்து கொள்கிறான்? அதன் தேவைதான் என்ன? அதுவே குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனது சம்பாத்தியம் அவன் ஒருத்தனுக்கே பற்றவில்லை. இப்பவே அம்மா தாராளமாய்க் கடன் வாங்கினாள். அவளது கடன் வாங்கும் வேகம் பார்த்தே அவர்களை நகரத்துக்கு அழைத்துவர மறுத்தான் அவன். அவளி கடன் வாங்குகிற சுவாதீனம் பார்த்தே கல்யாணத்தைத் தவிர்த்தான். அவனுக்கு வீட்டில் சாப்பிடவே யோசனையாய் இருந்தது. ஓரிடத்தில் கடன் வாங்கி இன்னொரு இடத்தில் அடைத்தாள் அம்மா. அதற்குப் பேர் சாமர்த்தியம். இதன் நடுவே சாமர்த்தியமாய் அவள் அவனுக்குக் கல்யாணம் வேறு நடத்திக் காட்டினாள். கல்யாணச் செலவுக்கு? கடன் வாங்கிக்கலாம்… சைக்கிளில் வீட்டிற்கு வந்து கடன் தந்தார்கள். வட்டி எவ்வளவு, அவன் கேட்கவில்லை.
நகரத்துச் சிறு வீடு. ஓடெடுத்த வீடு. அவனும் நண்பன் ஒருவனுமாய்ப் பகிர்ந்துகொண்ட வீடு. இவனுக்குக் கல்யாணம் என்று நண்பன் விலகிக்கொள்ள நேர்ந்தது. வேலைக்குப் போகிற பெண் என்றால் அதிகம் கேள்விகள் கேட்பாள் அவனை. நகை நட்டு புடவை சினிமா என சற்று பறந்து திரிய ஆசைப்படவும் கூடுமி. அவன் கல்யாணமே வேண்டாம் என்றவன். இப்போது வேலை பார்க்காத பெண் என்றதும் தான் ஆசுவாசமாய் இருந்தது, சிறிய அளவில். வாடகையை அவன் ஒருவனே சுமக்க வேண்டும் இப்போது. சாப்பாட்டுச் செலவு, அதுவும் ரெட்டிப்பானது. அவன் அலுவலகம் போய்விட்டால் கரண்ட் செலவாகாது. இவள் வீட்டில் இருந்தாள். ஆகவே… எல்லாமே தலைமேல் வெள்ளம் என ஓடுவதாய் இருந்தது… அம்மாவுக்கு இதையெல்லாம் விளக்க முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி, என்கிறாப் போல எதாவது சொல்லிச் சிரிக்கிறாள் அவள். இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
சின்ன இரண்டு அறை வீடு. சமையல் அறை சற்று ஒதுங்கி ஒரு நீள வராந்தா போல. ஒருவர் நின்று சமைக்கலாம். அந்தச் சின்ன இடத்தில் இருவர் வளைய வர வேண்டியிருந்தது. அவளை அவனால் தவிர்க்கவே முடியாதிருந்தது. அவள் அருகில் வரும்போது சிறு குற்ற உணர்வு அவனை வாட்டியது. தனக்கு சம்பந்தம் இல்லாமல் இங்கே வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாள் இவள். இதுகுறித்து தன்மீதே ஆத்திரம் குமுறியது. தப்பு அவன் மேல் தானே? அவன் மறுத்திருக்க வேண்டும். அவள் வீட்டுக்கு வந்தபின் வீடே நரகமாகி விட்டது. தன் அறையில் அப்படியே மூலையில் சுருண்டு கிடப்பான். விடுமுறை நாட்கள் அவனுக்கு வெறுப்பாய் இருந்தன. வெளியே வேடிக்கை கேளிக்கை என்று போக அவன் விரும்பியதே இல்லை. தனக்கு அவையெல்லாம் சபிக்கப் பட்டவை என்று ஏனோ நினைத்தான். இந்த உலகம் மகிழ்ச்சிகரமானது அல்ல. இங்கே சிரிக்கிறவர்கள் நடிக்கிறார்கள்.
மழை வர்றாப்ல இருக்கு, என்று சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி விட்டார்கள். சீக்கிரம் கிளம்ப அவர்களுக்கு ஒரு சாக்கு கிடைத்தாயிற்று. அவன்தான் தவிக்கும்படி ஆகிவிட்டது. வேறு வழியும் இல்லாமல் கிளம்பினான். பஸ்சேறாமல் வீடுவரை நடந்தே போகலாமா என்று கூட இருந்தது. மேகம் கருத்து அதுவேறு யோசனையாய் இருந்தது. பஸ்சில் இருந்து இறங்கி நடந்தான். வழியெல்லாம் மழை பயமுறுத்திக் கொண்டே வந்தது. மழைக்காலம் பிறக்குது, மழைக்காலம் பிறக்குது, என குடுகுடுப்பை அடித்தது இடி. வெளிச்சத்தை நாய்க்குட்டியாய் கவ்விக் கொண்டது இருள் நாய்.
வீடடைய மனம் அப்படியே குறுகி கால்கள் தளர்ந்தன. இப்படியே இருள் பெருகி நிறைந்து அவனையும் கரைத்து விட்டால் நல்லது. வீடு பயமுறுத்தியது. பிசாசு சந்நிதி அது. அவள் அருகில் இருக்கிற ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு குறுகல் வந்துவிடுகிறது. அவளிடம் பேச பயந்தான். எந்தவொரு வார்த்தையும் மறுவார்த்தையாக தனக்கு எதிராகக் கிளம்பி விடுமோ என அஞ்சினான். இங்க பார் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை.. என்று முகத்துக்கு எதிரே சொல்லிவிட்டால் கூட நல்லது தான். எனக்கு பெண்கள் யாரையுமே பிடிக்கவில்லை… என் அம்மா உட்பட. பெண்கள் தங்களுக்கான உலகில் ஆண்களை சுவிகரித்து, ஆக்கிரமித்து வாழ்கிறதாக அவன் நினைத்தான். தங்கள் எதிர்பார்ப்புகளால் அவர்கள் ஓர் ஆணின் விலா எலும்புகளை நொறுக்குகிறார்கள். தெரிந்தே இதில் ஆண்கள் சிக்கி வசப்படுகிறார்கள் என்கிற வாழ்க்கையின் அபத்தம் வெறுப்பாய் இருந்தது. கதவைத் தட்ட நினைத்த வேளையில் கதவைத் திறந்தாள் அவள். திறந்த ஜோரில் அவனைப் பார்த்தாள். வெளியே ஏன் நிற்கிறான்? கதவைத் தட்ட வேண்டியது தானே? இணக்கம் இல்லாத சூழலில் தன் வீடே தனக்கே அந்நியமாகி விட்ட அவலம் அது. அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் விலகி வழிவிட்டாள். இந்த இரண்டு மாதங்களில் அவர்கள் பேசிக்கொள்வதே கூட படிப்படியாய்க் குறைந்துகொண்டே வந்திருந்தது. இப்போது பேசாமல் இருப்பது பேச்சை விட சௌகர்யமாய் இருவருக்குமே இருந்தது. குப்பைத் தொட்டியை மூடி போட்டு மூடிக் கொண்டார்கள் இருவரும்.
மழை வருமா என பார்க்க அவள் கதவைத் திறந்திருந்தாள். ஒரு பெரிய உரையாடலுக்குத் தயாராவது போல மழை மெல்ல தூற ஆரம்பித்தது. சட்டென அது வேகமெடுத்து விடும் என்று தோன்றியது. திரட்டிச் சேர்த்திருந்த மேகம் கசிய ஆரம்பித்திருந்தது. இனி வெடித்து மொத்த பாரத்தையும் அது கொட்டி விடும் என்றிருந்தது. மணி ஆறு ஆறரை கூட ஆகவில்லை. அதற்குள் இந்த இருட்டு. மழை கிரகணம். இருந்த கடுப்பில் மழை ஏற்றிய வக்கிரத்தில் தேய்ந்து போன செருப்புகளை ஜாக்கிரதையாக வீடு வரை சேர்த்திருந்தான் அவன். வர வர எதில் சாதனை செய்வது என்று இல்லாமல் ஆகிவிட்டது. உள்ளே குமுறும் மூர்க்கம். எரிமலை வெடிக்கக் காத்திருந்தாப் போல. எதாவது பேசி அவளைக் குத்திக் கிழிக்க அவனுக்கு ஆவேசம் வந்தது. என் வாழ்வில் இருந்த கொஞ்சமே கொஞ்சம் அமைதி, அதையும் இவள் சின்னபின்னமாக்கி விட்டாள். என் குகைக்குள் நீ வேறு. குருடன் குருடனுக்கு வழி காட்டுவதா?
வீட்டுக்கு வராமல் வரப் பிடிக்காமல் வெளியே சுற்றிக்கூடத் திரிந்தாகி விட்டது. இரவு பதினோரு மணிவரை கூட, தெரு அடையாளம் இல்லாமல், நோக்கம் இல்லாமல் கால் வலிக்க வலிக்க நடந்து கொண்டிருந்தான். பல தெரு நாய் அவனுக்குப் பரிச்சயமாகி விட்டன. எந்த வீட்டில் எந்த டிவி சானல் ஓடும் என்பதும் அவனுக்கு ஓரளவு தெரிந்தது. என்றாலும், ஹா, எல்லாவற்றுக்கும் முடிவு என்று இருந்தது. ஆனால் வாழ்க்கையில் தனது சிக்கலுக்கு மாத்திரம் முடிவே தெரியவில்லை. அவன் சோர்ந்து அயர்ந்து கால் தளர வீடு திரும்புவான். அவனுக்கு அவள் சோறு எடுத்து வைத்திருப்பாள். கதவு தாளிடாமல் இருக்கும் உள்ளே வருவான். விளக்கைப் போடவே யோசனையாய் இருக்கும். அவன் வந்ததை அவள் அறிவாள். அவள் தூங்குகிறாளா என்பதே சந்தேகம். எப்பவுமே அவள் விழித்தே இருந்ததாக அவன் உணர்ந்தான். சமையல் பகுதி விளக்கைப் போட்டுக்கொண்டு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு ருசியே தெரியாமல் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவான். அவன் சாப்பிட்டாளா தெரியாது. கேட்டதும் இல்லை. நாலு நாள் கேட்காமல் விட்டால் தானே பசிக்குச் சாப்பிட ஆரம்பித்து விடுவாள்… என நினைத்தான்.
அவர்கள் இருவரிடையேயான மௌனத்தில் மழையோ பெரும் சத்தம் எடுக்க ஆரம்பித்திருந்தது. மழை எதையோ முறையிடுவது போலிருந்தது. யாரிடம் முறையிடுகிறது அது. அதன் முறையிடல் என்ன புரிந்ததோ மரங்கள் ஊய் ஊய்யென்று பொங்கி எழும்பின. எஜமானனைப் பார்த்த நாய் சங்கிலி மீறிக் கொந்தளிப்பது போல மழை கண்ட மரங்கள் உற்சாகம் காட்டினாப் போலிருந்தது. மழையின் சத்தமும் மரம் அசையும் சத்தமும் வெளியே கேட்டது. உலகம் இயக்கத்தில் இருந்தாப் போலிருந்தது. நல்லவேளை மழைக்கு முன் வீடு வந்ததாக நினைத்தான். நல்லவேளை கதவைத் திறந்தாள், இல்லாவிட்டால் கதவைத் தட்டி அவள் திறக்குமுன் நனைந்திருப்பேன்.
வெளி மழை அவன் உக்கிரத்தைச் சொல்வது போல் இருந்தது. ஓட்டுக் கூரையில் அது விழும் நாராச ஒலி. சரிந்திறங்கும் ஓடு. ஓரங்களில் மாத்திரம் வீடு ஒழுகும். இந்த மழைக்கு உடனே மின்சாரத்தைத் துண்டித்து விடுவார்கள்… என நினைக்கும் போதே விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது. பைத்தியக்காரி பாட்டெடுத்தால் அவளை யாரும் அடக்க முடியாது, என்பதைப் போல மழை தன் பாட்டுக்குக் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தது. மணி என்ன இருக்கும் தெரியவில்லை. இருட்டான அந்த இரட்டை அறை வீட்டில் அவன் உள்ளே வந்து ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டான். அவள் என்ன செய்கிறாள் தெரியவில்லை. அவன் இந்த அறையில் இருந்தால் அவள் மறு அறைக்குப் போய்விடுவாள். அல்லது அவனே மறு அறைக்கு நகர்ந்து விடுவது வழக்கம். மழையும் இருட்டும் ஓரளவு சாதகமாக இருப்பதாக உணர்ந்த போதிலும், அவளது அருகாமையை உணராமல் ஒதுக்க முடியவில்லை. விறுவிறுவென்று அவனே துரித நடையில் வீடு வந்து சேர்ந்திருந்தான். வியர்வைத் தீவு. அவள்முன் சட்டையை உரித்தெறிய முடியவில்லை. கால தாமதமாக ஊரெங்கும் சுற்றித் திரிந்தபின் வீடு வந்து சாப்பிட்டுப் படுக்க சௌகரியமாய் இருந்தது. இன்றைக்கு வெளியே இறங்க முடியாது. மழை. இப்பசத்திக்கு விடுமா தெரியவில்லை.
நமக்காவது இப்படி ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வீடு வந்து படுத்து விட முடிகிறது. இவள்? இவள்நிலை என்ன, என் யோசனையை ஒதுக்கினான். உலகில் தனக்கு சாதகமாக எதுவுமே நடப்பதில்லை என நினைத்தான். மழைத் தண்ணீர் துணி துவைக்க நல்லது. நன்றாக அழுக்குப் போகும், என்று தோன்றியது. ஒரு பீப்பாயை எடுத்து வாசல்பக்கம் ஓட்டில் இருந்து விழும் மழையைப் பிடிக்கலாமா என நினைத்தான். அதற்குள் அவள் அதைச் செய்தாள். ஒரு பீப்பாயை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் போனாள். அவனைத் தாண்டி அவள் போக வேண்டியிருந்தது. அவன் எழுந்து நின்றவன் பீப்பாயை வாங்கிக் கொண்டான். கதவைத் திறந்தபோது அதுவரை அடக்கமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மழைச்சத்தம் திடீரென்று பெருகி இன்னும் ஆக்ரோஷமாய்த் தோன்றியது. சப்த விஸ்வரூபம். யாருக்கு எதற்கு இத்தனை கோபம் காட்ட வேண்டும் அது தெரியவில்லை. சட்டென அவசரமாய்க் குனிந்து மழை தாரை விழும் இடத்தில் பீப்பாயை வைக்குமுன் நனைந்து போனான். மழையின் கயிறைப் பிடித்து ஆட்டிவிட்டது காற்று.
உள்ளே திரும்ப இருட்டில் விக்கிரகம் போல அவள் காத்திருந்தாள். அத்தனை கிட்டத்தில் அவள் நின்றது அவனுக்குத் துணுக்கென்றது. அவள் கையில் துண்டு இருந்தது. அவனுக்கு என்ன செய்ய தெரியவில்லை. மழையில் இறங்கி நடந்து விட்டால் கூடத் தேவலை. இவள் காட்டும் இந்தக் கரிசனம்… எனக்குத் தேவையா? இதை அனுமதிப்பதா? பேசாமல் வாங்கிக் கொண்டு பக்கத்து அறைக்குப் போனான். அவள் கதவைச் சாத்தினாள். அதற்குள் வீட்டின் ஒரு அடி வரை மழை உள்ளே சிதறிப் பரவியிருந்தது. எல்லாக் காரியத்திலும்அவர்களிடையே ஒரு சிறு நிற்றல், சின்னத் தயக்கம் என ஆகிப் போனதில் தரை நனைந்து விட்டது. அவன் நனைந்து விடடான். கிடுகிடுவென்று தவட்டிக் கொண்டான். மழையில் நனைந்ததற்கும் அதற்கும் லேசாய் குளிர் அடித்தது.
மழை அவனை வீட்டினுள்ளே அடைத்து விட்டதாய் உணர்ந்தான். பெரும் கொந்தளிப்பான மழை ஆனால் அவனை அடக்க முற்படடது போல் இருந்தது. இப்படி இதுவரை நேர்ந்ததே இல்லை. அவனால் தன்னளவில் சமாளிக்க முடிகிற மாதிரியே அவன் இயங்கினான். அவளுக்கு அவனிடம் பேச இருந்தாலும் அவன் அதை அனுமதிக்காமலேயே இருந்தான். பதில் சொல்லாமலேயே கடந்து போகிறவனாய் இருந்தான். பேசலாம். ஆத்திரப் படலாம். கோபப்படலாம்… அடிக்கவும் செய்யலாம். ஒன்று நிகழ்ந்தால் நல்லது. எதுவுமே நிகழாமல் இப்படியே காலம் போகிற அளவில் அவன் நடந்து கொண்டான். அவன் தானாகப் பேசப் போவது இல்லை என அவள் உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் அவள் பேசினாலும் பதில் சொல்கிறானில்லை. மாமியார் மாமனார், வேறு ஊரில். இதை எப்படி அவள் சமாளிப்பாள். ஆண்கள் குடும்பத் தலைவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் பெண்கள் நிழல் என அவர்களோடு இணைந்து பயணிக்கிறார்கள். அதுவே வழக்கம்… இவன் பிடி கொடுக்கிறானில்லை. நிழல் மாத்திரம் பிய்த்துக்கொள்வது எப்படி?
அவன் உள்ளறைக்குப் போனதும் அவள் இந்த அறைக்கு வந்திருந்தாள். உள் அறை சன்னல்களை கீழ்ப்பாதியை மாத்திரம் சாத்தியிருந்தாள். காற்று சுழன்றடித்ததில் சன்னல்கள் அதிர்வு கண்டன. அவன் எழுந்துபோய சன்னல் கதவுகளைச் சாத்தியதை அவள் இங்கே யிருந்தே கேட்டாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும். வீட்டுக்காரர் வாடகை கேட்டு வந்து போனார். இந்த இரண்டு இரண்டரை மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு யாருமே வந்தது இல்லை. அவன் அழைத்து வந்தது இல்லை. அவளும் வெளியே இறங்கி யாரிடமும் புன்னகைத்தது கூட இல்லை. அவன் எப்படி எடுத்துக் கொள்வான் தெரியாது. அவனே அவளிடம் சரியாகப் பேசவில்லை. இதில் மற்றவர்களோடு பேச்சு வார்த்தை என்ன?
வாசல் வேப்ப மரம்தான் அடிக்கும் சுழற் காற்றில் சிறு கிளைகளை முறிய முறிய இழந்தாப் போலிருந்தது. கிளைகள் மேல் ஓட்டுக் கூரையில் மோதும் சத்தம். யாருக்கோ கோபத்தில் சாபம் இட்டு சத்தியம் செய்கிறாப் போலிருந்தது மரம். உலகம் வெளியே பெரும் இயக்கத்தில் இருக்கிறது என்று நினைத்தாள். இங்கேயோ அபார மௌனம். இறுக்கம். மூட்டம். சுவர்க் கடிகாரம் இல்லை வீட்டில். அந்த டிக் டிக் சத்தம் கூட இல்லை. மின் விசிறி இருக்கிறது. மின்சாரம் இல்லை. அவள் போய் சிம்னி விளக்கு ஒன்றை சமையல் மேடையில் ஏற்றி வைத்தாள். முழு இருட்டு முதலையாய் அவளைக் கவ்வுவது என்னவோ போலிருந்தது. அவள் அத்தனை தைரியசாலி அல்ல. இருட்டு அவளை பயமுறுத்தியது. இருட்டு என்று கூட இல்லை. எதையும் பேசவும், செய்யவும் துவங்குமுன்னம் அவளுக்கு சிறு பயமும் பதட்டமும் கூடவே வந்தது. இந்த இருட்டில் அவன் கூட இருக்கிறது கூட, அவன் பேசாவிட்டாலும், ஆறுதலாய் இருந்தது.
இப்படியே கால காலத்துக்கும் அமர்ந்திருப்பதா? தன் தலை வீங்கி வெடித்துவிடும் போலிருந்தது. மனசின் அலையடிப்பில் வார்த்தைகள் கால காலமாய் குப்பைசேர்ந்தாப் போல அடைந்து கிடந்தன. சொற்களின் முடை நாற்றம் தாள முடியாதிருந்தது. தனக்கே நாறும்படியான சகிக்கவொண்ணா நிலை அது. சொற்களின் பிணம் தொண்டைக்குள் வாந்திவரச் செய்து விடுமோ என்று பயந்தான். எனினும் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளியேற விடாமல் அவன் கவனமாய் இருந்தான். எதும் சமைத்திருக்கிறாளா தெரியவில்லை. சாப்பிட்டால் பேசாமல் படுத்து விடலாம் என்று இருந்தது. தூங்குகிறோமோ இல்லையோ, படுத்து விடலாம். தூங்குகிற பாவனை அவனுக்குப் புதிது அல்ல. அவளுக்கும்… அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளக் கூட அவன் வாய்ப்பு அளிக்க மறுத்தான். நீ என் வாழ்வின் அதிதம். அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அவளை விரும்பவில்லை… என்பதை தன் அலட்சியம் அவளுக்கு உணர்த்த வேண்டும் என அவன் நம்பினான்.
சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள் அவள். பதறினாப் போல ஸ்டூலில் இருந்து எழுந்து கொண்டாள். அவளிடமான திடீர் மாற்றம், அவன் திரும்பிப் பார்த்தான். தரையில் எதோ ஊர்ந்தாப் போலிருந்தது. புடவையைப் பதறி உதறினாள் அவள். சமையல் அறையில் ஏற்றி யிருந்த விளக்கை. அவளே போய் எடுத்து வந்தாள். தரையில் துழாவினாப் போல தேடினாள். தேள். தேள் ஒன்று ஒன்று மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அவனும் எழுந்து வந்து தேளைப் பார்த்தான். பதட்டமாய் ஓட அது முயற்சிக்கவில்லை. பெரிய தேளாய் இருந்தது. அவன் பார்த்தான். குனிந்து தேள்ப் பக்கமாய் வெளிச்சம் காட்டினாள் அவள். தன் மேல் தேள் விழுந்து கடந்திருக்கிசறது. அவளக்கு ஏனோ அப்போது பயமாய் இல்லை. கூட அவன் இருப்பதால் இருக்கலாம். ஆச்சர்யகரமாக அதன் முதுகெங்கும் சிறு சிறு தேள்க்குட்டிகள் நமநமவென்று திரிவதை அவன் கண்டான். விளக்குமாறு மாதிரி எதையாவது எடுத்து வந்து தேளை அடித்துவிட அவன் நினைத்தான். அவள் சயைமல் அறைக்கு உள்ளே போனாள். பெண் தேள், குட்டிகள் ஈன்ற நிலையில் அவற்றை முதுகில் கதகதப்புக்காக ஏந்தித் திரியும் என்று அவன் கேள்விப் பட்டிருந்தான்.
அவள் ஒரு சிறு குப்பியில் இருந்த மண்ணெண்ணெயை தேளின் மேல் ஊற்றினாள். சில நிமடங்களில் தேள் சுருண்டு அழுக்குச் சுருணையாய்ப் போனது. அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தனது நிதானம் அவளுக்கே வியப்பாகத்தான் இருந்தது. கனிந்து விளக்குமாற்றால் ஒரு காகிதத்தில் அதை அவள் அள்ளினாள். வெளியே இன்னும் மழை பெய்து பெருக்கியபடி இருந்தது. கதவைத் திறந்ததும் மழை ஓலம் இன்னும் உரத்துக் கேட்டது. புது நபர் நுழைய ஒப்பாரி அதிகரிப்பதைப் போல. அப்படியே காகிதத்தோடு வெளியே எறிந்தாள் அவள். அதற்குள் காற்றலைப்பில் மழை அவள்மேல் பாம்புச் சீறல் சீறி நனைத்தது. கதவைச் சாத்திவிட்டு அவள் திரும்பினாள். துண்டுடன் நின்று கொண்டிருந்தான் அவன்.
“ஓனர் வந்திருந்தாரு…” என்றபடியே வாங்கிக் கொண்டாள்.


91 978999 87842

Comments

Popular posts from this blog