Published in ‘Kaaninilam’ - quarterly
புல்
எஸ். சங்கரநாராயணன்

ராட்சி ஒன்றியக் கட்டடம் எப்பவுமே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக வாசல் பரபரத்துக் கிடக்கும். கையில் குழாய் போல பேப்பரைச் சுருட்டியபடி யாராவது காத்திருப்பார்கள். பத்து தலை ராவணன் போன்ற அகல எடுப்பான கட்டடம். உச்சியில் பெரிதாய் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதியிருக்கும். காம்பவுண்டுச் சுவர் கோட்டு மீசை வைத்தா மாதிரி முன் எடுப்புக்கு மாத்திரம். சினிமாவில் இப்படிதான் செட்டு போடுவார்கள். முன்பகுதிக்கு மாத்திரம்ஞ் அதுவே சிதிலமடைந்து செங்கல் தெரிந்தது. சில இடங்களில் பிளவு விட்டு அதன் இடுக்கு வழியே செடி வெளியே எட்டிப் பார்த்தது. மூக்கு மயிர்கள் போல. தாண்டி சிறிது குழிவான பகுதியில் ஆலமரம் ஒன்று. விழுதுகள் பரவிய பெரிய மரம். ஊருக்கே அடையாளம் அது. அதுகொள்ளாத பறவைகள். பறவைகள் மரங்களை வளர்க்கின்றன. மரங்கள் பறவைகளை வளர்க்கின்றன. ஊரில் நிறைய ஆல மரங்கள். பெயரே ஆலங்கொட்டில்.
வாயிலில் பெயருக்கு ஒரு கிராதி இரட்டைக் கதவு. எப்பவோ திறந்தது மூடப்படவே இல்லை. கதவின் இரும்பைச் சுற்றி மண் மேடுதட்டி இறுகிக்கிடந்தது. இனி சாத்த முடியாது. கதவுக்கு உச்சியில் அரைநிலா போல போர்டில் ‘ஆலங்கொட்டில் ஊராட்சி ஒன்றியம்’ என அழிந்தா மாதிரி எழுத்துக்கள். கரகாட்டக்காரி வைத்த கனகாம்பரம் போல. தாண்டி உள்ளே வர வாகனங்கள் நிறைய நின்றிருக்கும். வந்தவரின் பவிஷுக்குத் தக்கபடி சைக்கிள். டிவியெஸ். ஸ்ப்ளெண்டர். ஆட்டோ. நான்கு சக்கரம். சற்று தள்ளி ஒன்றியத்துக்குச் சொந்தமான குப்பை வண்டிகள். தண்ணீர் கழிவுநீர் லாரிகள். தலைப்பா கட்டினாப்போல பெரிய தண்ணீர்த் தொட்டி. அதன் கீழேயே கல்யாண மண்டபத்தின் கையலம்பும் இடம் போல வரிசையாய்க் குழாய்கள்.
கவுன்சில் தலைவரின் கார் எண் ஊரில் எல்லாருக்குமே தெரியும். இந்தத் தேர்தலில் செயித்தபோது அவர், எப்படியும் சம்பாதிச்சிக்கலாம் என்ற நப்பாசையில் மாதக் கடனில் வாங்கிய கார். ஏனெனில் சத்தியமூர்த்தி, முந்தைய தலைவர், தேர்தலுக்கு சற்றுமுன் தான் கார் வாங்கினார். வரும் தேர்தலுக்கு முன் இருக்கிற நிதியை மக்களுக்கான சேவையில் அவர் செலவிட்டார். அவர் ஊருக்கு ரோடு போட்டார். ஓரங்களில் அரையடி அரையடி விட்டு அதையும் ரோடு போட்ட மாதிரி கணக்கு காட்டினார். கோடு போடச் சொன்னா ரோடு போட்டுருவான், என்பார்கள். இவர் ரோடு போடச் சொன்னா கோடு போட்டார். உச்சியில் மாத்திரம் முடி விட்டு மிலிட்டரி கட் கிராப் வெட்டிக்கொண்ட மாதிரித் தெரிந்தது ரஸ்தா. சத்தியமூர்த்தி ஒன்றியத்துக்கு புதிய லாரிகள் வாங்கினார். அதையெல்லாம் பார்த்தபடி புருசோத்தமன் பல்லைக் கடித்தபடியே காத்திருந்தார். அடங் ஙொய்யால, ஒரு ஒன்றியத்துல இத்தனை துட்டு இருந்தா, இனி மாநகராட்சி, எம்.எல்.ஏ., எம்.பிஞ்ன்னா என்ன ஆறது? அடுத்த தேர்தலில் புருசோத்தமன் வெற்றி பெற்றார்ஞ் இனி கார்க் கடன் அடைக்க வேண்டும்.
நல்லாதான்யா பேர் வைக்கிறாங்கள். சத்தியமூர்த்தி. புருசோத்தமன்.
புருசோத்தமனுக்குத் தொடுப்பு அன்னக்கிளி, என்று ஊரில் எல்லாரும் அறிந்திருந்தார்கள். பெரிய மனுசன் என்றால் அதெல்லாமும் வேண்டியிருக்கிறது. அன்னக்கிளிக்கு ஒரு தங்கை. சிவரஞ்சனி. கொஞ்சம் சிவப்பாய் இருப்பாள். அதனால் பெயர்ப் பொருத்தம். அக்காக்காரி போலவே தங்கையும் கெட்டிக்காரி. தங்கச்சிக்காரி சத்தியமூர்த்தியை வளைத்திருந்தாள். அதனால் சத்தியமூர்த்தி என்ன செய்தாலும் புருசோத்தமனுக்கும், புருசோத்தமன் என்ன செய்தாலும் சத்தியமூர்த்திக்கும் தெரிந்து விடுகிறது. பெண்களுக்கு தங்கள் சகவாசத்தையிட்டுப் பெருமையும், மத்தவளையிட்டுப் பொறாமையும் உண்டு. தங்கப்பல் கட்டினவ பக்கத்து வீட்டுக்குப் போய் ‘இஞ்சி இருக்கா இஞ்சி’ன்னு கேட்டாளாம். அப்பதானே அவ கட்டின தங்கப்பல்லைக் காட்ட முடியும்? இதுக ரெண்டும் அந்தக் கேஸ். தம்பட்டப் பிரியம் உள்ளவர்கள். ஊரில் மத்த பொண்ணுகளே கூட அவர்களைப் பார்த்து வயிறெரிந்தார்கள்ஞ் இவளுகள் படுத்திய பாட்டில்தான் புருசோத்தமன் தேர்தலில் நின்றார் என்றுகூட ஊரில் பேச்சு உண்டு.
தேர்தலில் தோற்போம் என்று சத்தியமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நல்லாதான் செலவு செய்தார். எல்லாவனும் வாங்கிக்கொண்டு புருசோத்தமனுக்கு ஓட்டு போட்டிருக்கானுகள். தேர்தல் அறிவிக்குமுன்னால் ரோடு போட அது இது என்று திட்டங்களைச் செயல்படுத்தியதில் கார் வாங்கினார். சிவாவுக்கு கழுத்தில் ஒரு சங்கிலி மினுங்கியது இப்போது அவள் அழகு எடுப்புகூடித் தான் போனது. அவள் நடையே சற்று துள்ளலாய் மாறியிருந்ததுஞ்இப்போது. ஆ தப்பு அங்கேதான்ஞ் (இஞ்சி இருக்கா இஞ்சி.) அக்காக்காரிக்கு அதைப் பார்க்க சங்கிலி ஆசை வந்திருந்தது. புருசோத்தமன் நமக்கு எதுக்குப்பா கட்சியும் தேர்தலும் என்று இருப்பார். கட்சியில் மெம்பர் தான். நன்கொடை தருவதோடு சரி. மரக்கடை வைத்திருந்தார். கல்லாவைப் பார்த்துக் கொண்டால் போதும் என்று இருந்தவர். மரம் சும்மா இருந்தாலும் காத்து இருக்க விடாதுன்றா மாதிரி அன்னக்கிளியால் அவர் உலுக்கப் பட்டார்.
ஒன்றியத்தின் முன் பகுதி பெரிய பொட்டல். நடுவில் தேசியக் கொடி ஏற்றும் கம்பம். அதைச் சுற்றி வட்டமான சிமென்ட் மேடை. எல்லாம் காடென புதர் மண்டிக் கிடந்தது. அதை நாலு ஆள் போட்டு வழித்தெடுத்தார் சத்தியமூர்த்தி. அதில் ஒரு தளம் மாதிரி போட்டால் திரும்ப எதுவும் முளைக்காது, என ஒரு கணக்கு. அதற்குள் அதிகாரம் கை மாறி விட்டது. ஊருக்கு அவர் சேவை செய்யத் தயார்தான். கை நழுவி விட்டது வாய்ப்பு. இனி அஞ்சு வருசமோ அதுக்கு மேலேயோ. வருமோ வராதோ. இப்பவே நம்ம சைடுல இருந்தவன் நாலைந்து பேர் அங்க போயி “தலைவரே”ன்னு பொன்னாடை போத்தி இணைஞ்சிட்டான். சிவா ஆசையாய்க் கிட்டே வந்தபோது, “சனியனே, எல்லாம் உன்னாலதான்” என்றார் எரிச்சலுடன். என்றாலும் அந்தக் கோபம் நீடிக்கவில்லை. ரொம்ப எகிறினால் அப்பறம் அதைச் சமாளிக்க எஸ்ட்ரா செலவாயிரும். அந்த பயம் உண்டு அவருக்கு.
நீள எடுப்பில் இருந்த கட்டடத்தில் மேலும் அறைகள் கட்டி விரிவு படுத்துவதாக புருசோத்தமனின் திட்டம். பின்னே? மக்களுக்கு சேவை செய்வது இப்போது அவர் முறை. பின்பக்கம் வால் முளைத்தாப் போல கட்டடம் இப்போது ஒரு ‘ப’ வடிவம் பெற்றது. அதில் ஒரு நீண்ட அறை கவுன்சிலர்களுக்கானது. அதை ஒட்டினாப்போல சின்ன அறை. அதில் புருசோத்தமனின் உருப்படாத தம்பி ஒருத்தன் வந்து டீக்கடை போட்டான். பீடி சிகெரெட் சமோசா பிஸ்கெட் பாக்கு என உதிரி வியாபாரம். மலையாளி பேக்கரிக்காரன் ஒருத்தன் பெரிய டப்பாவைக் கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்து பிஸ்கெட், சமோசா ஐடடங்கள் போட்டுவிட்டுப் போவான். ரீஃபில் பேனா, கோர்ட் ஃபீ மற்றும் ரெவின்யூ ஸ்டாம்புகள் இங்கே கிடைக்கும். படிக்கையில் அவனோடு கூடவே படித்து கூடவே ஃபெயிலான ஒரு சிநேகிதன். அவனும் கூடவே இங்கே மனு எழுத என்று வந்து உட்கார்ந்து கொண்டான். படிக்காத பையன்கள் தான் நாட்டில் ஊள்ளூரிலேயே மக்கள் சேவை என்று அமர்கிறார்கள்.
வேற வழியில்லை.
புருசோத்தமனின் கட்சி கவுன்சிலர்கள் மெசாரிட்டி. நாற்பதில் அவர்கள் இருபத்திரெண்டு. இங்கேர்ந்து போய் ஜோதியில் ஐக்கியமானவர்கள் ஒரு நாலைந்து பேர்ஞ் என புருசோத்தமன் என்ன தீர்மானம் கொண்டு வந்தாலும் செயித்தார். தேனைத் தொட்ட கை சும்மா இருக்காது. சத்தியமூர்த்தி எல்லாவற்றையும் இப்போது வேடிக்கை பார்க்கிறாப் போல அல்லவா ஆயிட்டது. “ஒன்றியக் கட்டடத்தை விரிவு படுத்தும் இந்தத் திட்டம், அதுவே நாங்கள் முன்னெடுத்தது தான்ஞ்” என்றெல்லாம் மேடை போட்டு அவர் பேசத்தான் முடியும். புருசோத்தமன் சாதித்துக் கொண்டிருந்தார். அட நாம பேசினாலும் கைதட்ட ஆர் இருக்கா? முதுகுக்குப் பின்னால் சிரிப்பாங்கள்.
சத்தியமூர்த்திக்கு சக்கரம் தளர்ந்து சுற்றுகிறதில் சிவா முகம் சிறுத்து விட்டது. அக்கா கை ஓங்கினாப் போல அவள் எடுப்பு குறைந்திருந்தது. அவள் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் அன்னக்கிளி அவளைக் கூப்பிட்டு வைத்து எதாவது பேசினாள். “நாளைக்கு நம்ம கோவில்ல கொடை இல்லஞ் எங்க அவருதான் விழாத் தலைமை” என அவளுக்குப் பெருமை. கட்டின பொண்டாட்டி கூட இத்தனை அலட்டிக்கலையடி யம்மா, என நொடித்தாலும் வெளியே சிரித்து வைத்தாள் சிவா.
ஒன்றிய வளாகம், பெரிய எல்லை அது. வாயில் கடந்து உள்ளே நெல்லடிக்கிற களம் போல ஏராளமான பொட்டல். இபபோது கட்டடம் பின்பக்கமாக ‘ப’ என வளர்ந்ததில் நடுவேயும் பெரும் சதுரமாய்ப் பரப்பு அடைபட்டது. ஒரு மழை வரை பொட்டலில் பெரும் மாற்றம் இல்லை. வலப்பக்கம் தள்ளி நின்ற ஆலமரம். அதுவரை கரிசல் தரையாக சாக்கடை ஓடிக் காயந்த சாயலில் கிடந்தது பூமி. கோவில் கொடை முடியவும் பெய்த ஒரு மழையில் மனுசாளுக்குத் தாடி முளைத்தாப் போல ஒன்றிய முன் பகுதிலும், கட்டடங்களுக்குள் அடைபட்ட வளாகத்திலும் புல் முளைக்க ஆரம்பித்தது.
முதல் தழையான புல் வெகு அழகானது. பச்சை அல்லாமல் ஒரு வெளிர் பசுமை அது. குமரிப் பெண்ணின் வசிகரம் அது. சூரிய வெளிச்சத்தை அது உள்ளே தக்க வைத்துக்கொண்டு பொன் மினுக்கங் கொடுத்தது. கறவை மாடுகளுக்குப் பிரியமான தீனி. இந்தப் பக்கம் வராமல் ஆடு மாடு மேய்ப்பவர்கள் தண்ணித் தொட்டி ஆலமரத்தடியோடு நின்று கொள்வார்கள். அந்தப் பக்கம் சுவரில் எல்லாம் கூட புசு புசுவென்று கொடி மூடிக் கிடக்கும். செடிகொடிகளுக்கு இடையே நடமாடும் கரட்டாண்டிகளைக் கல்லால் அடிப்பார்கள். அது இடையன்களுக்குப் பொழுதுபோக்கு. மாடுகள் தன்னிச்சையாய் ஒன்றிய அலுவலக வாயில் மற்றும் உட்புற வளாகப் புல்லை மேய என்று வந்துபோயின. அது கறக் மொறுக் என்று புல்லை ஆர்வமாய்க் கடிக்கிற சத்தம் தெளிவாய்க் கேட்க முடிந்தது.
புல்லின் கொல்லென்ற வளர்ச்சி அழகு. இராப் பனியில் சிலிர்த்து விரைத்து நிற்கிற புல்லை காலையில் அலுவலகம் பரபரப்பாகும்வரை காண முடியும். நீர்முட்டையாய் தவளைக் கண் போல மினுங்கும் புல். ப-வின் இந்தப் பக்க அறையில் இருந்து ப-வின் அந்தப் பக்க அறைக்குப் போகிறாட்கள் புல்லை மிதித்து அந்தக் குளிரை உரசியபடியே போவார்கள். எங்கிருந்தாவது நாய் எதும் வந்தால் புல்லில் உருண்டு மல்லாக்க அப்படியே கிடந்து வாழ்க்கையை அனுபவித்தது. புல் எல்லாருடைய நல்லம்சங்களையும் மேலெடுத்து வருவதாய் இருந்தது.
அடுத்த மழையில் புல்லின் வளர்ச்சி உக்கிரம் பெற்றது. புல் தாள்கள் கடும் பச்சையாய் உடைவாள் என முகம் மாறின. அரையடிக்கு மேல் வளர்ந்து செழித்தது புல். இப்போது அதன் ஊடே புகுந்து கடப்பார் இல்லை. வராந்தாக்களில் நடந்தார்கள் ஊழியர்கள். வாயில் தாண்டிய முன் வளாகத்திலும் செழித்துக் கிடந்த புல் புதர்போல் உள்ளிருட்டு காத்தது. இரவுகளில் அதில் இருந்து சிறு பூச்சி, வண்டுகளின் இரைச்சல் கரன்டு டிரான்ஸ்ஃபார்மர் போலக் கேட்டது.
அடுத்த ஒன்றியக் கூட்டத்தில் சத்தியமூர்த்தி, “நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத் தக்கது. இந்தப் புற்களை யெல்லாம் உடனடியாக வெட்டி நிலத்தை சீர் செய்ய வேண்டும். நான் இருந்தபோது இந்த இடம் எத்தனை துப்புரவாக இருந்தது என்பது மக்களுக்கே தெரியும்ஞ்” என்றெல்லாம் ஆவேசப்பட்டார். இதை ஒரு விவாதப் பொருளாக எடுப்பார் சத்தியமூர்த்தி என புருசோத்தமன் எதிர்பார்க்கவில்லை. “ஆவன செய்யப்படும்” என ஒருவரி பதிலை மாத்திரமே அப்போது அவர் தந்தார்.
“ஆவன செய்யறதுன்னா என்னடி?” என்று சிரித்தாள் சிவா. “ஆனா இல்லாட்டி ஆவன்னாஞ்” சிவா சிரித்தபோது கண்கள் அழகாக விரிந்தன. அன்னத்துக்கு அவள் கேலி செய்தது தாள முடியவில்லை. அதுவும் கழுத்துச் சங்கிலியை நிமிண்டிக்கொண்டே சிவா பேசியது தான் அதைவிடக் கொடுமை. இந்தாள் பதவிக்கு வந்து ஒண்ணேகா வருசம் ஆகுதுஞ் ஒரு குந்துமணி கண்ணுல காட்டியிருக்குமா? ஹ்ம். எதற்கும் அதிர்ஷ்டம் வேணும். ஆத்திரம் பூத்தாலும் வெளியே சிரித்து வைத்தாள் அன்னம்.
சத்தியமூர்த்தி தன் ஆட்களை வைத்து இந்தப் புல்லை தானே தன் சொந்தச் செலவில் சுத்தம் செய்வதாக அடுத்த ஸ்டண்ட் ஆரம்பித்தார். அதுவேறு புருசோத்தமனுக்கு ‘காண்டு.’ இதையெல்லாம் முளையிலலேய நிறுத்தணும், என எச்சரித்தது மனசு. சத்தமாய்ப் பேசிவிட்டார் போல. “கரெக்ட்டு. அதான். முதல்லியே இந்தப் புல்லை வெட்டியிருக்கணும்.” என்று கூட இருந்தவர் இவர் சொன்னது புரியாமல் பேசினார். ஆதரவாகப் பேசியதாகத் தான் அவர் நினைத்தார். அதுவேறு புருசோத்தமனுக்குக் கடுப்பேற்றியது.
பூச்சிகள் அடைய அடைய புல்வெளியில் தவளைகள் நடமாட ஆரம்பித்தன. சின்னதும் பெருசுமாய் பல்வேறு நிறங்களில் பழுப்பு கருப்பு பச்சை சிவப்பு என விதவிதமான தவளைகள். மடித்த நாக்கை நீஞ்ட்டி ‘கபடி கபடி’ என எல்லையைத் தொட்டு பூச்சிகளைப் பிடித்துச் சுவைத்தன தவளைகள். வராந்தாக்களில் வெளி வளாகங்களில் அவை சகஜமாய்த் துள்ளித் திரிந்தன. பச்சக் என்று துள்ளி சுவரில் போய் ஒட்டிக்கொண்டு அப்படியே கிடந்தன. இரவுகளில் அலுவலக சன்னல்களைப் பூட்டாமல் விட்ட ஒருநாள் அவை உள்ளேயும் வந்து அமக்களம் செய்யத் தொடங்கி விட்டன.
மணல் குவித்து மண்பானைத் தண்ணீர் வைத்திருக்கும் அங்கே. மண்பானைத் தண்ணீர் ஜில்லென்று தொண்டையில், அப்டியே உணவுக்குழாய் வழியே வயிற்றில் இறங்குவது குளுகுளுவென்று இருக்கும். ஒரு பெண் ஊழியர் தண்ணீர் குடிக்கப் போனால் அந்த ஈரமணலில் ஜம்மென்று அமர்ந்திருந்தது தவளை ஒன்று. அவளைப் பார்த்ததும் அப்படியே முட்டைக்கண்ணால் வெறித்தபடி தவளை தாடைச் சதையைத் தொங்கவிட்டு ஒரு ஆட்டு ஆட்டி திரும்ப உள்ளிழுத்துக் காட்டியது. தம்ளரை அப்படியே வீசிவிட்டு ஓடிவந்தாள் அவள்.
இன்னொருத்தி மேசைமேல் வைத்திருந்த காகிதக் கட்டில் பேப்பர் வெயிட் என்று கைவைத்தால் விசுக்கென துள்ளியது தவளை. பதறித் துள்ளி விலகினாள் அவள்.
கேன்ட்டீனில் சமோசா என்று தவளையை எடுத்து, நல்லவேளை கடிக்குமுன் கண்டுபிடித்தார்கள்.
சத்தியமூர்த்திக்கு இந்த சம்பவங்கள் பெரும் உற்சாகம் அளித்தன. இப்போது அவருக்கு அலுவலக ஊழியர்களின் ஆதரவு கிடைத்தாப் போலத்தான். இதைவைத்தே புருசோத்தமனை உண்டு இல்லைன்னு பண்ணிவிடலாம் என்று உற்சாகப்பட்டார் அவர்.
சிவரஞ்சனிக்கும் உற்சாகமாய் இருந்தது.
அவன் என்ன சொல்றது நாம என்ன கேக்கறது, என்ற பாணியில் புருசோத்தமன் மௌனம் காத்தார். பாக்கலாமே. நாம இப்ப மெசாரிட்டி. இவனுக என்னதான் கரடியாக் கத்தினாலும் காரியம் ஆவாது. என்ன செஞ்சிற முடியும் இவனுங்களால. “நான் பாத்துக்கறேன்” என்றார் அவர் அன்னக்கிளியிடம். அட இது ஒரு ஆம்பளைன்னுகிட்டு, என அன்னத்துக்கு ஏமாற்றம்.
ஒன்றிய வளாகத்தின் தள்ளி நின்ற ஆலமரக் குழியில் பெய்த மழைக்குத் தண்ணீர் கட்டியது. பிள்ளைகள் முட்டாழத் தண்ணியில் விளையாடின. இடையன்களுக்கு கும்மாளம் அடிக்கத் தோதாய் அமைந்தது அந்த ஆலமரத்தடி. விழுதுகளைப் பற்றியபடி அவர்கள் இங்கேர்ந்து அங்கே அங்கேர்ந்து இங்கே என ஆட்டம் போட்டார்கள். ஒருவன் தொங்க அடுத்தவன் வண்டி எங்க போவுது? - மருதை போவுது - போலா ரைட்ட்ஞ் என தள்ளி விட அவன் போகுமுன் டவுசர் நழுவி அவன் அம்மணமாய்த் தண்ணில போய் விழுந்தான். ஒரே வேடிக்கை.
அதில் ஒருத்தன் விழுது என்று தாவிப் பிடிக்க அது விழுது அல்ல. புஸ்சுனு ஒரு சத்தம். ஐயோ பாம்பு என குப்புற விழுந்து ஓடினான் அவன். நல்ல கதை. அன்னக்கிளிக்கு சிரிப்பு வந்தது.
புல் அல்ல புதர். இடுப்பு உயரத்துக்கும் தாண்டிவிட்டது புல். விட்டுவிட்டு மழை வேறு பெய்தது. ஒரு நாய் ஒளிந்துகொண்டால் கண்டுபிடிக்க முடியாது. அத்தனை அடர்த்தி. உள்ளிருட்டு. கொசுத்தொல்லை வேறு அதிகமாகி விட்டது. அலுவலர்களே முகம் சுளிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களே ஒருநாள் தலைவர் முன்னால் கூட தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவித்தார்கள்.
அப்போதும் புருசோத்தமனுக்கு, நிலைமை சத்தியமூர்த்திக்கு சாதகமாய் உருவோங்கி வருவதில் ஆத்திரம் தான் வந்தது. இரு. பதட்டப்படாதே. நமக்கு இல்லாத செல்வாக்கா? அவர் தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தார். வேறு பெரிய திட்டங்கள் வைத்திருந்தார் அவர். வாசல் காம்பவுண்டுச் சுவரை இடித்துவிட்டு நல்ல சுவர் எடுப்பது. புதிய கிராதிக் கதவு போடுவது. முழு கட்டடத்துக்குமே திரும்ப வண்ணம் பூசுவது. இடையில் அம்பேத்கர் பிறந்தாள் விழாஞ் இப்படி பரபரப்பாக எதாவது செய்வம், என்று இருந்தார். இதெல்லாம் பொம்பளையாளுகளுக்கு எப்பிடித் தெரியும். எல்லாத்தையுமா ஒரு ஆம்பளை சொல்லித் திரிவான். இதுங்களுக்கு என்ன தேவையோ அ9தத்தானே சொல்ல முடியும்?
ஒரே சமயத்தில் எல்லாத்துக்கும் கலெக்டரிடம் அனுமதி பெற முடியாது. “ஒண்ணொண்ணா செய்யிங்க. பசித்தவன் அந்தாக்ல வாய்ல சோத்த அடைச்சிக்குவானே, அதும் மாதிரி வேலை செய்யப்டாது,” என்பார் அவர். எப்படியும் அவருக்கும் ஒரு பங்கு நைவேத்தியம் காண்பிக்காமல் இல்லை. இருந்தும் அதிகாரியில்லா? விரைப்பு இருக்காதா?
பேரா? கலெக்டர் பேர் தர்மசீலன்.
பதவிக்கு வந்ததும் முதல் செலவாக ‘தலைவர் அறை’க்கு ஏ/சி போட ஏற்பாடு மேற்கொண்டிருந்தார் புருசோத்தமன். ஃபைல் ஓகே ஆகி இப்பதான் வந்தது. கூடவே மாடியில் கவுன்சிலர்களின் கூட்டம் நடக்கும் அரங்கம், கீழே கவுன்சிலர்களின் ஓய்வறை என எல்லாத்துக்கும் ஏ/சி. பதினாலு சாதனங்கள் வாங்கப்பட்டன. இதெல்லாம் தனக்குத் தோணவில்லையே என்று சத்தியமூர்த்தி வயிறெரிந்த கணம் அது. அவர் வயிறெரிவார் என்பதில் புருசோத்தமனுக்கு அபார திருப்தி. ராத்திரி ஊரடங்கியதும் அவர் அன்னக்கிளியை வரச் சொன்னார். “எங்க?” என்றாள் அவள் சலிப்புடன். அஜித் படம், புதுப் படம் வந்திருக்கிறது. அவருடன் போனால் மேலே இருந்து பாக்கலாம். பாலும் பழமும்பாங்களே, என்ன அது, பால்கனி. அங்க தனி ரூம் தருவார்கள். தலைவருல்லா? எப்ப கூட்டிப் போவாரோ தெரியவில்லை.
கூர்க்காவுக்கு லீவு தந்து அனுப்பி வைத்தார் புருசோத்தமன். ஓரளவு இருட்டு சேர்ந்ததும் காரை எடுத்தார். அவரே ஓட்டுவார். தெக்குத் தெரு தேர்முட்டி பக்கம் காத்திருந்தாள் அன்னக்கிளி. அந்நேரம் வரை குளிக்காதவள் அவசர அவசரமாய்க் குளித்திருந்தாள். உடல்தினவுடன் நல்ல ஸ்ருதியேற்றிய வீணையின் முறுக்கத்துடன் இருந்தாப் போலிருந்தது. குனிந்து அவள் உள்ளே ஏறியபோது அக்குள் பக்கமிருது பௌடர் வாசம் அடித்தது. ஞாயிறு இரவு. ஊரே டி.வியில் படம் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது வீடுகளில் இருந்து பெரிதாய்ச் சிரிப்புச் சத்தம் கேட்டது. கவுண்டமணி வந்தாலே கிராமமே சிரித்துக் கொந்தளிக்கிறது. “எங்க போறம்?” என்றாள் அன்னக்கிளி ஓர் உல்லாசக் கிறக்கத்துடன். முன்சீட்டில் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். “சொல்றேண்டி என் தங்கக்கிளி” என்றார் அவள் கன்னத்தை வருடி. கன்னத்தில் கொசு மருந்து அடிச்சாப் போல பௌடர். மனம் தன்னைப்போல அவளையும் அவள் தங்கச்சியையும் ஒருசேரப் பார்த்தது. ஹ்ம்ஞ் என முனகினார். தண்ணி போட்டிருந்தார். உற்சாகத்துக்குக் குறைவில்லை. பையில் மஸ்லின் சட்டைக்குள் ஐந்நூறு புதுத்தாள்கள் தெரிந்தன. ரோசுக்கலரில்ஞ் ரெண்டாயிரம்ஞ் இல்லை.
“புதுசா நம்ம ரூம்புக்கு ஏ/சி வந்திருக்குடி. அனுபவிக்கண்டாமா?” என்றபடி திறந்துகிடந்த ஒன்றிய வாயிலைத் தாண்டிப்போய்க் காரை நிறுத்தினார். ஜிலோன்னு கிடந்தது வளாகம். சிள் வண்டுகள் இரைச்சல் காதைக் குடைவதாய் இருந்தது. “யாராவது இருக்கப் போறாக” என்றபடியே இறங்கினாள் அவள். “அதெல்லா எனக்குத் தெரியாதா?” என்று அவளைத் தொட கையை நீட்டியவர் தள்ளாடினார். தங்கச்சி. ஹ்ரும்ஞ்
‘ப’ வடிவ பின் அறைகளில் முதலாவது தலைவர் அறை. அவர் தள்ளாடியபடியே முன்னால் போக பின்னால் அவள் போனாள். கும்மிருட்டாய்க் கிடந்தது. வெளிச்சம் தான் சங்கடம். இருட்டு தேவலை. குனிந்து தன்னிடமுள்ள சாவிகளால் மாற்றி மாற்றிப் போட்டு பூட்டை நோண்டினார். “அடங் ஙொம்மாள, அவசரத்ல அண்டால கை போவாதும்பாங்க. சரியாத்தான் இருக்கு” என்று திரும்பி அவளிடம் சாவியைத் தந்தார். அவள் பூட்டைத் திறக்க எனக் குனிந்தபோது பெரும் கிளர்ச்சியாய் இருந்தது.
உர்ர் என்ற சிறு சப்தத்துடன் குளிர்சாதனம் ஓட ஆரம்பித்தது. சேர். டேபிள். சன்னல் திரைச்சீலை. அவர் அமரும் நாற்காலிக்குப் பன்பக்கம் கட்சித் தலைவர் படமும், மகாத்மா காந்தி படமும். ஓரமாய் மேலும் நபர்கள் அமர சோபா. அங்கே புருசோத்தமன் கட்சித தலைவருக்குப் பொன்னாடை போர்த்துவதாக ஒரு படம். அவளை சோபாவுக்குத் தள்ளிப்போனார். ஏக்கமாய் “எத்தனை நாளாச்சில்ல?” என்றார். “நீங்க தான் கண்டுக்கறதே இல்ல?” என சிணுங்கினாள். அவளை மல்லாத்தி மலர்த்தினார். மேலே பார்த்தபடி கிடந்தாள் அவள். குளிர் சாதனம் ரகசியம் போல உருமிக் கொண்டிருந்தது. வெட்டிப்போட்ட வேப்ப மரத் துண்டகளாய்க் கால்கள். அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அந்தக் குளிர் சாதனத் திண்டின் மேலே யிருந்து ஒரு நீண்ட குச்சிஞ் எட்டிப் பார்க்கிறாப் போலஞ்ஞ்என்ன அது? லேசாய் கவட்டை போன்ற நாக்கு கூடஞ் இருட்டில் அத்தனைக்குத் தெரியுமா? பிரமையோஞ்
“பப்.. பாம்பு” என அலறி அவரைத் தள்ளினாள் அன்னக்கிளி.
சிவரஞ்சினியிடம் ‘யாராண்டையும் சொல்லாதே’ என்று சொன்ன விசயம். அவளும் ஒவ்வொருவரிடமும், ‘யாராண்டயும் சொல்லாதே’ என்று சொல்லியே சேதி பரவி விட்டது. அவ எந்தப் பாம்பப் பாத்தாளோ, என ஊரில் கிண்டல் தாள முடியவில்லை.
இனியும் தாமதிக்க முடியாது, என்று பட்டது புருசோத்தமனுக்கு. புல்லுக்குப் பூச்சி வந்து பூச்சிக்குத் தவளை வந்து இப்போது தவளைக்குப் பாம்பு அடைய ஆரம்பித்து விட்டது- உடனே மறுநாளே பாம்பு பிடிக்கிற ஆட்களை வரச் சொல்லி ஏற்பாடுகள் விறுவிறுத்தன. புதரில் இருந்து பாம்பு பிடித்தார்களோ, அல்லது கொண்டுவந்து பாம்புகளை விட்டு விட்டு பிடித்ததாகக் கணக்கு காட்டினார்களோ தெரியவில்லை. நாலு பாம்புகள் பிடிபட்டன. மூணு சாரை. ஒண்ணு நல்ல பாம்பு. ஒரு ஞாயிறு பூராவும் வேலை. பாம்புக்கு இவ்வளவு என்று ரேட். ரோஸ் தாள்கள் கை மாறின. புல்லைச் செத்திப் போட சுத்தப்படுத்த என நாலு பேர்.
“முதல்லியே செஞ்சிருந்தால் சின்னச் செலவு. இப்ப அதையே வெட்டித்தனமா நாலு மடங்கு துட்டு செலவழிச்சிச் செய்யறாரு இவரு” என்று அதையும் எள்ளி நகையாடினார் சத்தியமூர்த்தி. ஆனால் பெரிய செலவு என்பது தான் புருசோத்தமனுக்கு வசதி. அவர் காட்டுவதுதான் கணக்கு. புல் முளைக்காத இடங்களையும் சுத்தப் படுத்தியதாக கணக்கு எழுதலாம் அவர். எட்டு பாம்புகள் பிடிபட்டிருந்தன அவர் கணக்கில். அத்தோடு, புல் இருந்த பகுதிகளில் சிமென்ட் தரையும் போடப்பட்டது.
அன்னக்கிளி சிவரஞ்சனியிடம் வந்து “இஞ்சி யிருக்கா இஞ்சி?” என்று கேட்டாள். அவள் கைவிரலில் புது மோதிரம்.

Comments

Popular posts from this blog